சிறு துளி - மழை நீர் சேமிப்பு பற்றிய சிறுகதை
போன வருடம் ஆனந்த விகடனில் 'தண்ணீரைத் தேடி" என்று ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள். அந்தப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை (ஆ.வி யில் வெளியிடவில்லை. பரிசுகளை ஸ்பான்ஸர் செய்திருந்த Waternet Federation என்ற அமைப்பு வெளியிடப் போகும் ஒரு தகவல் bookletல் பிரசுரிப்போம் என்று சொன்னார்கள்)
_____________________________________________________________________________________
ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்தாச்சு. வழக்கம் போல் ஒரு மாத விடுமுறை போன இடம் தெரியவில்லை. டிசம்பர் கச்சேரி ஸீஸன் என்பதால் நேரம் போதவில்லை. பதினாங்கு வயது ஷ்ரவனும், பன்னிரண்டு வயது ஷ்ருதியும் சிங்கப்பூரில் சில வருடங்களாகப் பாட்டும், வயலினும் கற்றுக் கொள்வதால் கச்சேரிகள் அவர்களுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. ஒன்று, இரண்டு நாட்கள் தான் போரடிக்கிறது என்று படுத்திவிட்டார்கள்.
விமான நிலையதிற்குக் கிளம்பும் முன் பாட்டி, தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டே, “பாட்டி, இந்த வருஷம் அப்பாக்கு ஆஃபீஸிலே ரொம்ப வேலை. அதனாலே நாங்க சம்மர் வெகேஷனுக்கு எங்கேயும் போகலை. திருப்பி சென்னை தான் வரப் போறோம்,” என்றாள் ஷ்ருதி.
“சென்னை வேண்டாம்டி செல்லம். தண்ணியே கிடையாது. நாங்களே என்ன பண்ணப் போறோம்னு தெரியலை. நினைச்சாலே பயம்மா இருக்கு,” என்றாள் அம்மா. அருகே இருந்த வீட்டு வேலைக்காரி தனம், “ஆமாங்கண்ணு. அங்கேயே நிம்மதியா இரு. எங்க சேரிலே இப்பவே சுத்தமா தண்ணி இல்லே. நேத்து என்னாமோ கண்ட தண்ணிய குடிச்சிட்டு புஷ்பா வவுத்து நோவுன்னு படுத்துகினு கிடக்கு,” என்றாள்.
“ஓ நோ. அதான் புஷ்பா இன்னிக்கு சாயங்காலம் வரலயா தனம் ஆண்டி,” என்றாள் ஷ்ருதி சோகமாக. அவள் முகம் வாடிவிட்டது.
ஏர்போர்ட் வரும் பொழுது ஷ்ருதியின் முகத்தில் சுரத்தே இல்லை. “ஏம்மா இங்கே தண்ணி இல்லை? இவ்வளவு பேர் தண்ணி இல்லாம என்ன பண்ணுவா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள். செக்-இன் முடிந்து, கஸ்டம்ஸ் தாண்டி விமானத்தில் ஒரு வழியாக ஏறினோம்.
நாள் முழுக்க வழக்கம் போல் கடைசி நிமிட ஷாப்பிங், உறவினர்களுக்கு போய்ட்டு வரேன் என்று போன் செய்வது, சாமான்களை மூட்டை கட்டுவது என்று சரியாக இருந்தது. “ஷ்ருதி.. நாளைக்கு ஊருக்கு போய் பேசலாம்டா. அம்மாக்கு ரொம்ப டையர்டா இருக்கு,” என்றபடி சீட்டில் சாய்ந்தேன். அப்பா பக்கம் திரும்பினாள். அவர் ஏற்கனவே குறட்டை விட ஆரம்பித்துவிட்டார்!
அடுத்த நாளிலிருந்து சிங்கப்பூர் வாழ்க்கை வேகமாகத் தொடங்கி விட்டது. அலுவலகம், ஸ்கூல், பூட்டியிருந்த வீட்டை சுத்தம் செய்வது, சிராங்கூன் ரோட்டில் மளிகை, கறிகாய் ஷாப்பிங் என்று வேலைச் சரியாக இருந்தது. ஷ்ருதி இந்த தண்ணீர் விஷயத்தை நிச்சயம் மறக்கமாட்டாள் என்று எனக்குத் தெரியும். சின்ன வயதிலிருந்தே ஏதாவது தன்னை பாதித்தால் அதைப் பற்றி முழுவதுமாக கேள்விக் கேட்டுத் துளைத்து விடுவாள். தனக்குத் திருப்தி தரும் பதில் கிடைக்கும் வரை வலைத் தளங்களுக்குச் செல்வது, டீச்சரிடம் விவாதிப்பது, புத்தகங்களில் தேடுவது என்று ஓயமாட்டாள். அவள் அப்பாவும் மகள் ஜனாதிபதி கலாமைப் போல் பெரிய விஞ்ஞானியாக வருவாள் என்று அவளை ஊக்குவிப்பார்.
அன்று எனக்கு வீட்டிற்கு ஷ்ருதியின் டீச்சர் ஏமி போன் செய்தாள். “ஹலோ மிஸஸ். காணெஷ்.. ஷ்ருதியின் விடுமுறையின் பொழுது என்ன நடந்தது? அவள் சிறிது சலனப்பட்டிருக்கிறாள் போலிருக்கே?” என்றாள் ஆங்கிலத்தில்.
