Saturday, July 30, 2005

பெண்ணி(நே)யம் - சிறுகதை


பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரமாக வந்தது. வழக்கம் போல் அப்பா அம்மாவை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார். பெண்களுக்காக வெளிவரும் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டே அம்மா, “நானும் மனசுலே ஒரு டாபிக் வைச்சுருக்கேன். வாசகியர் உலகம்ங்கிற பகுதிக்கு அனுப்பலாம்ன்னு நினைச்சுண்டு இருக்...” அம்மா இன்னும் முடிக்கக் கூட இல்லை. அதற்குள் ஒரு இளக்காரச் சிரிப்பு சிரித்த அப்பா, “ஆமாமா.. இப்பெல்லாம் சிவசங்கரி, அனுராதா ரமணனேல்லாம் எழுதறது கம்மியாடுத்தில்லையா? கண்டிப்பா ஜானகி வரதராஜன் எழுதத்தான் வேணும்.” என்றார். அம்மாவின் முகம் லேசாக சிவந்து, சிறுத்தது. அதைத் தவிர வேறு எந்தவித பேச்சோ மாறுதலோ இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்த காட்சிதான், கேட்ட சொற்கள்தான். சந்தர்பங்கள் மட்டுமே வேறு.

நான் இவர்களின் மூத்தப் பெண் திவ்யா, வயது இருபத்தாறு. மூன்று வார விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து வந்து நான்கு நாட்கள் ஓடி விட்டன. “சே! இந்த அம்மா எவ்வளவு பெரிய பத்தாம் பசலி! இத்தனை வருஷமா எத்தனை அவமானங்களைப் பொறுத்துண்டு இருந்திருக்கா!”

அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வயது வித்தியாசம் கிட்டதட்ட பத்து வருடங்கள். அம்மா இயற்கையாகவே சிரித்த முகமும் நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளும் உடையவள். அப்பாவோ அதற்கு நேர் எதிர். அவர் ஒரு ஸினிக். எல்லாவற்றிலும் ஒரு குதர்க்கம், ஒரு குற்றம். எப்படித்தான் முடிச்சு போடுகிறாறோ கடவுள்? அம்மாவின் மென்மையான ரசனைகள், சக மனிதர்களில் மேல் உள்ள சிநேகம், ஒளிவு மறைவில்லாத பாசம், எளிமையான நம்பிக்கைகள் அனைத்தையும் சில நொடிகளில் சிதைத்து விடுவார் அப்பா. சின்ன வயதில் அப்பா முன் கோபக்கார், குத்தலாக பேசக் கூடியவர் என்பதைத் தவிர அவரின் வார்த்தைகளின் தீவிரத்தைப் பெரியதாகப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை.

எனக்கு சுமார் பத்து வயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம். பக்கத்து வீட்டில் இருந்த பாட்டி அம்மாவிடம் மிக அன்பாக இருப்பாள். அம்மாவும் அந்த பாட்டியிடம் பாசத்தோடு பழகுவாள். ஒரு நாள் வீட்டிற்கு வந்த அந்த பாட்டி அப்பாவிடம் “ஜானகி என்னோட பொண்ணு மாதிரி,” என்று நெகிழ்ச்சியோடுச் சொன்னாள். அதற்கு அப்பா, “ஆமா.. அதனாலே நாலு வெள்ளிப் பாத்திரம் தரப் போறேளா இல்லே உங்க ரெட்டை வடம் சங்கிலியத் தரப் போறேளா?” என்று சுள்ளென்று பதிலளித்தார். அந்தப் பாட்டியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி இன்னும் கண் முன்னே நிற்கிறது.

அம்மா நன்றாகப் பாடுவாள். னால் அதை ஊக்குவிக்க அப்பா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பழக்கம் விட்டுப் போகாமல் இருக்க பாட்டு கற்றுக் கொடுக்கலாம் என்று சில குழந்தைகளுக்கு க்ளாஸ் எடுத்தாள் அம்மா. வந்தவர்களிடம் தன் எரிச்சலை மறைக்க அப்பா துளிக் கூட மெனக்கெடமாட்டார். அப்பொழுது தான் “ஜானகி, காப்பி!” என்று அலறுவார் அல்லது “இந்த சட்டையை இன்னுமா இஸ்திரி பண்ணலை?” என்று ஒரு சட்டையை முகத்திற்கு நேரே நீட்டுவார். சத்தமாக டி.வி பார்ப்பார். இத்தனையும் மீறி அம்மாவிடம் பாட்டு கற்றுக்கொள்ளும் தைரியம் யாருக்கும் வரவில்லை.

யாருடனாவது சிறிது நேரம் வாசலில் பேசிக் கொண்டிருந்து விட்டால் போதும். கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பார். உள்ளே வந்தவுடன் “இவ்வளவு நேரம் இத்தனை சுவாரஸ்யமா என்ன பேச்சு? உனக்கேன்ன பெரிய சொற்பொழிவாளர்ன்னு நெனப்பா? கைய ஆட்டறே, கண்ணை உருட்டறே.. பார்க்க சகிக்கலை”” என்பார்.

அம்மாவின் பாங்கான வேலைகளை அதிசயமாகத்தான் பாராட்டுவார். ஏதாவது சரியாக இல்லையென்றால் பலமுறை அதை சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்.

இப்படி நடந்த பல உணர்வுக் கொலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நானும் என் தம்பியும் மெளன சாட்சிகள். இவை அனைத்தையும் ஒரு வித கையாலாகாதனத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். எங்களிடம் சாதாரணமாகத்தான் பழகுவார். நாங்கள் நன்றாகப் படிப்பதில் பெருமை. பெரியதாக எங்கள் விஷயத்தில் தலையிட மாட்டார். அதுவும் அம்மாவின் பொறுப்பு தான். அம்மா எங்கள் இருவரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டாள். தம்பி தினேஷ் சிங்கப்பூரில் நன்யாங் பல்கலைகழத்தில் எம்.பி.ஏ படிக்கிறான். நான் சென்னையில் படிப்பை முடித்த உடன் அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ப் விஸ்கான்ஸினில் எம். எஸ் படிக்க சென்றேன்.

இயற்கையாகவே எனக்கு சில ஆன்டி-எஸ்டாப்ளிஷ்மெண்ட் கொள்கைகள் உண்டு. எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் தன் வாழ்க்கையை நடத்தும் அம்மாவைப் பார்த்து ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்க அனுபவம், அங்கு நான் சந்தித்த முற்போக்கான எண்ணங்கள் உடைய பெண்கள், என்னுடைய பொருளாதார சுதந்திரம் அனைத்தும் என் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியிருந்தன.

முக்கியமாக என் தோழிகள் இவோன் மற்றும் எஸ்தர் எனக்கு வழிகாட்டிகள். ஆப்ரிக்காவின் கானா நாட்டில் பிறந்த இவோன் மேல் படிப்பிற்காக அமெரிக்கா வந்தாள். ஷிகாகோ பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு முடித்து விட்டு அங்கே ஒரு பிரபல வக்கீல் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் நிறைந்த நிறுவனம். அதுவும் ஒரு கறுப்பினப் பெண்ணை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள அங்கு பல பேர் தயாராக இல்லை. இவோன் ஒரு சர்வைவர். கானாவின் பொறுளாதார அவலத்தை மீறி, தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவள். அதற்காக அவள் சில குணங்களை கவனமாக வளர்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தாலே ‘என்னிடம் அனாவசியமாக வம்புக்கு வர வேண்டாம்’ என்று சொல்வது போல் இருக்கும். ஒரு அலட்சிய பார்வை, நடை. பேச்சும் உச்ச ஸ்தாயில் இருக்கும். ‘எனக்கு இங்கிருக்க எல்லா உரிமையும் உள்ளது’ என்பதை நிலைநாட்டும் இணக்கமற்ற போக்கு. அதனால் அவளைப் பிடிக்காதவர்கள் கூட அவளிடம் ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பழகினார்கள். அதைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளைப் போல் இருப்பது தான் தன்னம்பிக்கைக்கு வழி என்று முடிவு செய்தேன்.

