"கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!"
"கங்கிராட்ஸ்.. நீங்க அப்பாவாகப் போறீங்க!”
(மங்கையர் மலர் - அக்டோபர் 2004)
சந்தோஷமான விஷயம் தான்! பொதுவா பிரசவமும், சின்ன குழந்தையை பராமரிக்கிறதும் அம்மாவோட வேலை தான் அப்படிங்கிறது ஒரு எழுதப்படாத ரூலா இருந்துதுங்க. ஆனா இப்போ இருக்கிற சூழ்நிலையிலே ஆணும் பெண்ணும் சமம்ன்னு பல ஆண்கள் ஒத்துக்கறாங்க. அப்படி ஒத்துகிற ஆண்கள் கூட சிலர் இந்த நேரத்திலே என்ன செய்யணும்ன்னு தெரியாம இருக்காங்க. உங்க வீட்லே அப்படி உதவணும் ஆசை இருக்கிற ஆணா இருந்தாலும் சரி, இதைப் பத்தி அதிகம் யோசிக்காத ஆணா இருந்தாலும் சரி, இந்தக் கட்டுரை அவங்களுக்குத் தாங்க. கொஞ்சம் படிக்கச் சொல்லுங்க, ப்ளீஸ்!
பொதுவா பிள்ளை உண்டாகியிருக்கிற ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாவும் மன ரீதியாவும் பல மாற்றங்கள் ஏற்படும்ங்கிறது தெரிஞ்ச விஷயம் தான். இது எவ்வளவு தூரம் அவங்களை கஷ்டப்படுத்த வாய்ப்பு இருக்குங்கிறதை முதல்லே தெரிஞ்சுக்கங்க. எப்படி தெரியுமா? ஒவ்வோரு டாக்டர் செக்-அப்புக்கும் கண்டிப்பா கூடப் போங்க. மனைவி ஏதாவது உடல் அசெளகரியங்களை உங்க கிட்டே சொல்லியிருந்தா கண்டிப்பா டாக்டர் கிட்டே அதைப் பத்தி கேளுங்க. வேற எதாவது சந்தேகம் இருந்தாலும் கூச்சப் படாம கேளுங்க. ஒரு டி.வி இல்லே கம்ப்யூட்டர் வாங்கினா எவ்வளவு கேள்விக் கேப்பீங்க? இது உங்க குழந்தைங்க! நீங்க அக்கறை எடுத்துக்காம வேற யாரு எடுத்துப்பாங்க? ‘இதேல்லாம் பொம்பளைங்க சமாசாரம்’ன்னு ‘நைஸா’ நழுவப் பார்க்காதீங்க.
முக்கியமா நீங்க கூட போனாதாங்க உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக வேற யாரும் பார்க்க முடியாத ஒரு படத்தை நீங்க பார்க்க முடியும். அதாங்க அல்ட்ரா ஸவுண்ட் பொழுது உங்க குட்டி பாப்பா ஜோரா அம்மாவோட வயத்துலே நீந்தற காட்சி! இதை மிஸ் பண்ணலாமா? மனைவி சொல்லும் பொழுது ஏற்படற சந்தோஷத்தை விட அதைப் பார்க்கிறதும், இதயத் துடிப்பை கேட்கறதும் ஒரு விவரிக்க முடியாத அனுபவம் தான்!
இப்பேல்லாம் குழந்தை பிறப்பு பத்தி இணையத்திலும் சரி, புத்தக கடைகளிலும் சரி ஏராளமான விஷயம் இருக்கு. ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி படிச்சு உங்க மனைவி எவ்வளவு விதமான மாறுதல்களை சமாளிக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
முதல் மூணு மாதத்துலே உங்க முக்கியமான வேலை என்ன தெரியுமா? மனைவி நல்ல சத்தான உணவு வகைகளை சாப்பிடறாங்களான்னு கண்காணிக்கிறது தான். நிறைய பால், பழம் மற்றும் பழச்சாறு, பச்சை காய்கறிகள் எல்லாம் வாங்கி அசத்துங்க. முக்கால் வாசி பெண்களுக்கு இந்த மூணு மாதத்துலே வயத்த பிரட்டலும், வாந்தியும் இருக்கிறதுனாலே சாப்பாட்டைக் கண்டாலே பிடிக்காது. ஓரளவு என்ன பிடிக்கிறதுன்னு பார்த்து, அதை அவங்களை சாப்பிட வைக்கிறது நல்லது. இந்த நல்ல உணவு பழக்கம் பத்து மாதங்களுக்கும் உபயோகமா இருக்கும். பலருக்கு மூணு மாதம் முடிந்த உடனே மசக்கை பிரச்சனை போய்டும். சிலருக்கு இன்னும் சில மாதங்கள் தொடரலாம்.