மாணவர்களைத் தங்கள் விடுமுறையைப் பற்றி பேச அழைத்திருக்கிறாள் டீச்சர் ஏமி. ஷ்ருதி சென்னையின் தண்ணீர் கஷ்டத்தைப் பற்றி பேசியிருக்கிறாள். அவளின் வருத்தத்தைப் பார்த்த ஏமி உடனே எனக்கு போன் செய்திருக்கிறாள்.
நான் நடந்ததை விவரித்தேன். “ஓ..தண்ணீர் சேமிப்பு பற்றியும் சில நாடுகளில் தண்ணீர் எவ்வளவு அரிதாகப் போய்விட்டது என்றும் குழந்தைகளுக்கு கண்டிப்பாகப் புரியவைக்க வேண்டும். நாங்கள் இன்னும் இந்த டெர்மிற்கு ப்ராஜெக்ட் தேர்வு செய்யவில்லை. இதையே எடுத்துக் கொண்டால் என்ன? உங்கள் உதவியும் தேவைப்படும்.” என்றாள்.
ஷ்ருதியின் பள்ளி சிங்கப்பூரில் உள்ள ஒரு சர்வதேசப் பள்ளி. சமுதாயத் தொண்டு செய்வது மற்றும் சமூக அவலங்களுக்கு தங்களால் முடிந்த வரை தீர்வு காண்பது என்பது அந்தப் பள்ளியின் நோக்கத்தில் ஒன்று. குழந்தைகளை க்ளோபல் சிடிசென்ஸ் என்ற பொறுப்புணர்சியோடு நடந்து கொள்ள ஊக்குவிப்பார்கள். சிறு குழந்தைகள் தங்கள் உபயோகப்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் மற்றும் பைகள் போன்றவற்றை அருகில் உள்ள கம்போடியா, வியட்நாம், மங்கோலியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். பெரிய குழந்தைகள் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த நாடுகளுக்குச் சில நாட்கள் சென்று பள்ளிகளைச் சீரமைப்பது, தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவிட்டு வருவார்கள். ஏதாவது பொருட்கள் விற்று அல்லது கலை நிகழ்ச்சி நடத்திப் பணம் சேகரித்து இது போன்ற விஷயங்களுக்கு அனுப்புவார்கள். பல சமயம் பெற்றோரையும் இதில் ஈடுபடுத்துவார்கள். சிறு வயதிலிருந்தே தங்களைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளுக்கு தாங்கள் எப்படி உதவலாம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனத்தின் நன்றாகப் பதிய வைக்கும் ஒரு பள்ளி.
இந்த டெர்ம் ப்ராஜெக்டிற்கு சென்னையின் தண்ணீர் கஷ்டத்தை தலைப்பாக எடுக்கலாம் என்று மிஸ். ஏமி சொன்னவுடன் பரபரப்பு என்னையும் தொற்றிக் கொண்டது. கண்டிப்பாகச் செய்யலாம் என்று வாக்குக் கொடுத்து விட்டு ஷ்ருதியின் வரவை எதிர்பார்த்தேன்.
ப்ராஜெக்டை ப்ளான் பண்ண ரம்பித்தோம். “சிங்கப்பூரில் ஏன் தண்ணி கஷ்டம் இல்லை? நாம தாராளமாக தண்ணியை உபயோகபடுத்தறோமே?” என்றாள் ஷ்ருதி. “இங்கேயும் தண்ணி கிடையாது ஷ்ருதி. ஆனால் இது சின்ன நாடு, முக்கியமா பணக்கார நாடு. அதனால சிங்கப்பூர் அரசு பணம் கொடுத்து மலேஷியாவிலிருந்து தண்ணி வாங்கறாங்க. நாம மாசா மாசம் தண்ணி உபயோகிக்கிற அளவைப் பொருத்து அரசுக்கு பணம் கட்டறோம்,” என்றார் என் கணவர்.
“அப்படின்னா இங்கேயும் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்தினா பணத்தை மிச்சப்படுத்தலாம் இல்லையா?” என்றான் ஷ்ரவன்.
“கண்டிப்பா மிச்சப்படுத்தலாம் ஷ்ரவன். தண்ணிங்கிறது உலகத்துக்குப் பொதுவான ஒரு இயற்கை வளம். இப்ப இங்கே தாராளமா கிடைச்சாலும் அதைப் பொறுப்போட செலவழிக்கிறது ரொம்ப முக்கியம்,” என்றேன்.
இந்த உரையாடல் எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்ற உதவியது. மிஸ். ஏமியுடன் உடனே பகிர்ந்து கொண்டேன். ப்ராஜெக்ட் ப்ளான் தயாரானது. ஷ்ருதியின் வகுப்பின் நான்கு பிரிவுகளையும் சேர்த்தால் மொத்தம் நூறு மாணவர்கள். அவர்களுக்கு தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் சேமிக்கும் தண்ணீரால் அவர்களின் வீட்டுத் தண்ணீர் கட்டணத்தில் மிச்சமாகும் பணத்தை சேர்த்துக்கொண்டே வரலாம். இரண்டு மாதத்தில் சேரும் பணத்தை உபயோகித்து சென்னையில் ஒரு குளத்தைச் சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என்று முடிவானது.