எஸ்தர் நெதர்லாண்ட்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். என்னுடன் படிக்கும் பொழுதே கூட படித்த விக்டரை திருமணம் செய்து கொண்டாள். ஒரு முறை அவர்களோடு சாப்பிடச் சென்ற பொழுது இருவரும் தனித் தனியே பில்லை செட்டில் செய்ததைப் பார்த்து ச்சர்யப்பட்டேன். அதற்கு அவள், “ஆமாம். எங்கள் டாலர் கணக்கு வழக்கு தனித் தனி தான். ஒரு சினிமா பார்த்தா கூட அவரவர் டிக்கேட் அவரவர் தான் வாங்க வேண்டும். நாளைக்கே நாங்க பிரியணும்னா சுலபமா போயிடும் பாரு. என் பணத்தை நான் எதுக்கு அனாவசியமா விக்டருக்காக செலவழிக்கணும்?” என்றாள். என்ன ஒரு யதார்த்தமான அணுகுமுறை என்று வியந்தேன்.

படிப்பு முடிந்த உடன் பாஸ்டனில் வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷ் ஜாதகம் என்னுடையதுடன் பொறுந்துவதாக அம்மா போனில் சொல்லி காஷை சந்திக்கச் சொன்னாள். இருவரும் பேசிப் பார்த்ததில் பிடித்துப் போய்விட்டது. ஆறே மாதத்தில் இந்தியாவில் திருமணம் நன்றாக நடந்தது. என் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து அதே போல் காரியங்களை நிறைவேற்றினேன். ஆகாஷ் ஒப்புக் கொள்ளாத பொழுது அல்லது மாற்று யோசனை தெரிவித்த பொழுதேல்லாம் என் வழிக்கு எப்படியோ கொண்டு வந்தேன். பாதி நேரம் சண்டை போட்டுத்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நான் அம்மா மாதிரி பழமைவாதியா என்ன? சின்ன விஷயங்களில் கூட என் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. திருமணமான உடனேயே விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் பிறகு இந்த ஆண்கள் தலை மேல் ஏறி உட்கார்ந்து விடுவார்கள்.

ஒரே வருடத்தில் எங்கள் ஜாக்கிரதை உணர்வை மீறி நான் கருவுற்றேன். புதிய வேலையில் நான் சேர்ந்து ஆறு மாதமங்கள் கூட ஆகவில்லை. அதனால் பிடிவாதமாக அதை கலைக்க முடிவு செய்தேன். இதில் ஆகாஷ¤க்கும் விருப்பம் இல்லை. அம்மாவிற்கும் உடன்பாடில்லை. என் முடிவை மாற்ற முயற்சி செய்ய அம்மா கூட ஒரு இரண்டு மாதம் பாஸ்டன் வந்து தங்கி விட்டுப் போனாள். னால் இறுதியில் என் பிடிவாதம் தான் வென்றது.

இப்பொழுது பாஸ்டனில் வாழ்க்கை தொடங்கி மூன்று வருடங்கள் ஓடி விட்டன. திருமணதிற்குப் பிறகு முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்கிறேன். திரும்பி போவதற்குள் அப்பாவைச் சூடாக நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கி கொள்கிற மாதிரி கேட்காமல் போவதில்லை என்று முடிவு செய்தேன். இந்த அம்மாவும் தான் சுத்த மோசம். அவள் என்ன உலகம் தெரியாதவளா? இணையத்தில் பல தளங்களுக்கு செல்வது, எனக்கு மின் அஞ்சல் அனுப்புவது போன்ற விஷயங்களை எவ்வளவு சுலபத்தில் கற்றுக் கொண்டு விட்டாள். (இது அப்பாவின் புதிய எரிச்சல் என்பது வேற விஷயம்!) அம்மாவிடம் முதலில் பேச வேண்டும். என்னை உருவாக்கிய பெண்களைப் பற்றி எல்லாம் சொல்லி அவள் இந்த நரகத்திலிருந்து மீள வழி காட்டணும்.

அம்மாவிடம் பேசும் வாய்ப்பு அன்று இரவே கிடைத்தது. அப்பா ஒரு நண்பரின் பெண்ணின் திருமணத்திற்கு போய் விட்டார். “நீ இன்னும் எத்தனை நாள் அடிமையா இருக்கப் போறே?” என்று ஆரம்பித்து படபட வென்று சொல்ல நினைத்த அத்தனையும் சொல்லி “அடுத்த தடவை அப்பா உன்னை எதாவது சொன்னா, நன்னா எதிர்த்து நில்லு. நானும் தினேஷ¤ம் இருக்கோம் உன்னை சப்போர்ட் பண்ண” என்று முடித்தேன்.

அம்மா புன்சிரிப்பு மாறாமல் எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட்டு சொன்னாள் “இது தான் விஷயமா? திவ்யா, எஸ்தரும், இவோனும் அனுதாபத்திற்கு உடையவர்களே தவிர பின்பற்ற வேண்டியவர்கள் இல்லை. பிரிவுக்கு தினம் தயார் பண்ணிண்டே கணவனோட வாழறது ஒரு வாழ்க்கையா? அந்த அளவுக்கு தங்கள் உறவு மேலே நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு திருமணம் செஞ்சுக்கணும்? அதற்கு பதிலா அவர்கள் ஒரு பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் போட்டுண்டு வாழலாமே. இவோனும் பாவம் திவ்யா. வேறெந்த உணர்ச்சிகளையும் காட்ட முடியாமல் எப்பொழுதும் உலகத்தோடு ‘சண்டைக்கு தயார்’ என்ற தோற்றத்தோடு வாழணும்னா அது எவ்வளவு பெரிய சுமை? அவளுக்கு உண்மையான தோழிகள் எவ்வளவு பேர் இருக்கா சொல்லு? பெண்ணியம்ங்கிறது ஒரு நல்ல உடை மாதிரி. அதை கம்பீரமா போட்டுண்டா பார்க்கிறவங்களுக்கு தன்னாலே மரியாதை வரும். அதை விட்டுட்டு உறையிலேர்ந்து எடுத்த கத்தி மாதிரி கையிலேயே வைச்சுண்டு அலைஞ்சா பயம் தான் வருமே தவிர மரியாதை இல்லை” என்றாள்.

யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான். அதனால் “சரி! அவங்களைப் பத்தி இப்ப என்ன? உன் வாழ்க்கைக்கு வா” என்றேன்.