இதை தவிர சில சின்னச் சின்ன உடல் பயிற்சிகள் செய்யறது, வாக்கிங் போறது போன்ற விஷயங்களைச் சேர்ந்து செய்யலாம். “இதுக்கேல்லாம் எங்கே நேரம்?” அப்படின்னு அலுத்துகாதீங்க. காலையிலே கொஞ்சம் சீக்கிரமா எழுந்துக்கலாம் இல்லே சாதாரணமா செய்யற வேற வேலைகளை கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்கலாமே!
மாசம் ஆக ஆக மனைவிக்கு சில வலிகள் வருவது சகஜம். “உனக்கு என்னிக்கு தான் வலி இல்லாம இருந்தது?” அப்படின்னு சலிச்சுகாம புத்தகத்துலே இல்லே இணையத்துலே படிச்சு எதனாலே அங்கே வலிக்கிறது, என்ன செஞ்சா வலி போகும்ன்னு உபயோகமா தகவல்களை தரலாம். குறைந்தபட்சம், ஆறுதலா நாலு வார்த்தை பேசலாம்.
பொதுவா வலிக்கிற இரண்டு பகுதி கால் மற்றும் முதுகு. தீவிரமான அல்லது அசாதாரணமான வலின்னா டாக்டர் கிட்டே கண்டிப்பா போகணும். களைப்பினாலே வர வலின்னா தைலம் அல்லது ஆயிண்மெண்ட் தேய்ச்சு விடலாம். உங்களைத்தான் சொல்லறேன். மனைவி காலைப் பிடிக்கிறதை அவமானமா நினைக்காதீங்க. உங்க வாரிசை பத்து மாசம் சுமக்கறவங்க. நீங்க காலைத் தொட்ட உடனேயே வலியெல்லாம் பறந்து போய்டாதா?
வலியைப் பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா ஒரு மூட்டையிலே கிட்டத்தட்ட எட்டு கிலோ வரா மாதிரி சாமான்களை நிரப்பிக்கங்க. அதை வயித்தை சுத்தி இறுக்கி கட்டிக்கிங்க. ஒரு இருபத்தி நாலு மணி நேரம் அந்த மூட்டையோட எல்லா வேலையும் பண்ணுங்க. இப்போ லேசா புரியற மாதிரி இருக்கா ஏன் வலி வரதுங்கிற காரணம்?
இந்த சமயத்துலே பொதுவா பெண்களுக்கு சில பயங்கள் வரலாம். “நமக்கு எதாவது ஆயிட்டா குழந்தையை யாரு பார்த்துப்பாங்க? குழந்தை நல்ல ஆரோக்கியமா பொறக்குமா? என்னாலே நல்லபடியா வளர்க்க முடியுமா?” போன்ற பயங்கள்! “அதனாலே என்னம்மா? குழந்தைக்காக நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா?” அப்படின்னு அசட்டு பிசட்டுன்னு பதில் சொல்லாம இருங்க. “சீ..சீ பைத்தியம். அதேல்லாம் ஒண்ணும் ஆகாது. வாயை மூடு” அப்படின்னு சொல்றதும் முழுமையான பதில் இல்லை.