மாணவர்களிடம் சென்னை தண்ணீர் பிரச்சனையை கூறிய ஷ்ருதி சிங்கப்பூரின் சுற்றுப் புற சூழல் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில் தான் படித்த தண்ணீர் சேமிப்பு பற்றிய குறிப்புகளை சொன்னாள். “ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும். கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம். பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம். வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம். காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம்.” இத்தனை லிட்டர்கள் சேமித்தால் எவ்வளவு டாலர்கள் சேமிக்கலாம் என்று சொல்லி தன் பேச்சை நிறைவு செய்தாள்.
மாணவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பைப் பார்த்த பொழுது இதைப்பற்றி அவர்கள் பெரிதாக யோசித்ததில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவர்கள் சில குறிப்புகளை மறந்து விடப் போகிறார்களே என்று மிஸ். ஏமி அவற்றை ஒரு பக்கத்தில் நோட்டீஸ் போல் அச்சடித்து எல்லோரிடமும் தந்தாள். “உங்களுக்கு இரண்டு மாதம் இருக்கிறது இவற்றை நன்றாக பழக்கிக் கொள்ள. அதில் மிச்சமாகும் பணத்தை இந்தக் கலெக்ஷன் பெட்டியில் சேமித்துக் கொண்டே வருவோம்,” என்றாள்.
இந்த ப்ராஜெக்ட்டிற்கு பெற்றோரிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு முக்கியமான விஷயத்தை கற்றுக் கொடுப்பதாகப் பள்ளிக்குப் பாராட்டு கிடைத்தது. பள்ளியின் தலைமை நிர்வாகி ‘இதை ஏன் ஒரு வகுப்பில் மட்டும் செய்ய வேண்டும்? மேல் நிலைப்பள்ளி முழுக்க செய்யலாமே!’ என்று ப்ராஜெக்டை விரிவுபடுத்தினார்.
ஷ்ருதியின் அடுத்த வேலை, ஒரு மாதத்திற்குள் ஒரு குளத்தைத் தேர்வு செய்து, சுத்தம் செய்யும் பணியை ஏற்றுக் கொள்ள சென்னையில் செயல்படும் ஒரு அமைப்புடன் தொடர்ப்பு கொள்வது. ஷ்ரவன் ஒரு நாள், “ஆமா.. நீ ஒரு குளத்தைப் புதுப்பிச்சா தமிழ் நாட்டிலே தண்ணி கஷ்டம் தீர்ந்துடுமாக்கும்” என்று சொன்னவுடன் சட்டென்று அவளின் உற்சாகம் வடிந்தது.
அவள் அப்பா வந்தவுடன் அவளின் முகச் சோர்வுக்கான காரணத்தைக் கேட்டு “அட பைத்தியம். இதுக்கா டவுன் ஆயிட்டே? உன்னை மாதிரி ராஜேந்தர் சிங் சோர்ந்திருந்தார்னா பாலைவனமான ராஜஸ்தான் மாநிலம் இன்னிக்கு பச்சைப் பசேலென்னு மாறி இருக்குமா? குறிப்பா ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியிலே மூணு வருஷம் தொடர்ந்து பஞ்சம். அங்கிருக்கிற மக்களுக்கு துளிக் கூட தண்ணியில்லை. மாடு, ஆடேல்லாம் செத்துப் போச்சு. மக்களும் பிழைப்புத்தேடி நகரங்களுக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அரசாங்கம் அந்தப் பகுதியிலே நிலத்தடி தண்ணி சுத்தமா இல்லைன்னு அதைக் கறுப்பு பகுதின்னு அறிவிச்சுட்டாங்க. சிங் அந்தப் பகுதியிலே தன் கையாலேயே கிணறு தோண்ட ஆரம்பிச்சார். முதல்லே அவருக்கு அரசு ஆதரவும் இல்லை, மக்களும் அவரை நம்பலே. தளர்ந்து போகாம ஆறு மாதம் தனியே உழைச்சார் சிங். கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு நம்பிக்கை வந்து அவங்களும் உழைச்சாங்க. இன்னிக்குக் கறுப்பு பகுதிங்கிற அவப்பெயர் போய் பச்சைப் பகுதின்னு பெயர் வாங்கி இருக்கு ஆல்வார்,” என்றார் என் கணவர்.
ஆச்சர்யமாக பார்த்த குழந்தைகளிடம் தொடர்ந்தார், “கிட்டதட்ட முப்பது வருஷமா இருக்கிற ராஜேந்தர் சிங்கோட இயக்கத்தின் பெயர் தருண் பாரத் சங். எவ்வளவு கிராமங்களுக்கு கறுப்பு பகுதிங்கிற பேரை மாத்தி இருக்கு தெரியுமா ஷ்ரவன் இந்த இயக்கம்? சொன்னா நம்ப மாட்டே. எழுநூறு கிராமங்களுக்கு மேலே! நாலாயிரம் மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டி, ஏகப்பட்ட சின்ன குளங்களையும், ஐஞ்சு பெரிய ஏரிகளையும் புதுப்பிச்சு ராஜஸ்தானின் தலையெழுத்தை மாத்தி எழுதி இருக்கார் ராஜேந்தர் சிங். அது மட்டும் இல்லை ஷ்ருதி, மாக்சேசே அவார்ட் மற்றும் பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. இன்னிக்கு பல மாநிலங்கள்லே அவரை தண்ணீர் பஞ்சத்தைப் போக்க வழிகள் சொல்லக் கூப்பிடறாங்க தெரியுமா?” என்றார்.