“அப்பா ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தார். படிப்பு ஜாஸ்தி இல்லை. சின்ன வயசிலேயே தன் அப்பாவை இழந்தவர். எப்படியோ கவர்மெண்ட் வேலையில் சேர்ந்துட்டார். அவருக்கு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைச்சல். நான் ஒரே பொண்ணு. எங்கப்பாவுக்கு ஜாதகத்துலே ரொம்ப நம்பிக்கை. அப்பாவோட ஜாதகத்தோட என்னோடது அமோகமா சேர்ந்து போச்சுங்கிற ஒரே காரணத்துக்காக வேற எதை பத்தியும் கவலைப்படாம எங்க கல்யாணத்தை நடத்திட்டார். எனக்கு ஓரளவு சொத்தும் வைச்சுட்டு போய்ட்டார். எங்க கல்யாணம் நடந்த அன்னிக்கே எவ்வளவோ பேரு ‘இந்த அசட்டு வரதுவுக்கு என்ன அதிர்ஷ்டம் பாத்தியா’ன்னு எங்க காதுபடவே பேசிக்கிட்டாங்க. அப்பாவுக்கும் நம்பவே முடியலை. ‘இது எந்த நிமிஷமும் கலையப் போற ஒரு கனவு’ன்னு நினைச்சுண்டு தான் வாழ்க்கையைத் துவக்கினார். ஆனால் நான் அவருக்கு எல்லா மரியாதையும் தந்தேன். நான் ஏதாவது ஒரு விஷயத்துலே பெரிசா முன்னுக்கு வந்து அவரை விட்டுட்டுப் போயிடுவேன் இல்லை அவரோட அதிகாரத்தை எதிர்த்துடுவேன்னு அவருக்கு எப்பவும் ஒரு பயம், கவலை . அதீதமான அன்பு காரணமாத்தான் இந்த பயம். அந்த அன்பை வெளிப்படுத்த முடியாம ஒரு பொசசிவ்னெஸ் குறுக்கே வந்துடறது. நான் அவரைச் சார்ந்திருக்கும் பொழுது அன்பா இருப்பார். உதாரணமா எனக்கு ஏதாவது உடம்பு படுத்தினா சிரத்தையா கவனிச்சுப்பார். இதை நான் நன்னா புரிஞ்சுண்டேன். அதனாலே அதை நான் பெரிசுபடுத்தலை. ஆனால் சில விஷயங்கள்லே நான் விட்டுக் கொடுக்கலை. உதாரணமா உங்க ரெண்டு பேரையும் வளர்க்கிறதுலே நான் சொன்னது தான் சட்டம்!” என்று நிறுத்தினாள்.

“அதுக்காக எவ்வளவு நாள் பாக்கி விஷயங்கள்லே இப்படி அவமானப்படப்போறே?”

“திவ்யா, நீ ஆகாஷோட வார்த்தைக்கு வார்த்தை வாதாடி உன் சுதந்திரத்தை நிலை நாட்டறதா நினைக்கறே. இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கின கருவை நீ மட்டும் வேண்டாம் முடிவு பண்ணினது நியாயமா? மிரட்டலும், பிடிவாதமும் தான் பெண் சுதந்திரத்துக்கு வழியா திவ்யா? கணவன், மனைவி ஒருத்தரை ஒருத்தர் மதிக்கிறது தான் சுதந்திரமே தவிர ஒருத்தரை பார்த்து பயப்படறது இல்லை. நீ சொல்ற மாதிரி அப்பாவை அவமானப்படுத்தி, சூடா நாலு வார்த்தை கேட்க எனக்கு ரொம்ப நாழி ஆகாது. என்னாலே அவமானங்களை தாங்கிக்க முடியும். ஆனால் பதிலுக்கு நான் அவமானப்படுத்தினா அவர் உடைஞ்சு போயிடுவார். அதைச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. உலகம் தெரியாத பொழுது கணவர்னா இப்படித்தானோன்னு பயத்திலே பேசாம இருந்தேன். உலகம் தெரிஞ்ச உடனே “ஐயோ பாவம்! என்னைத் தவிர வேற யார்கிட்டேயும் இவர் ஜம்பம் சாயாது”ன்னு பரிதாபத்திலே பேசாம இருக்கேன். என் சுதந்திரத்தை நான் எப்படி உபயோகப்படுத்தறேன் தெரியுமா? அவருக்கு தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்த நான் அனுமதி தரேன், இடம் தரேன். என் முகத்திலே இருக்கிற புன்சிரிப்பை சுலபமா யாராலேயும் துடைக்க முடியாது. னால் அவரைச் சுலபமா ஒரு மூலையிலே உட்கார வைச்சுடலாம். எங்க தாம்பத்தியத்லே நான் தாண்டி பலசாலி. அவரில்லை. இப்பச் சொல்லு, நீ பெண்ணியவாதியா, நானா?

சிறிது நேரம் பேச்சற்று கழிந்தது. ‘அம்மா தான் என்னைவிட சக்தி வாய்ந்தவளோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

(கல்கி - 19/9/2004)

Thursday, July 28, 2005

அனைவருக்கும் நன்றி!!!

Dhanya with her mom, brother and a sea lion at Singapore Zoo

Posted by Picasaஅம்மாவின் இணைய நண்பர்கள்,

Uncles/மாமாஸ்: அல்வாசிட்டி விஜய், வீ.எம், சுதர்சன் கோபால், முகமூடி, சந்தோஷ் குரு, அல்வாசிட்டி சம்மி, ரவி ஸ்ரீநிவாஸ், ராம்கி, அன்பு, கோபி மாமா மற்றும் அவரின் மொத்த குடும்பம் எல்லாரும் எனக்கு இன்னிக்கு வாழ்த்து சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

Aunties/மாமிஸ்: துளசி, ஷ்ரேயா, மதுமிதா, அருணா, ஜெயந்தி, எல்லா மாமிக்கும், முக்கியமா துளசி மாமிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களாலே என் பிறந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாயிடுச்சு. நான் இன்னும் பெரியவள் ஆக ஆக உங்க எல்லாரோடைய நட்பும் வளரணும்னு சாமி கிட்டே வேண்டிக்கறேன்.

மிக்க அன்புடன்,
தன்யா

Sunday, July 24, 2005

Born into brothels"அந்தப் படமா? ஒரே depressingஆக இருக்கும். நான் வரலே" என்று பல நண்பர்கள் ஒதுங்கிவிட்டார்கள். குணாவில் சில காட்சிகள் பார்த்திருக்கிறோம். மாகாநதியில் பார்த்ததும், கமலின் ஓலமும் எவ்வளவு நாட்கள் மனக்கண்ணின் முன் தோன்றியிருக்கும். ஆனால் இது நிஜம்.

நான் இதை எழுதும் பொழுதும், நீங்கள் இதை படிக்கும் பொழுதும் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் தினம் தினம் நடக்கும் நிஜம். Born into brothels என்ற விவரணப்படத்தை எதிர்பார்த்தபடியே அழுதுகொண்டே பார்த்து முடித்தேன்.

நம்மால் இரண்டு நாட்கள் கூட தங்க முடியாத ஒரு இடத்தில் Zana Briski என்ற பெண் மாதக் கணக்கில் தங்கியிருக்கிறார். அது தான் கல்கத்தாவின் red light பகுதி. அங்குள்ள பெண்களின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள வந்தவரை அங்குள்ள குழந்தைகள் உடனடியாக தங்களின் நண்பராக்கிக் கொள்கிறார்கள். "The children were everywhere", என்று சொல்லும் Zana இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்று முடிவேடுக்கிறார். அவர்களுக்கு photography சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஆளுக்கோரு காமெரா மூலம் இந்த எட்டு குழந்தைகளும் தங்கள் உலகைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்ச நேரம் தங்கள் உலகத்தின் அவலத்திலிருந்து தப்பிக்கிறார்கள்.

முழு படத்தை பற்றி நான் சொல்லப் போவதில்லை. உங்களில் பலர் (எல்லோரும்) இதை பார்க்க வேண்டும். என்னை மிகவும் பாதித்த சில காட்சிகளை மட்டும் சொல்கிறேன்:

ஒரு குழந்தை தன் வாழ்க்கையை பற்றி சொல்கிறாள்: "எனக்கு பெரிய பணக்காரி ஆக வேண்டுமென்றெல்லாம் ஆசை கிடையாது. ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கலாம். வாழ்க்கை என்றால் சோகமானது, கஷ்டங்கள் நிறைந்தது என்பதை ஒப்புக் கொண்டால் போதும்." என்ன ஒரு maturity பார்த்தீர்களா? வாழ்க்கை பற்றி வேறு யார் சொன்னாலும் உறைக்காத அர்த்தம் இந்தக் குழந்தை சொல்லும் பொழுது உறைக்கிறது.