முதல்லே இதுக்கு மருத்துவரீதியா ஏதாவது பின்னணியோ, வலுவான காரணமோ இருந்தா மருத்துவரிடம் ஆலோசனை செய்யறது நல்லது. மருத்துவர் சில டெஸ்ட்கள் செய்து இந்த பயங்களை போக்குவார் அல்லது தீர்வு சொல்லுவார். சாதாரணமா காரணமே இல்லாம வர பயம்ன்னா, அதைப் பத்தி மனைவியிடம் ஓபனா பேசுங்க. முதல் விஷயம் இந்த பயம் வரது சகஜம்னு புரிய வைங்க. நம்ம தழிழ் சினிமாலேயும் சரி, ஸீரியல்களிலும் சரி பிரசவம்னா பெண்ணுக்கு மறு பிறவி அப்படிங்கிற கருத்து உண்டு. முக்கியமா பிரவிச்ச உடனே உயிரை விடற ஹீரோவின் தாய் அல்லது மனைவி காரக்டர்ஸ் நிறைய உண்டு. இதைப் பார்த்து இந்த மாதிரி பயங்கள் வரலாம். நீங்க படிச்ச விஷயங்களிலிருந்து புள்ளி விவரங்களை எடுத்துவிடுங்க. இதோ சாம்பிளுக்கு ரெண்டு, “ஒரு நாளைக்கு உலகத்துலே எவ்வளவு குழந்தைகள் பிறக்கிறது தெரியுமா? கிட்ட தட்ட மூணரை லட்சம். குழந்தை பிறக்கிறதுங்கிறது ரொம்ப இயற்கையான ஒரு விஷயம்” அப்படின்னு சொல்லலாம். இல்லேன்னா “அந்த காலத்துலே மருத்துவ வசதிகள் கம்மியா இருக்கும் பொழுதே நம்ப பாட்டி, அம்மா எல்லாரும் பெத்துக்கலையா?” அப்படின்னும் சமாதானம் சொல்லலாம். மனைவியோட பயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பகுத்தறிவோட அணுகினாலே அவங்களுக்கு பயமேல்லாம் பறந்து போய் நம்பிக்கையும், உற்சாகமும் வந்துடும்.
டாக்டர் கிட்டே எந்த ஆஸ்பத்திரிலே டெலிவரி நடக்கப் போறதுங்கிறதை கேட்டு தெரிஞ்சுகிட்டு ட்யூ டேட்டுக்கு பத்து நாள் முன்னாடியே ஆஸ்பத்திரி எங்கே இருக்கு, லேபர் வார்டு எங்கே இருக்கு, மருந்து எங்கே வாங்கணும், அட்மிட் பண்ணும் பொழுது என்னேல்லாம் கேப்பாங்க அப்படின்னு தெரிஞ்சுண்டு வந்தீங்கன்னா வலி எடுத்த உடனே டக்குனு எல்லாம் பண்ண சுலபமா இருக்கும்.
மனைவிக்கும், வீட்லே இருக்கிற மத்தவங்களுக்கும் தெரிஞ்ச ஒரு இடத்துலே உங்க ஆபீஸ் போன் நம்பர், செல் போன் நம்பர், டாக்டரோட நம்பர், நல்ல நண்பர் அல்லது உறவினரோட நம்பர் எல்லாம் ஒரு லிஸ்ட் எழுதி வைச்சுடுங்க. எல்லா நல்லபடியா நடக்கும். ஆனா திடீர்னு ஒரு அவசரம்னா தயாரா இருக்க வேண்டாமா?
குழந்தை பிறந்த பிறகு போஸ்ட் பார்டம் ப்ளூஸ் (post-partum blues) அப்படின்னு ஒரு விஷயம் இருக்குங்க. அதாவது சில நாட்கள் அம்மாக்கு மூட் ரொம்ப சோகமா இருக்கும். ‘டக்’குனு அழுகை வரும். “உனக்கு அழறத்துக்கு ஒரு காரணம் வேற வேணுமா?” அப்படின்னு கோபப்படாதீங்க. அம்மாவோட உடம்புலே சில ஹார்மோன்களாலேயும் இல்லே சரியா சாப்பிடாம, தூங்காம குழந்தை கவனிப்பிலேயே கவனம் செலுத்தறதுனாலேயும் இது வரலாம். சிலருக்கு ரொம்ப எதிர்பார்த்துகிட்டிருந்த விஷயம் (அதாங்க பிரசவம்) முடிஞ்சு போச்சேன்னு ஒரு வெறுமை வருமாம். இந்த நேரத்துலே கொஞ்சம் பொறுமையா அன்பா இருங்க. மனைவிக்கு பிடிச்ச பாட்டு காஸெட் அல்லது சினிமா வாங்கிண்டு வந்து மனசை திசைத் திருப்ப பாருங்க. குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரத்துலே நீங்க பக்கத்துலே இருந்து நல்ல புத்தகங்களை வாய்விட்டுப் படிக்கலாம் (தனியா பால் கொடுக்கும் நேரத்துலே மனசிலே சில பயங்கள் வரதுனாலே சில சமயம் இந்த மன அழுத்தம் வர வாய்ப்பு இருக்கு). குழந்தைக்கு பால் கொடுத்த உடனே நீங்க குழந்தையை வாங்கிண்டு அவங்களை நல்லா ரெஸ்ட் எடுக்கவிடுங்க. இரண்டு, மூணு நாட்கள்லே கண்டிப்பா சகஜ நிலைக்கு வந்திடுவாங்க.