திரு. ராஜேந்தர் சிங்கின் பிரமிக்க வைக்கும் வாழ்க்கைக் குறிப்பைப் படித்த ஷ்ருதி மீண்டும் உற்சாகமாக தன் வேலையைத் தொடர்ந்தாள். சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா என்ற மழை நீர் அறுவடை பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் அமைப்புடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டாள். அவர்களிடம் தங்கள் பள்ளியின் ப்ராஜெக்டை விவரித்து தங்கள் தேவையைக் கூறினாள். அவர்கள் உடனே சென்னைக்கு அருகே உள்ள கல்லுப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவருடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அந்தத் தலைவர் கிராம வளர்ச்சிக்காக மிகவும் பாடுபடுவதாகவும், அவர்கள் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தைச் சீர் செய்தால் அந்த மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார்கள்.
அந்த வருடம் தான் ஆசைப் பட்டது போல் ஷ்ருதி கோடை விடுமுறைக்கு சென்னை வந்தாள். விடுமுறைக்காக இல்லை. கல்லுப்பட்டி கிராம மக்களின் சிறப்பு விருந்தினராக. கிராமத் தலைவருடன் தொடர்பு கொண்ட பின் நடந்த விஷயங்கள் ஒரு கனவு போல் இருந்தன. கிராமத் தலைவர் உடனே ஒரு பட்ஜெட் தயார் செய்து சிங்கப்பூருக்கு அனுப்பினார். தங்கள் மக்களே குளத்தை சுத்தம் செய்வது, ஆழப்படுத்துவது, குளக்கரை கட்டுவது போன்றவற்றை செய்வார்கள் என்றும் சாமான் மற்றும் இஞ்சினியருக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டால் போதும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். குழந்தைகள் வழக்கம் போல் அசத்திவிட்டார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றதால் இரண்டு மாதத்தில் கிட்டதட்ட பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் சேர்ந்து விட்டது. இரண்டரை லட்சம் ரூபாய்! கல்லுப்பட்டியில் வேலை துரிதமாக நடந்தது. இதோ இன்று அதை கொண்டாட ஒரு சிறிய விழா. ஷ்ருதியின் வகுப்பு மாணவர்கள் தங்கள் கிளாஸ் போட்டோவை ஷ்ருதியிடம் அனுப்பியிருந்தார்கள். அதை மேடை மேல் வைத்திருந்தார் கிராமத் தலைவர்.
கிராம மக்கள் ஷ்ருதியிடம் வந்து தங்கள் பாராட்டுதலை தெரிவித்தார்கள். ஒரு வயதான பாட்டி தன் சுருக்கம் விழுந்த கைகளால் ஷ்ருதியின் முகத்தை வருடி, “என் ராசாத்தி!” என்று பாராட்டியது ஒரு சிறு கவிதைப் போல் இருந்தது. சில பெண்கள் வந்து, “இவ்வளவு நாள் நாங்க நாலு கிலோமீட்டர் தொலவு நடந்து ஒரு கொடம் தண்ணீ எடுத்தாருவோம். காலைலே இதுக்கே ரெண்டு, மூணு மணி நேரம் ஆயிடும். அதுக்கு அப்புறம் சோறாக்கி, புள்ளகளுக்கு போடறத்துகுள்ள சில நாளு ஒரு மணி கூட ஆயிடும். புள்ளங்க பாதி நாளு தண்ணி இல்லைன்னு இஸ்கூலுக்கு போவாதுங்க. நாங்க வர வரைக்கும் தம்பி தங்கச்சிங்கள வேற பாத்துக்கணும். எங்களாலே வேறேந்த வேலைக்கும் போவ முடியல. தண்ணிக்கு அலையறதே பொழப்பாபூடுச்சி. மவராசி, உன்னாலே தண்ணி வந்துச்சின்னா நாங்க நிம்மதியா வீட்டு விசயங்களை கவனிப்போம்,” என்றார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கிராமத் தலைவர் கூறினார், “பெரிய அரசியல் தலைவர்களும், நிபுணர்களும் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க தேசியநதிகளை இணைக்கும் திட்டம், கடல் நீரிலிருந்து உப்பை நீக்கும் திட்டம்னு பல திட்டங்கள் தீட்டிக்கிட்டு இருக்காங்க. அது நல்ல விஷயம் தான். ஆனா இந்தியாவிலே வாழாத ஒரு பன்னிரண்டு வயது குழந்தை நம்ம தண்ணி கஷ்டம் தீரணும்னு நினைச்சி ஆறே மாசத்துலே ஒரு குளத்துக்கு உயிர் கொடுத்திருக்கான்னா அது சாதாரண விஷயமே இல்லை. ஒரு முறை மழை பெய்தால் போதும். இந்தக் குளத்தின் நீர் கோடையிலே கூட வத்தாம நம்ம தண்ணிக் கஷ்டத்தை தீர்த்துடும். நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் நம்பிக்கை வச்சிருக்கிற எழுச்சி தீபங்கள்லே ஷ்ருதியும் ஒருத்தி,” என்று தன் உரையை முடித்தார்.