இன்னோரு பெண் குழந்தைக்கு தாய் இறந்துவிட்டாள். தன் மாமி வீட்டில் இருக்கிறாள். மாமி அவளை சீக்கிரம் 'தொழிலுக்கு' அனுப்ப போகிறாள். அந்தக் குழந்தையிடம் கேட்கிறார்கள் ''உனக்கு இதற்கு ஏதாவது தீர்வு தெரிகிறதா?' என்று. அந்தக் குழந்தை ஒரு வினாடி யோசித்துவிட்டு 'இல்லை' என்று சோகமாக தலையை ஆட்டுகிறாள். கண்ணீரை அடக்க முடியாமல் செய்த காட்சி.

அவிஜித் என்ற பையன் தன் தந்தையைப் பற்றி சொல்கிறான், "அவர் நல்ல பலசாலியாக இருந்தார். சந்தையில் இரண்டு பேரை கூட ஒரே சமயத்தில் அடித்திருக்கிறார் (இதை சொல்லும் பொழுதும் ஒரு லேசான சிரிப்பும், பெருமையும் முகத்தில்) ஆனா எங்கம்மா ஓடிப் போனதுக்கு அப்புறம் இப்போ இரண்டு வருடமா போதைக்கு அடிமையாயிட்டார். யாரும் அவரை ஒரு பொருட்டா மதிக்கிறதில்லை. அப்படியும் நான் அவரை கொஞ்சமாவது நேசிக்க முயற்சி பண்ணறேன்."

எந்த ஒரு சமூகத்திலும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள், பொக்கிஷம் போல் காக்கப்பட வேண்டியவர்கள். ஒரு அரை மணி நேரம் ஒரு குழந்தையோடு நீங்கள் விளையாடினால் போதும் இதைப் புரிந்து கொள்ள. நீங்கள் பெற்றோர்கள் என்றால் இதை நான் புரிய வைக்க கஷ்டப்படவே வேண்டாம். அமெரிக்காவிலும், இங்க்லாண்டிலும் ஒரு குழந்தை காணாமல் போனாலோ, வன்முறை தாக்குதலுக்கு ஆளானாலோ public மற்றும் காவல் துறையினரின் responseஐ படித்திருக்கிறேன். அவர்களின் outrageஐ டி.வியில் பார்த்திருக்கிறேன்.

நம் நாட்டில் தினம் தினம் இப்படி குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். Their eyes are full of promise and hope ஆனால் அதோடு நம்மால் துடைக்க முடியாத சோகம்.

'நம் நாட்டு அரசியல்வாதிகள் மனிதர்கள் தானா? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நாமேல்லாம் இப்படி ஒரு கையாலாகாத வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?' வெறும் கேள்விகளோடு வீடு திரும்பினேன்.

மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.kids-with-cameras.org/home/

Thursday, July 21, 2005

~சிஐந்தறிவு உள்ள நான் கூட
பசித்தால் தான் கொல்வேன் என்பது
ஆறறிவு உள்ள உனக்கு தெரியுமா?
இரு மனம் நேசித்ததால்
இந்த மண்ணில் மலர்ந்தேன்
இரு தேசம் வெறுத்ததால்
உன் மடியில் விழுந்தேன்
ஒற்றுமையாக வந்தோம்
ஒற்றுமையை குலைத்தோம்
ஒற்றுமையாக திரும்புவோம்

மிச்ச இரண்டுக்கும் இந்த மாதிரி வசனங்கள் கூட தோன்றவில்லை

(முதல் தடவை போட்டதை blogger தின்று விட்டது! அதனால் தான் ரிப்பீட்டூ!!)

Monday, July 18, 2005

நான் இறந்தால் என்ன பேசிக் கொள்வார்கள்?

சமீபத்தில் அல்வாசிட்டி விஜய் எழுதிய பதிவு நான் படிச்ச ஒரு தகவலை நினைவூட்டியது. Steven Coveyயின் 'Seven habits of highly effective people' புத்தகத்தை நீங்க படிச்சிருக்கலாம் இல்லே அந்த workshopல் பங்கேற்றிருக்கலாம். அதிலே நான் ரொம்ப முக்கியமானதா நினைக்கிற ஒரு exercise: Write your own eulogy. அதாவது நீங்க இறந்த பிறகு இரங்கல் கூட்டத்துக்கு வரவங்க உங்களைப் பத்தி என்ன பேசுவாங்க, என்ன பேசணும்ன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு எழுதணும் (கொஞ்சம் morbid விஷயம் தான். ஆனா நெருப்புன்னா வாய் வெந்துடாதே!) இந்தச் சம்பவம் நடந்த பிறகு நீங்க அங்கே போற மாதிரி கற்பனை பண்ணிப் பாருங்க. உங்க குடும்பத்தார் என்ன சொல்வாங்க? உங்க கூட வேலை செய்யறவங்களுக்கு உங்களைப் பத்தி நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? நண்பர்கள்? தெருவாசிகள்?

எல்லாரும் என்ன பேசுவாங்கன்னு எழுதினா அது இன்னிக்கு நாம எப்படிபட்டவரா இருக்கோம்ன்னு புரிய வைக்கும். என்ன பேசணும்ன்னு நாம எதிர்பார்க்கறோமோ அது நாம வாழ்க்கையில எதை செய்ய ரொம்ப விரும்பறோம் அப்படிங்கிறதை தெளிவு படுத்தும். இதை Covey ஒரு time management techniqueஆ சொல்லியிருக்கிறார். அதாவது short term விஷயங்களை மட்டுமே யோசிக்கிறதைவிட long termக்கு முக்கியமான விஷயங்களை செய்யுங்கன்னு சொல்றதுக்கு. இன்னோரு காரணமும் இருக்கு. 'எனக்கு வாழ்க்கையிலே என்ன செய்யணும்னே தெரியலை. எதுவுமே பிடிக்கலை,' அப்படின்னு சொல்றவங்களுக்கு ஒரு தெளிவு வரும்.

உதாரணமாக 'இவர் எல்லா ப்ராஜெக்டையும் குறித்த நேரத்தில் முடிச்சுடுவார். எத்தனை மணியானாலும் முடிச்சுட்டு தான் வீட்டுக்கு போவார்.' அல்லது 'எங்கப்பா தினம் சாயங்காலம் என் கூட கொஞ்ச நேரமாவது விளையாடிட்டு தான் தூங்குவார்.'

என்னை பொறுத்த வரை இது எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு exercise. ஒரு காலகட்டத்தில் நான் செஞ்சுகிட்டிருந்த சில உபயோகமற்ற விஷயங்களை விட்டு வெளியே வர உதவியது. என் வாழ்க்கையிலே அர்த்தமுள்ளவை எவைன்னு இனம் பிரிக்க பயன்பட்ட கருவி.

என்னை சுத்தி இருக்கிற சிலரின் eulogiesஐ நினைச்சு பார்க்கறேன்:

"அவள் ஒரு sale விடமாட்டா. அவ வாங்கி வச்சிருக்கிற சாமான் எல்லாம் குறைஞ்சபட்சம் 50% offல வாங்கினதுன்னா பார்த்துக்க!"

"வீட்லே இருக்கிற Swarovski collectionலே பல ஆயிரம் ரூபாய்க்கு மேலே!"

