துருவங்கள்
(ஜனவரி 2005 அமுதசுரபில் பிரசுரமான வாமன கதை)
என் வீட்டில் ஒரு நவீனப் பெண்பார்க்கும் படலம். என் நெருங்கிய தோழி ரமா சிட்னியில் இருந்தாள். அவள் மகன் விகாஸ் நன்கு படித்த, பண்புள்ள பையன். தன் மகனுக்கு நல்ல பெண் வேண்டும் என்று அவள் சொன்ன உடனேயே இந்தியாவில் இருந்த என் அக்கா மகள் தியாவின் ஞாபகம் தான் எனக்கு வந்தது.
ஜாதகம் பொருந்தி, மற்றதேல்லாம் திருப்தியாக இருந்ததால் சிங்கப்பூரில் இருந்த என் வீட்டில் பெண் பார்ப்பது என்று முடிவாகியது. இருவருமே வெகு தூரம் பயணம் செய்ய வேண்டாம் மற்றும் இருவருக்கும் பொதுவான இடம் என்ற காரணங்கள்.
முதல் சந்திப்பு என் வீட்டில் நடந்தது. ஜோடிப் பொருத்தம் நன்றாகத் தான் இருந்தது. “நாங்கள் சிறிது வெளியே சென்று விட்டு சாயங்காலமாக திரும்பலாமா?” என்று கேட்டான் விகாஸ். ‘சரி’ என்று ஒப்புக் கொண்டோம்.
சாயங்காலம் திரும்பினர் இருவரும். உடை மாற்ற தியா உள்ளே சென்றதும் “என்ன விகாஸ்? அவளைப் பிடிச்சுருக்கா?” என்று கேட்டேன்.
“ஆண்டி.. நான் ஆஸ்ட்ரேலியாவிலே பிறந்து, வளர்ந்திருந்தாலும் அம்மா என்னை ஒரு இந்தியனா தான் வளர்த்திருக்கா. அதனாலே தான் நான் அரேன்ஞ்சுடு மாரேஜ்க்கு சம்மதிச்சேன். எனக்கு தமிழ் நல்லா பேச, எழுத தெரியும். வாரா வாரம் கோவிலுக்கு போவோம். நான் மிருதங்கம் கத்துண்டு கச்சேரிகள்லே கூட வாசிச்சிருக்கேன். தியா என்னடான்னா லஞ்சு சாப்பிடும் பொழுது பீர் குடிக்கிறா, தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்லிட்டா. இன்னிக்கு எந்த நைட் கிளப்புக்கு போலாம்ன்னு கேட்கறா? ஸாரி ஆண்டி.. இந்த மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னா நான் இந்தியாவிலே பொண்ணு பார்க்க வேண்டாம். என் கூடப் படித்த ஆஸ்ட்ரேலியப் பெண்களே நிறையப் பேர் இருக்காங்க..,” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
“அடக் கடவுளே! இந்தப் பொண்ணிடம் என்ன சொல்வது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே “கிளம்பிட்டானா அந்த அம்மாஞ்சி! எங்கே சித்தி புடிச்சே இவனை? வெளிலே ஜாலியா எங்கேயாவது போலாம்னு பார்த்தா முதல்லே மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிண்டு போனான். அப்புறம் சிராங்கூன் ரோட்டிலே மல்லிப்பூ வாங்கி தலையிலே வைச்சுக்கோங்கிறான். கொஞ்சம் விட்டா ஒரு பாவாடை தாவணி வாங்கிக் கொடுத்து என் பேரை அங்காள பரமேஸ்வரின்னு மாத்திடுவான் போல இருக்கு. ஆளை விடு! இதை விட மாடர்ன் பையன் எனக்கு சென்னையிலேயே கிடைப்பான்,” என்றாள் தியா.
நான் ‘திரு திரு’ வென்று விழித்தேன்!
4 Comments:
haha Ramya...
அன்புள்ள ரம்யா,
எல்லாம் காலம் போறபோக்கு:-)))
என்றும் அன்புடன்,
துளசி.
சினேகிதி, ரசித்தது குறித்து மகிழ்ச்சி.
உண்மை தான் துளசியக்கா:-))
நல்ல கதை போங்க !! (நம்ம ஊரில் சொல்லும் style-ல் படிக்கவும் :)
Post a Comment
<< Home