கிராம மக்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் அன்புடன் சென்னை வந்தோம். அங்கே தன் மகனின் திருமணத்திற்கு அழைக்க வந்திருந்தார்கள் என் அத்தையும் அத்திம்பேரும். அவர்கள் ஷ்ருதியைப் பார்க்க காத்திருந்தார்கள்.
“அடி சந்தியா.. உன் பொண்ணு எங்களுக்கெல்லாம் நல்ல வழியைக் காமிச்சிருக்காடி. வெங்கட் கல்யாணத்துக்கு டம்பரச் செலவு பண்ணாம, கல்யாணத்தை சிம்பிளா பண்ணி நாங்களும் பொண்ணாத்துகாராளும் சேர்ந்து அந்தப் பணத்தை எங்க வில்லிவாக்கத்திலே இருக்கிற காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை சரி பண்ண செலவழிக்கப் போறோம். அது மட்டும் இல்லை கல்யாணத்து வரவா எல்லாரையும் கிஃப்ட் வேண்டாம், இந்தக் காரியத்துக்கு உங்களாலான பணத்தை டொனேஷனா கொடுங்கோன்னு கேட்கப் போறோம். பொண்ணாத்துகாராளுக்கும் இதுலே ரொம்ப சந்தோஷம் சந்தியா. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறது எவ்வளவு பெரிய புண்ணியம். இந்தப் புண்ணிய காரியத்தோட இவா புது தாம்பத்தியத்தை ரம்பிக்கபோறா,” என்று நெகிழ்ச்சியோடு சொன்னாள் அத்தை.
“ஆமா சந்தியா. நன்னா இருந்த குளம் இன்னிக்கு ஒரு சின்ன குட்டை மாதிரி ஆயிடுத்து. கன்ஸ்ட்ரக்ஷன் வேஸ்ட், குப்பை சத்தை எல்லாத்தாலேயும் தண்ணி வர வழியெல்லாம் அடைஞ்சு போய்டுத்து. நல்ல தண்ணி இல்லாதது மட்டுமில்லை இன்னிக்கு அந்த அழுக்கு தண்ணி தேக்கத்துனாலே கொசு தொந்தரவும், நாத்தமும் தான் மிச்சம்! எல்லாரும் சும்மா புலம்பிண்டே இருந்தா மட்டும் போறுமா? ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கறதை உன் பொண்ணு நன்னா புரிய வைச்சுட்டா. அதான் இந்த ஐடியா,” என்றார் அத்திம்பேர். கேட்கக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
“சந்தியா, அத்தையோட இன்னோரு புரட்சி என்ன தெரியுமா? கல்யாணத்துலே தேங்கா வெத்தலை பாக்கெல்லாம் கிடையாதாம். எல்லாருக்கும் ஒரு மரக் கன்னு தரப் போறா அத்தை” என்றாள் அம்மா.
“அத்தை... நீ எங்கேயோ போயிட்டே அத்தை” என்று நான் சிரித்தபடி அத்தையைக் கட்டிக் கொண்டேன்.
அடுத்த முறை சென்னைக்கு வரும் பொழுது நிச்சயம் ஒரு நல்ல மாறுதல் இருக்கும் என்ற நம்பிக்கையுடனும், நிறைவான மனத்துடனும் சென்னையை விட்டு கிளம்பினோம்.
இந்த கதையைப் பற்றிய சில குறிப்புகள்
இந்த கதையில் விவரித்த பல விஷயங்கள் உண்மை:
1. ஷ்ருதியின் பள்ளி என்று விவரிக்கப்படும் பள்ளி United World College of South East Asia. அவர்கள் உண்மையிலேயே தங்கள் மாணவர்களைப் பல சமூக தொண்டில் ஈடுபடுத்துகிறார்கள். இந்தியாவிலும் சில சமூக நல நிறுவனங்களுடன் சேர்ந்து அந்தப் பள்ளி மாணவர்கள் தொண்டாற்றியிருக்கிறார்கள். இன்னமும் தொடர்ந்து செய்கிறார்கள்.
பள்ளியின் வலைத் தளம்
2. ஷ்ருதியின் குறிப்புகள் காணப்படும் வலைத்தளம் சிங்கப்பூர் சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சின் தளம்
3. திரு. ராஜேந்தர் சிங்கின் அமைப்பு பற்றிய தளம்
4. சென்னையில் செயல்படும் ஆகாஷ் கங்கா மழை நீர் சேமிப்பு மையத்தின் தளம்
5. கோயம்புத்தூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனங்களும், பொது மக்களும் சேர்ந்து பல தண்ணீர் தேக்கங்களையும், குளங்களையும் சீர் செய்து, ஆழமாக்கி தண்ணீர் பஞ்சத்தை போக்க தங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அதன் பலனாக இன்று கிருஷ்ணம்பட்டி டாங்கில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. அந்த இயக்கத்தின் பெயர் ப்ராஜெக்ட் சிறு துளி. அவர்களின் சாதனை தமிழகமெங்கும் பரவ வேண்டும். ஒரு சின்ன வழியிலாவது என் பாராட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையில் இந்த கதைக்கு சிறு துளி என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்த இயக்கத்தைப் பற்றிய செய்தி 22ம் மார்ச் 2004 ஹிண்டுவின் மெட்ரோ ப்ளஸ் பகுதியில் வந்துள்ளது. வலைத்தளம்
6. கோயில் குளங்களை பற்றிய ஒரு ஆய்வு பேப்பர்
25 Comments:
நல்ல விவரங்கள் ரம்யா.