"அவ யார் மனசு நோக எதுவும் பேச மாட்டா. எப்பவும் சிரிச்ச முகம் தான். என்ன கஷ்டம் வந்தாலும் அது மாறாது."

"இவர் பதினைந்து வருடங்களா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தெருத் தெருவா போய் நாலு, நாலு செடியா நட்டு இந்த ஊரையே பச்சை பசெல்னு ஆக்கியிருக்கார்'

அதுக்காக எல்லோரும் செய்யற வேலையை விட்டுட்டு பாட்டெழுதவோ, சமூக சேவை பண்ணவோ போக முடியாது. வயத்து பொழப்புன்னு ஒண்ணு இருக்கே! ஏதோ ஓரளவு நாம போற நினைக்கிற பாதையை பார்த்து சில அடிகளாவது எடுத்து வைக்கலாமே.

நீங்களும் எழுதிப் பாருங்களேன் சில eulogies!!

Saturday, July 16, 2005

இந்தியாவிற்காக ஏதாவது செய்ய விருப்பமா?

பல சமயங்களில் என் நண்பர்கள் என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொழுது, "ரம்யா இந்தியாவில் உள்ள சில தொண்டு நிறுவனங்களோடு தொடர்புடையவள். இங்கிருந்து நிதி திரட்டுகிறாள்," என்று சொல்வார்கள். அதற்கு கிடைக்கும் சில standard பதில்கள்:

1. 'அப்படியா. நாங்களும் XYZ charityஐ சப்போர்ட் பண்ணுகிறோம்.'
2. 'எனக்கும் செய்யணும்னு ஆசை தான். ஆனா நாம அனுப்புற பணம் சரியா உபயோகப்படுமா? Will it reach the right hands?"
3. 'எப்படி அனுப்பணும்? இங்கேயிருந்து அனுப்பினா bank charges அது இதுன்னு நிறைய செலவாகுமா?'
4. 'அனுப்பினா அது எப்படி உபயோகப்படுத்தினாங்கன்னு feedback எதாவது கிடைக்குமா?'
5. 'இந்தப் புடவை சுந்தரி சில்க்ஸ்ல தானே வாங்கினீங்க. நான் கூட அங்கே போகாம வரவே மாட்டேன்'


நீங்க முதல் பதில் அல்லது கடைசி பதிலைச் சொல்லும் பிரிவை சேர்தவர்னா இந்தப் பதிவு உங்களுக்கு இல்லை. 2 to 4ன்னா என் அனுபவத்திலே தெரிந்து கொண்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். உபயோகமா இருந்தா சந்தோஷம்.

பணம் அனுப்ப விருப்பமா? இணையம் மூலம் donate செய்யலாம்

www.cry.org and www.giveindia.org. இந்த இரண்டு சைட்கள் மூலம் நான் credit card உபயோகித்து onlineல் donate செய்திருக்கேன். CRY பற்றி நிச்சயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். CRY பற்றி ஒரு தவறான கருத்து உண்டு. 'அது ஒரு பெரிய NGO. நிறைய பணம் வரும். Administration costs அதிகம்,' என்பது தான் அது. போன வருடம் சிங்கைக்கு வந்திருந்த CRYயின் ex-CEO பெர்வின் வர்மாவுடன் இதைப் பற்றி வெளிப்படையாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தெளிவுபடுத்தியது என்னவென்றால்: "CRY ஒரு umbrella organizationஆக செயல்படுகிறது. CRYயின் கீழ் இப்பொழுது கிட்டதட்ட 170 சின்ன charities இருக்கின்றன. அதில் பல mainstreamல் தெரியாதவை. அவர்களால் advertisingக்கு செலவழிக்க முடியாது. ஆனால் மிகவும் முக்கியமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறவர்கள். அவர்களுக்கு நாங்கள் உதவி அளிக்கிறோம். இரண்டாவது நீங்கள் தரும் donationல் ஒரு சிறு பங்கு administration costsக்கு செல்வது உண்மைதான். ஆனால் நாங்கள் சமூக சேவையில் பட்டமும், அனுபவமும் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பதால் எங்களிடம் கொடுக்கும் பணத்திலிருந்து நாங்கள் அதிக value extract செய்கிறோம். எங்களால் திட்டமிட்டு சரியான முறையில் projects execute செய்ய முடிகிறது' என்றார்.

GIVE Foundation பற்றி தெரியாதவர்களுக்கு: GIVE இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு rating agency போல் செயல்படுகிறது. GIVEன் CEO வெங்கட் IIMAயில் படித்தவர். மிகவும் dynamic person. GIVEன் நிர்வாகிகள் நல்ல முறையில் செயல்படும் தொண்டு நிறுவனங்களைப் பற்றி பல தகவல்களை சேகரித்து, சரி பார்த்த பின்பு தான் அவர்களை தங்கள் சைட்டில் list செய்ய அனுமதிக்கிறார்கள். அதனால் நீங்கள் தரும் நிதி சரியான இடத்திற்கு தான் போகிறது என்று நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். GIVEன் இன்னோரு சிறப்பு என்ன தெரியுமா? மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் நீங்கள் கொடுத்த பணம் எப்படி உபயோகிக்கப்பட்டது என்பது பற்றி ஒரு ரிப்போர்ட் (ஃபோட்டோக்களோடு) உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். என்ன கேள்வி இருந்தாலும் வெங்கட்டிற்கு ஒரு மெயில் தட்டி விட்டால் 24 மணி நேரத்தில் பதில் வரும்.

பொருட்கள் அனுப்ப விருப்பமா? இதோ சில தகவல்கள்:

www.goonj.org GOONJ என்ற பெயரில் தில்லியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் என்ன செய்கிறது தெரியுமா? RECYCLING. "இந்தியர்கள் கவனமாகவும், பொறுப்பாகவும் தங்களின் பொருட்களை recycle செய்தால் இல்லாமை என்ற ஒரு விஷயம் இந்தியாவில் இல்லாமல் போகும்" என்கிறார் கூஞ்ச்சின் தலைவர் அன்ஷு குப்தா. இவர் பெரிய நகரங்களிலிருந்து பழைய துணிமணி, பாத்திரங்கள், காலணிகள் போன்றவற்றை சேகரித்து இந்தியா முழுவதும் இல்லாதவர்களுக்கு விநியோகம் செய்கிறார். இவரின் தற்போதைய ப்ராஜெக்ட்டின் பெயர்: "School to School". நகரங்களில் இருக்கும் பள்ளிகளின் உள்ள மாணவர்களிடத்திலிருந்து பழைய சீருடைகள், பை, ஷூ, புத்தகங்கள் போன்ற பொருட்களை வருட இறுதியில் சேகரித்து கிராமங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு விநியோகிக்கிறார்.

நீங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியராக இருந்தால் நீங்கள் செல்லும் ஊரில் உள்ள சில நல்ல நிறுவனங்களுக்கு தரலாம். கூஞ்ச்சின் சிறப்பு என்னவேன்றால் யாருக்கு எது உபயோகப்படும் என்று பார்த்து தருவது மற்றும் மிக முக்கியமான சமயங்களில் உதவி அளிப்பது (உதாரணமாக வடக்கே குளிர் காலங்களில் ரோட்டோரவாசிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த சமயத்தில் கூஞ்ச் அவர்களுக்கு துணிகள் விநியோகம் செய்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளது).