இங்கே அனேகமாக அமெரிக்க பள்ளிகளில் dominican Republic சென்று குழந்தைகள் அங்கே சுற்ருப்புறத்தை சுத்தம் செய்வது, அங்கே உள்ள குழந்தைகளுக்கு குடிநீரின் சுத்தம் பற்ரி சொல்வது என்றூ செய்து வருகிறார்கள். கஷ்டப்படுகிறவர்களைவிட வெளியே உள்ளவர்கள் இன்னும் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று அறிய ஆர்வமாக இருக்கிறது.
என்னால் முடிந்தது ஒரு + போடுவது; போட்டுட்டேன்!
ரம்யா, இன்று காலையில்தான் சுரேஷ்(பினாத்தல்) அவர்களுடன் சென்னையில் பல குளங்கள் தூர் வாரப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்
பட்டுள்ளது, இந்த மழையில் நன்றாக தண்ணீர் சேர்ந்திருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இது மிக நல்ல காரியம் என்று பேசிக் கொண்டு
இருந்தோம். பார்த்தால் அதே விஷயம்.
பரிசு வராவிட்டால் என்ன, கதை அருமை! ஏதாவது மெலோடிராமா கதைக்கு பரிசு தந்திருப்பார்கள் :-)
இந்த மாதிரி பள்ளிகள் இருந்தால், குழந்தைகள் வளரும்பொழுதே, படிப்பில்லாமல் மற்ற நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்வார்கள்.
இங்கு எடுத்து போட்டதற்கு நன்றி.
பத்மா, தருமி சார், உஷா பொறுமையா படிச்சதுக்கு முதல் நன்றி!
//கஷ்டப்படுகிறவர்களைவிட வெளியே உள்ளவர்கள் இன்னும் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று அறிய ஆர்வமாக இருக்கிறது.//
பத்மா, இதை பத்தி நானும் யோசிச்சிருக்கேன். வெளியே இருக்கிறவங்களுக்கு இந்த நிலைமையை மாத்த முடியும்ங்கிற நம்பிக்கை இருக்கு. அங்கேயே இருக்கிறவங்களுக்கு ஒரு hopelessness வந்துடுதுன்னு நான் நினைக்கறேன். தவிர, தினம் இந்த அவலங்களை பார்க்கிறவங்களுக்கு ஒரு விதமான desensitization வந்துடுதுன்னு நினைக்கிறேன்.
//பரிசு வராவிட்டால் என்ன, கதை அருமை!//
ரொம்ப நன்றி உஷா!
// ஏதாவது மெலோடிராமா கதைக்கு பரிசு தந்திருப்பார்கள் :-)//
எப்படி இவ்வளவு கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?
தருமி சார், - வோட்டுகளுக்கு நடுவே + போட்ட உங்க நல்ல உள்ளத்துக்கு நன்றி!! :-)
Ramya - Deepavali valthukal :)
ரம்யா + போட்டிருக்கிறேன்.
சிறந்த கதை.
ஒரு முறை பாரதியின் கவிதைக்கு கூட முதல் பரிசு கிடைக்கவில்லை.
ஆனால் காலங்கள் கடந்தும் வாழ்கிறார்.
பத்மா,நீங்கள் கூறியது போல்
வெளியில் உள்ளோரால்,ஆதாயம் எதிர்பாராது காரியங்கள் செய்ய முடியும் என்பதே உண்மை.
மேலும் இயலாமை என்று சிரம பழக்கத்திற்கு பழகி விடுகிறார்கள்.அதனாலும் இயலவில்லை.
ரம்யா,உங்களைக் குறித்த,உங்கள் பொது நல சேவை குறித்த செய்திகள் இன்னும் முழுவதுமாய் வலைப்பதிவர்களிடம் சென்று சேரவில்லை.பதிவில் நீங்கள் எழுதும் பொது நல பதிவுகள்
மட்டுமே அறிவர்.அதனை விடுத்து,உங்கள் சேவையால் பலன் அடைந்தவர்கள்,அவர்கள் முகங்களில் உங்கள் பெயரினைக் கேட்டதும் வரும் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நாள் தமிழ்மண வலைப்பதிவர்களுக்கு அறியக்கிடைக்கும்.
விளம்பரம் எதிர்பாராத தன்மை
வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை ரம்யா.
மகிழ்கிறேன் தோழி.
//ஒரு முறை பாரதியின் கவிதைக்கு கூட முதல் பரிசு கிடைக்கவில்லை//
மது, உங்க அன்பு புரிகிறது மது..ஆனா இது ரொம்ப, ரொம்ப ஜாஸ்தி!! :-)
//விளம்பரம் எதிர்பாராத தன்மை
வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை ரம்யா//
நீங்களும் அதே மாதிரி விளம்பரம் இல்லாம தானே உங்க நேரத்தை பயன்படுத்தறீங்க..நிறைய பேர்கள் இப்படி இருக்காங்க மது. இன்னோன்னு, நான் false modestyலே சொல்லலை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு மது. உங்க அன்புக்கும் ரொம்ப நன்றி!
ரம்யா,
சத்தமில்லாமல் நீங்க நிறைய நல்லது பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரியுது.
பொது சேவை சம்பந்தமா நிறைய தகவல்கள் வச்சுருக்கீங்க. உங்களின் தகவல்களை எல்லாம் நான் தனியாக சேர்த்து வைத்து வருகிறேன்.
நல்ல செய்திகள் நிறைந்த கதை.
NALLAK KATHAI>>>>AAVI AARUTHAL PARISUTHAAN KODUTTHATHAA?
ரம்யா,
இது 'கதையல்ல நிஜம்'
அருமையா இருக்கு. இந்தக் கதையிலே ஒரு சினிமாக்காரர் குளத்தைத்தூர்வாரறதா வந்திருந்தா முதல் பரிசு உங்களுக்கு வந்திருக்கும்:-)
கல்வெட்டு..மிக்க நன்றி. செய்திகள் உபயோகமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி.
நன்றி ஹமீத்...உஷா சொன்னா மாதிரி இதுலே மெலொட்ராமா இல்லை. ஆறுதல் வந்ததே ஆச்சர்யம் தான்! :-)
துளசிக்கா, அடுத்த கதை அப்படி எழூதிடுவோம்!! :-)
டி ராஜ்...ஆமா ரொம்ப யோசிக்கிறீங்க!! :-)
தன்யா ஷ்ருதி இல்லை. ஆனால், நானும் நண்பர்களும் சேர்ந்து நான் TBS மூலம் சில குளங்களை புதுப்பிக்க பண உதவி செய்திருக்கிறோம். தற்பொழுது DHAN Foundation உதவியோடு ராமநாத் districtல் சில கிராமங்களில் ஊரணிகளை புதுப்பிக்கும் ப்ராஜெக்டை மூன்று குழுக்கள் (என்னையும் சேர்த்து) ஏற்றுக் கொண்டிருக்கோம். அதனால் இந்த டாபிக்கை பற்றி ஓரளவு அனுபவம் உண்டு.
I've read several of your posts though I've not posted my comments so far.
I would like to add your blog to my blog (http://ennulagam.blogspot.com) as one of my favourite blogs.
Do you have any objection? You have not published your email in your profile. That is why I am writing this.
my email is tbrjoe@yahoo.co.uk
please respond to my email address.
thanks and congrats
ஜோசப் அவர்களே, உங்க வருகைக்கு மிக்க நன்றி. மின்மடல் அனுப்பியிருக்கேன்.
This comment has been removed by a blog administrator.
கதை என்பதை விட யாவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியவிடயங்களில் இதுவும் ஒன்று என்று தான் சொல்வேன்.
இயற்கை வளங்களை நாங்கள் சுறண்டி பயன்படுத்திக்கொண்டு. வருங்கால சந்ததியினரை பிச்சைக்காரர் ஆக்குகிறோம். தேவையற்ற செலவுகள் விரயங்களைத்தவிர்த்து இப்படி நல்லதாய் ஏதாவது பண்ணலாம். நல்ல கதை. நன்றியுடன் வாழ்த்துக்கள் ரம்யா. :)
ரம்யா, மிக நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள். என் நண்பர்களுக்கெல்லாம் இந்த வலைப்பதிவின் சுட்டியை அனுப்பியுள்ளேன். நல்ல விஷயங்களை பத்து பேர் படித்தால் அதில் ஒருவர் இருவராவது செயலில் இறங்குவார்கள் இல்லையா?
கயல்விழி, நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கீங்க. நன்றி.
குமரன், நன்றி. நீங்க சொல்றது உண்மை. எல்லோரும் கொஞ்சம் முயற்சி எடுத்தாலே போதும்.
ரம்யா,
நம்ம குமரன் சொல்லி தான் இங்கு வந்து படித்தேன். நல்ல ஒரு விசயத்தை சொல்லியிருக்கீங்க. நான் கூட சென்னையில் இருக்கும் போது என் மனைவியை கடைக்கு போனால் பை எடுத்து போ, பாலிதீன் கவர் வாங்காதே என்று கண்டிசன் போட்டு சொல்லியிருக்கிறேன். அவளும் 'ஆமாம்! நீங்க ஒருத்தரால தான் எல்லாம் நல்லா ஆக போகுதா" அப்படிம்பா. ஆனால் பாலிதீன் கவர் பயன் படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்திருக்கிறேன். சென்னையில் தரையை தோண்டி பார்த்தால் தெரியும். ஒரு அடிக்கு எவ்வளவு பாலிதீன் கவர் இருக்கிறது என்று. அப்புறம் ஒரு நாள் முழுதும் மழை பெய்தாலும் தண்ணீர் தரைக்குள் இறங்காமல் நேரே கடலுக்கு ஓடி விடும். அப்புறம் கோடையில் வழக்கம் போல தண்ணீர் பஞ்சம். என்ன தான் கஷ்ட பட்டாலும், கடைக்கு ஒரு கூடை எடுத்து கொண்டு போவது கூட Indecency ஆகி போய் விட்டது நகர மக்களுக்கு. இதற்கு என்ன செய்ய?.