ஷாப்பிங் செய்ய விருப்பமா? இதோ தொண்டு நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள்:

www.craftsbridge.com , http://www.cry.org/shopping/shopallpd.htm போன்ற வலைத்தளங்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் செய்த அல்லது அவர்களுக்கு ஒரு பங்கு தரும் companies விற்கும் பொருட்களை இணணயம் மூலமாக வாங்கலாம். நீங்க வெளிநாட்டில் இருக்கிறவரா இருந்தால் இந்தியாவில் இருக்கும் நண்பர்/உறவினருக்கு gifts அனுப்ப இந்த வலைத்தளங்களை உபயோகிக்கலாம். ஒரே கல்லுலே இரண்டு மாங்காய்!

http://mayaorganic.com/products_pages/toy/product_lac.htm

பெங்களூர்வாசிகள் கண்டிப்பாக மாயா விளையாட்டு சாமான் வாங்குங்கள். மிக அழகான lac finishல் பளபளக்கும் பொம்மைகள்!


http://www.akanksha.org/index1.htm (இந்த பேஜ் downloadஆனவுடன் கீழே products என்ற icon வரும்.)

மும்பய்வாசிகள் ஆகாங்க்ஷா பொருட்கள் வாங்கலாம்.

உங்கள் கிராமத்திற்கு இணைய வசதி கொண்டு வர வேண்டுமா?


ஒரு சிறு முதலீடு செய்தால் நீங்கள் இதை செய்யலாம்.

http://www.n-logue.com/overview.htm


இந்தியா பற்றிய நல்ல செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

www.goodnewsindia.com D.V. ஸ்ரீதரன் என்ற 61 வயது இளைஞர் நடத்தும் வலைத்தளம். D.V. ஒரு சுவாரஸ்யமான மனிதர். இந்தியாவில் வெறும் நல்ல செய்திகள் மட்டும் தானா? மற்ற செய்திகள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், "கெட்ட செய்திகளை போட மற்ற பத்திரிக்கைகள் இருக்கின்றன. அவர்கள் "objective pessimism'த்தோடு எழுதுகிறார்கள் நான் "subjective optimism"த்தோடு எழுதுகிறேன் என்று.


மேலும் சில உபரித் தகவல்கள்


வட அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் பற்றி உங்களுக்கேல்லாம் தெரிந்திருக்கும். எனக்கு நன்றாக தெரிந்த இரு நிறுவனங்கள்:

www.aimsindia.net (தமிழ்நாட்டு இளைஞர்கள் சிறப்பாக நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம். தமிழ் நாடு based projects நிறைய உண்டு).

http://www.nri-home-coming.com/ இவர்கள் தற்பொழுது மதுரையில் உள்ள DHAN Foundation உடன் இணைந்து ராமநாதபுரம் districtல் சில ஊரணிகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறார்கள். இப்பணியில் உதவ விருப்பபுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒரு கடைசி தகவல்: நான் ஒன்றும் பெரிய சமூக சேவகி இல்லை. சிறு துளி பெரு வெள்ளம் என்று நம்புகிறேன். என்னாலான சிறு சிறு உதவிகள் தான் செய்து வருகிறேன். எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளலாமே என்று மட்டுமே நினைத்தேன். பின்னூட்டத்தில் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே! நன்றி!

Thursday, July 14, 2005

துருவங்கள்

(ஜனவரி 2005 அமுதசுரபில் பிரசுரமான வாமன கதை)


என் வீட்டில் ஒரு நவீனப் பெண்பார்க்கும் படலம். என் நெருங்கிய தோழி ரமா சிட்னியில் இருந்தாள். அவள் மகன் விகாஸ் நன்கு படித்த, பண்புள்ள பையன். தன் மகனுக்கு நல்ல பெண் வேண்டும் என்று அவள் சொன்ன உடனேயே இந்தியாவில் இருந்த என் அக்கா மகள் தியாவின் ஞாபகம் தான் எனக்கு வந்தது.

ஜாதகம் பொருந்தி, மற்றதேல்லாம் திருப்தியாக இருந்ததால் சிங்கப்பூரில் இருந்த என் வீட்டில் பெண் பார்ப்பது என்று முடிவாகியது. இருவருமே வெகு தூரம் பயணம் செய்ய வேண்டாம் மற்றும் இருவருக்கும் பொதுவான இடம் என்ற காரணங்கள்.

முதல் சந்திப்பு என் வீட்டில் நடந்தது. ஜோடிப் பொருத்தம் நன்றாகத் தான் இருந்தது. “நாங்கள் சிறிது வெளியே சென்று விட்டு சாயங்காலமாக திரும்பலாமா?” என்று கேட்டான் விகாஸ். ‘சரி’ என்று ஒப்புக் கொண்டோம்.

சாயங்காலம் திரும்பினர் இருவரும். உடை மாற்ற தியா உள்ளே சென்றதும் “என்ன விகாஸ்? அவளைப் பிடிச்சுருக்கா?” என்று கேட்டேன்.

“ஆண்டி.. நான் ஆஸ்ட்ரேலியாவிலே பிறந்து, வளர்ந்திருந்தாலும் அம்மா என்னை ஒரு இந்தியனா தான் வளர்த்திருக்கா. அதனாலே தான் நான் அரேன்ஞ்சுடு மாரேஜ்க்கு சம்மதிச்சேன். எனக்கு தமிழ் நல்லா பேச, எழுத தெரியும். வாரா வாரம் கோவிலுக்கு போவோம். நான் மிருதங்கம் கத்துண்டு கச்சேரிகள்லே கூட வாசிச்சிருக்கேன். தியா என்னடான்னா லஞ்சு சாப்பிடும் பொழுது பீர் குடிக்கிறா, தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்லிட்டா. இன்னிக்கு எந்த நைட் கிளப்புக்கு போலாம்ன்னு கேட்கறா? ஸாரி ஆண்டி.. இந்த மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் இந்தியாவிலே பொண்ணு பார்க்க வேண்டாம். என் கூடப் படித்த ஆஸ்ட்ரேலியப் பெண்களே நிறையப் பேர் இருக்காங்க..,” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

“அடக் கடவுளே! இந்தப் பொண்ணிடம் என்ன சொல்வது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே “கிளம்பிட்டானா அந்த அம்மாஞ்சி! எங்கே சித்தி புடிச்சே இவனை? வெளிலே ஜாலியா எங்கேயாவது போலாம்னு பார்த்தா முதல்லே மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிண்டு போனான். அப்புறம் சிராங்கூன் ரோட்டிலே மல்லிப்பூ வாங்கி தலையிலே வைச்சுக்கோங்கிறான். கொஞ்சம் விட்டா ஒரு பாவாடை தாவணி வாங்கிக் கொடுத்து என் பேரை அங்காள பரமேஸ்வரின்னு மாத்திடுவான் போல இருக்கு. ஆளை விடு! இதை விட மாடர்ன் பையன் எனக்கு சென்னையிலேயே கிடைப்பான்,” என்றாள் தியா.

நான் ‘திரு திரு’ வென்று விழித்தேன்!

Friday, July 08, 2005

"கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!"

"கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!”

(மங்கையர் மலர் - அக்டோபர் 2004)சந்தோஷமான விஷயம் தான்! பொதுவா பிரசவமும், சின்ன குழந்தையை பராமரிக்கிறதும் அம்மாவோட வேலை தான் அப்படிங்கிறது ஒரு எழுதப்படாத ரூலா இருந்துதுங்க. ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையிலே ஆணும் பெண்ணும் சமம்ன்னு பல ஆண்கள் ஒத்துக்கறாங்க. அப்படி ஒத்துகிற ஆண்கள் கூட சிலர் இந்த நேரத்திலே என்ன செய்யணும்ன்னு தெரியாம இருக்காங்க. உங்க வீட்லே அப்படி உதவணும் ஆசை இருக்கிற ஆணா இருந்தாலும் சரி, இதைப் பத்தி அதிகம் யோசிக்காத ஆணா இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரை அவங்களுக்குத் தாங்க. கொஞ்சம் படிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்!

பொதுவா பிள்ளை உண்டாகியிருக்கிற ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாவும் மன ரீதியாவும் பல மாற்றங்கள் ஏற்படும்ங்கிறது தெரிஞ்ச விஷயம் தான். இது எவ்வளவு தூரம் அவங்களை கஷ்டப்படுத்த வாய்ப்பு இருக்குங்கிறதை முதல்லே தெரிஞ்சுக்கங்க. எப்படி தெரியுமா? ஒவ்வோரு டாக்டர் செக்-அப்புக்கும் கண்டிப்பா கூடப் போங்க. மனைவி ஏதாவது உடல் அசெளகரியங்களை உங்க கிட்டே சொல்லியிருந்தா கண்டிப்பா டாக்டர் கிட்டே அதைப் பத்தி கேளுங்க. வேற எதாவது சந்தேகம் இருந்தாலும் கூச்சப் படாம கேளுங்க. ஒரு டி.வி இல்லே கம்ப்யூட்டர் வாங்கினா எவ்வளவு கேள்விக் கேப்பீங்க? இது உங்க குழந்தைங்க! நீங்க அக்கறை எடுத்துக்காம வேற யாரு எடுத்துப்பாங்க? ‘இதேல்லாம் பொம்பளைங்க சமாசாரம்’ன்னு ‘நைஸா’ நழுவப் பார்க்காதீங்க.

முக்கியமா நீங்க கூட போனாதாங்க உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக வேற யாரும் பார்க்க முடியாத ஒரு படத்தை நீங்க பார்க்க முடியும். அதாங்க அல்ட்ரா ஸவுண்ட் பொழுது உங்க குட்டி பாப்பா ஜோரா அம்மாவோட வயத்துலே நீந்தற காட்சி! இதை மிஸ் பண்ணலாமா? மனைவி சொல்லும் பொழுது ஏற்படற சந்தோஷத்தை விட அதைப் பார்க்கிறதும், இதயத் துடிப்பை கேட்கறதும் ஒரு விவரிக்க முடியாத அனுபவம் தான்!

இப்பேல்லாம் குழந்தை பிறப்பு பத்தி இணையத்திலும் சரி, புத்தக கடைகளிலும் சரி ஏராளமான விஷயம் இருக்கு. ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி படிச்சு உங்க மனைவி எவ்வளவு விதமான மாறுதல்களை சமாளிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

முதல் மூணு மாதத்துலே உங்க முக்கியமான வேலை என்ன தெரியுமா? மனைவி நல்ல சத்தான உணவு வகைகளை சாப்பிடறாங்களான்னு கண்காணிக்கிறது தான். நிறைய பால், பழம் மற்றும் பழச்சாறு, பச்சை காய்கறிகள் எல்லாம் வாங்கி அசத்துங்க. முக்கால் வாசி பெண்களுக்கு இந்த மூணு மாதத்துலே வயத்த பிரட்டலும், வாந்தியும் இருக்கிறதுனாலே சாப்பாட்டைக் கண்டாலே பிடிக்காது. ஓரளவு என்ன பிடிக்கிறதுன்னு பார்த்து, அதை அவங்களை சாப்பிட வைக்கிறது நல்லது. இந்த நல்ல உணவு பழக்கம் பத்து மாதங்களுக்கும் உபயோகமா இருக்கும். பலருக்கு மூணு மாதம் முடிந்த உடனே மசக்கை பிரச்சனை போய்டும். சிலருக்கு இன்னும் சில மாதங்கள் தொடரலாம்.


இதை தவிர சில சின்னச் சின்ன உடல் பயிற்சிகள் செய்யறது, வாக்கிங் போறது போன்ற விஷயங்களைச் சேர்ந்து செய்யலாம். “இதுக்கேல்லாம் எங்கே நேரம்?” அப்படின்னு அலுத்துகாதீங்க. காலையிலே கொஞ்சம் சீக்கிரமா எழுந்துக்கலாம் இல்லே சாதாரணமா செய்யற வேற வேலைகளை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்கலாமே!

மாசம் ஆக ஆக மனைவிக்கு சில வலிகள் வருவது சகஜம். “உனக்கு என்னிக்கு தான் வலி இல்லாம இருந்தது?” அப்படின்னு சலிச்சுகாம புத்தகத்துலே இல்லே இணையத்துலே படிச்சு எதனாலே அங்கே வலிக்கிறது, என்ன செஞ்சா வலி போகும்ன்னு உபயோகமா தகவல்களை தரலாம். குறைந்தபட்சம், ஆறுதலா நாலு வார்த்தை பேசலாம்.

பொதுவா வலிக்கிற இரண்டு பகுதி கால் மற்றும் முதுகு. தீவிரமான அல்லது அசாதாரணமான வலின்னா டாக்டர் கிட்டே கண்டிப்பா போகணும். களைப்பினாலே வர வலின்னா தைலம் அல்லது ஆயிண்மெண்ட் தேய்ச்சு விடலாம். உங்களைத்தான் சொல்லறேன். மனைவி காலைப் பிடிக்கிறதை அவமானமா நினைக்காதீங்க. உங்க வாரிசை பத்து மாசம் சுமக்கறவங்க. நீங்க காலைத் தொட்ட உடனேயே வலியெல்லாம் பறந்து போய்டாதா?

வலியைப் பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா ஒரு மூட்டையிலே கிட்டத்தட்ட எட்டு கிலோ வரா மாதிரி சாமான்களை நிரப்பிக்கங்க. அதை வயித்தை சுத்தி இறுக்கி கட்டிக்கிங்க. ஒரு இருபத்தி நாலு மணி நேரம் அந்த மூட்டையோட எல்லா வேலையும் பண்ணுங்க. இப்போ லேசா புரியற மாதிரி இருக்கா ஏன் வலி வரதுங்கிற காரணம்?

இந்த சமயத்துலே பொதுவா பெண்களுக்கு சில பயங்கள் வரலாம். “நமக்கு எதாவது ஆயிட்டா குழந்தையை யாரு பார்த்துப்பாங்க? குழந்தை நல்ல ஆரோக்கியமா பொறக்குமா? என்னாலே நல்லபடியா வளர்க்க முடியுமா?” போன்ற பயங்கள்! “அதனாலே என்னம்மா? குழந்தைக்காக நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா?” அப்படின்னு அசட்டு பிசட்டுன்னு பதில் சொல்லாம இருங்க. “சீ..சீ பைத்தியம். அதேல்லாம் ஒண்ணும் ஆகாது. வாயை மூடு” அப்படின்னு சொல்றதும் முழுமையான பதில் இல்லை.