தண்ணீண்னு நீங்க சொன்னதும் இன்னொரு விசயம் நினைவுக்கு வந்தது. எங்க கிராமத்துல மொத்தமே 40 வீடு தான். அதுல ஒருத்தர் கொஞ்சம் வசதி. மாருதி கார், குவாலிஷ், சுமோ இப்படி வண்டி வைத்திருக்கிறார். இப்போ என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார் தெரியுமா. ஊரில் இருக்கும் பாதி நிலத்தை வாங்கி விவசாயம் பார்க்கிறார். எங்கள் ஊர் விவசாய நிலமே கிடையாது. ஊரில் குளமோ, ஏரியோ கிடையாது. எவரும் விவசாயம் பார்ப்பதும் கிடையாது. அவர் பொழுது போகாமல் அப்படி செய்வதற்க்கு ஒரே காரணம் "இலவச மின்சாரம்". 24 மணி நேரமும் மோட்டார் ஓடிக்கொண்டே இருக்கும். பலன், எங்கள் ஊரில் நிலத்தடி நீர்மட்டம் சுத்தமாக குறைந்து விட்டது. நான் சிறுவனாக இருக்கும் போது எல்லாம், சில அடிகளிலேயே வரும் நீர், இப்போது பல அடி தோண்ட வேண்டிய இருக்கிறது. மழை பெய்தாலும் கிணறு நிறைவது இல்லை. ஒரு கோடீஸ்வரனுக்கு நம் நாட்டில் இலவசமாக 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. இதை அரசு கஷ்டப்படும் ஏழை விவசாயிகளுக்கு கொடுத்தாலே இந்த மாதிரி தண்ணீர் பிரச்சினைகள் குறையும்.
இது என் மனதில் நினைத்து கொண்டிருக்கும் சில விசயங்கள்.இடம் கிடைத்தது. இங்கே கொட்டிவிட்டேன்.
சிவா, உங்க வருகைக்கு நன்றி. ஆதங்கம் புரிகிறது.
நம்ம ஊரில் உருப்படியாக பண்ணிக் கொண்டிருந்த விஷயங்கள்:
பேப்பர் பொட்டலங்கள் (newspaper recycling)
வாழை இலை சாப்பாடு..ஒரு கல்யாண வீட்டில் மட்டும் இப்போ எவ்வளவு ப்ளாஸ்டிக் சமாசாரங்கள் தெரியுமா?
அனாவசிய ப்ளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தாமல் அவரவர்கள் துணி பைகள் எடுத்து செல்வது.
இப்போ என்னடாவென்றால் காய்கறி கடைக்காரர் கூட ப்ளாஸ்டிக் பை தருகிறார்.
அதே போல் இந்த இலவச மின்சாரமும் சேர வேண்டியவங்களுக்கு போகாமல் இப்படி வீணாவது மிகவும் வருந்த வைக்கும் விஷயம். சின்ன சின்ன முயற்சிகள் நாம எல்லாரும் எடுத்துகிட்டே இருக்கிறதை தவிர வேற வழி இல்லை. ஒரு நாள் அது ஒரு பெரிய விஷயமா மாறும் இல்லையா?
Dear Ramya,
Good wishes.Very nice thoughts. When people keep planning for big things like connecting all rivers and so,as u mentioned ground work should be on things like this. Just wanted to add one more point. I do not agree with people those who stay in India, have less hope and live in despair. Make no mistake, irrespective of what so ever we write and speak, it is the people on the field are the "real" perfomers.On field work can never be matched. DreamIndia2020 will definitely become possible. I am very happy that there are people like you who does their bit even when they have family responsibilties.
Innum seyya vendyathu niraya ullathu endru sonnirgaley......ulimate truth. Ungalluku Thaalai Vannagukiren.
Anbudan,
Nata.
Dear Natarajan,
Thanks for your comments. I am certainly not trying to underestimate or put down the "real" performers.
What I meant was, considering the number of people India has, it is still a small percentage of them who do some very active community work. For eg. even if three/four families take responsibility for their street to remain clean, can you imagine how many roads and streets will be clean in India? So, one does feel if people have stopped caring or have lost hope.
I certainly salute all the field workers who are doing fantastic work (my own friends, Anshu Gupta of GOONJ, Ilango Ramaswamy of Kuthambakkam are all examples. I know many more personally.)
Hallo Ramya,ref. by kumaran i visit u r site. ungal kathai nalla kathai than.ooru siriya karuthai vaithu nalla eduppu. indru chennai muzhukka thaneer thaneer thaneer. oru pottu kaintha nilam kidaiyathu. ithaiveda ungalukku veru parisu vendumo
Can anydody guide what this is all about.
I stumbled across this when I wanted some info on Ilango Ramaswamy.
I'm interested in starting a venture fund/angel investor (sort of an enabler and force multiplier) for social entrepreneurs and for NGOs.
Similar minded persons can reach me at narendra54@gmail.com
Post a Comment
<< Home