முதல்லே இதுக்கு மருத்துவரீதியா ஏதாவது பின்னணியோ, வலுவான காரணமோ இருந்தா மருத்துவரிடம் ஆலோசனை செய்யறது நல்லது. மருத்துவர் சில டெஸ்ட்கள் செய்து இந்த பயங்களை போக்குவார் அல்லது தீர்வு சொல்லுவார். சாதாரணமா காரணமே இல்லாம வர பயம்ன்னா, அதைப் பத்தி மனைவியிடம் ஓபனா பேசுங்க. முதல் விஷயம் இந்த பயம் வரது சகஜம்னு புரிய வைங்க. நம்ம தழிழ் சினிமாலேயும் சரி, ஸீரியல்களிலும் சரி பிரசவம்னா பெண்ணுக்கு மறு பிறவி அப்படிங்கிற கருத்து உண்டு. முக்கியமா பிரவிச்ச உடனே உயிரை விடற ஹீரோவின் தாய் அல்லது மனைவி காரக்டர்ஸ் நிறைய உண்டு. இதைப் பார்த்து இந்த மாதிரி பயங்கள் வரலாம். நீங்க படிச்ச விஷயங்களிலிருந்து புள்ளி விவரங்களை எடுத்துவிடுங்க. இதோ சாம்பிளுக்கு ரெண்டு, “ஒரு நாளைக்கு உலகத்துலே எவ்வளவு குழந்தைகள் பிறக்கிறது தெரியுமா? கிட்ட தட்ட மூணரை லட்சம். குழந்தை பிறக்கிறதுங்கிறது ரொம்ப இயற்கையான ஒரு விஷயம்” அப்படின்னு சொல்லலாம். இல்லேன்னா “அந்த காலத்துலே மருத்துவ வசதிகள் கம்மியா இருக்கும் பொழுதே நம்ப பாட்டி, அம்மா எல்லாரும் பெத்துக்கலையா?” அப்படின்னும் சமாதானம் சொல்லலாம். மனைவியோட பயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பகுத்தறிவோட அணுகினாலே அவங்களுக்கு பயமேல்லாம் பறந்து போய் நம்பிக்கையும், உற்சாகமும் வந்துடும்.

டாக்டர் கிட்டே எந்த ஆஸ்பத்திரிலே டெலிவரி நடக்கப் போறதுங்கிறதை கேட்டு தெரிஞ்சுகிட்டு ட்யூ டேட்டுக்கு பத்து நாள் முன்னாடியே ஆஸ்பத்திரி எங்கே இருக்கு, லேபர் வார்டு எங்கே இருக்கு, மருந்து எங்கே வாங்கணும், அட்மிட் பண்ணும் பொழுது என்னேல்லாம் கேப்பாங்க அப்படின்னு தெரிஞ்சுண்டு வந்தீங்கன்னா வலி எடுத்த உடனே டக்குனு எல்லாம் பண்ண சுலபமா இருக்கும்.

மனைவிக்கும், வீட்லே இருக்கிற மத்தவங்களுக்கும் தெரிஞ்ச ஒரு இடத்துலே உங்க ஆபீஸ் போன் நம்பர், செல் போன் நம்பர், டாக்டரோட நம்பர், நல்ல நண்பர் அல்லது உறவினரோட நம்பர் எல்லாம் ஒரு லிஸ்ட் எழுதி வைச்சுடுங்க. எல்லா நல்லபடியா நடக்கும். ஆனா திடீர்னு ஒரு அவசரம்னா தயாரா இருக்க வேண்டாமா?

குழந்தை பிறந்த பிறகு போஸ்ட் பார்டம் ப்ளூஸ் (post-partum blues) அப்படின்னு ஒரு விஷயம் இருக்குங்க. அதாவது சில நாட்கள் அம்மாக்கு மூட் ரொம்ப சோகமா இருக்கும். ‘டக்’குனு அழுகை வரும். “உனக்கு அழறத்துக்கு ஒரு காரணம் வேற வேணுமா?” அப்படின்னு கோபப்படாதீங்க. அம்மாவோட உடம்புலே சில ஹார்மோன்களாலேயும் இல்லே சரியா சாப்பிடாம, தூங்காம குழந்தை கவனிப்பிலேயே கவனம் செலுத்தறதுனாலேயும் இது வரலாம். சிலருக்கு ரொம்ப எதிர்பார்த்துகிட்டிருந்த விஷயம் (அதாங்க பிரசவம்) முடிஞ்சு போச்சேன்னு ஒரு வெறுமை வருமாம். இந்த நேரத்துலே கொஞ்சம் பொறுமையா அன்பா இருங்க. மனைவிக்கு பிடிச்ச பாட்டு காஸெட் அல்லது சினிமா வாங்கிண்டு வந்து மனசை திசைத் திருப்ப பாருங்க. குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரத்துலே நீங்க பக்கத்துலே இருந்து நல்ல புத்தகங்களை வாய்விட்டுப் படிக்கலாம் (தனியா பால் கொடுக்கும் நேரத்துலே மனசிலே சில பயங்கள் வரதுனாலே சில சமயம் இந்த மன அழுத்தம் வர வாய்ப்பு இருக்கு). குழந்தைக்கு பால் கொடுத்த உடனே நீங்க குழந்தையை வாங்கிண்டு அவங்களை நல்லா ரெஸ்ட் எடுக்கவிடுங்க. இரண்டு, மூணு நாட்கள்லே கண்டிப்பா சகஜ நிலைக்கு வந்திடுவாங்க.

எந்த சமயத்துலேயும் “ஆமா.. உலகத்திலேயே நீ தான் அதிசயமா குழந்தை பெத்துண்டியாக்கும்?” அப்படின்னு விளையாட்டுக்கு கூட உங்க மனைவியை கேக்காதீங்க.

குழந்தை உருவாகிறது கண்டிப்பா ஒரு அதிசயம் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் அது ரொம்ப பர்ஸனல் அனுபவம். இந்தியாவின் ஜனத் தொகை ஒரு பில்லியனைத் தொட்டாலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷம் தான். அந்த பொக்கிஷம் உருவாகி உங்க கையிலே தவழற வரைக்கும் உங்க மனைவிக்கு பக்கபலமா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்!

-------------------------------------------------

Tuesday, July 05, 2005

ஏர் ரேஜ் (air rage) தேவையா?

சமீபத்தில் பத்மா அர்விந்த் அவர்களின் பதிவில் குடியினால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மற்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி இருந்தார்கள். பல நாட்களாக மனதை உருத்திக் கொண்டிருந்த ஒரு சிந்தனை அதைப் படித்தவுடன் மீண்டும் தலைத் தூக்கியது.

காலத்திற்கு ஏற்றார்போல் மனிதர்களின் மன உளைச்சல்களுக்கும், கோபதாபங்களும் பல பெயர்கள் நிலவுகின்றன (சந்திரமுகியும், அந்தியனும் பார்த்த பிறகு காலையில் 'வள்'ளென்று விழும் பாஸ் மாலையில் சிரித்தால், "நிச்சயம் MPD தான்" என்று சொல்லத் தோன்றும்). நாம் கேள்விப்பட்டிருக்கும் மற்ற சில சொற்கள் ரோட் ரேஜ், ஏர் ரேஜ்.

என்னை மிகவும் எரிச்சலைடைய செய்த விஷயம் ஏர் ரேஜ். விமானத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல தான் கட்டணம். சில மணி நேரங்கள் சாப்பிடாமல் இருக்க முடியாது. சாப்பாடு கொடுங்கள், நியாயம். எதற்கு விதவிதமான மது பானங்களை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறீர்கள்? அது என்ன அத்தியாவசிய தேவையா? ஒரு மனிதனால் சில மணி நேரங்கள் குடிக்காமல் இருக்க முடியாதா? அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு கலாட்டா பண்ணும் ஒருவனால் எல்லா பயணிகளுக்கும் அல்லவா ஆபத்து. அந்த மாதிரி ஒரு சூழலை உருவாக்குவது உச்சக் கட்ட பொறுப்பற்ற ஒரு வேலையாக எனக்கு தோன்றுகிறது. ஒரு குடிகாரனால் நம் பயணம் பாதிக்கப்பட வேண்டுமா? 'மது பானங்கள் serve பண்ணக் கூடது' என்று Airlines மீது யாராவது வழக்கு தொடுத்தால் நன்றாக இருக்கும்! விமானங்களில் புகைப் பிடிப்பதை தடுப்பதை விட குடியை தடுப்பது இன்னும் முக்கியமாக எனக்குத் தோன்றுகிறது.