எந்த சமயத்துலேயும் “ஆமா.. உலகத்திலேயே நீ தான் அதிசயமா குழந்தை பெத்துண்டியாக்கும்?” அப்படின்னு விளையாட்டுக்கு கூட உங்க மனைவியை கேக்காதீங்க.
குழந்தை உருவாகிறது கண்டிப்பா ஒரு அதிசயம் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் அது ரொம்ப பர்ஸனல் அனுபவம். இந்தியாவின் ஜனத் தொகை ஒரு பில்லியனைத் தொட்டாலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷம் தான். அந்த பொக்கிஷம் உருவாகி உங்க கையிலே தவழற வரைக்கும் உங்க மனைவிக்கு பக்கபலமா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்!
-------------------------------------------------
32 Comments:
இதுபோன்ற பதிவுகள், தமிழ்மணத்தை மேலும் அர்த்தப்படுத்துகிறது.
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
very nice.
thankyou very much for the post.
அருமையான பதிவு.
சமீபத்தில் வெளிவந்த கருத்துள்ள பதிவுகளில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன்.
கண்டிப்பாய் நேரம் வரும் போது மேற்சொன்னவற்றைக் கடைபிடிப்பேன்.
சுதர்சன்.ஜீ
என் போன்று புதிதாய் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர்களுக்கு அவசியமான பதிவு.
மிக்க நன்றி.
அன்புள்ள நண்பர் அன்பு, தோழி ஷ்ரேயா, திரு. சுதர்சன் கோபால் மற்றும் கோபி, உங்கள் அனைவருக்கும் நன்றி.
//கண்டிப்பாய் நேரம் வரும் போது மேற்சொன்னவற்றைக் கடைபிடிப்பேன்.// சுதர்சன் இதைப் படிக்கும் பொழுது நிஜமாகவே மகிழ்ச்சியாக இருந்தது.
கோபி உங்கள் புகைப்படத்தை பார்த்தால் இன்னும் வெகு நாட்கள் கழித்து தான் திருமணம் போல இருக்கிறதே :-))
மிக்க நன்றி. அருமையான பதிவு.
ரம்யா...
கோபி வயத்துள புளியைக்கரைக்காதீங்கோ...
செப்டம்பர் 7, 2005
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி, பரணீ.
அன்பு, நீங்க தொலைநோக்கு பார்வை உள்ளவர்னு ஒப்புக்கறேன். அதுக்காக செப்டம்பர்ல சொல்ல நினைச்சதை இப்பவே சொல்லிட்டீங்களா? :-)
ரம்யா! கலக்கிட்டேள் போங்கோ !! பயனுள்ள பதிவு !
தெரிஞ்சவங்க சொன்னது:
எனக்கு பிரசவ நேரம் Epidural Injection போட்டபிறகும் 14 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகுதான் மகள் பிறந்தாள்.நான் அவஸ்தை படுறதை எல்லாம் பக்கத்தில இருந்து பார்த்தவர் என் கணவர்.2 மாதத்தில அவற்ற தங்கைச்சிக்கு சிசேரியன் என்றவுடனே ஐயோ பாவம் எவ்வளவு வலிச்சிருக்கும் என்று ரொம்பக்கவலைப்பட்டார் பக்கத்தில இருந்த என் அக்கா சொன்னா கிடக்கிறதை தூக்கி எறியணும் போல இருக்கு என்று.
நல்ல பதிவு...தொடரட்டும் உங்கள் சேவை.
மோகன்
சோலை, மோகன், பாண்டி அனைவருக்கும் நன்றி. சினேகிதி, நீங்க கேட்டதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இதே டாபிக்லே தோழி ஜெயந்தி சங்கர், தையல்னு அருமையான ஒரு சிறுகதை எழுதியிருக்காங்க. அதே போல் நண்பர் அருள்குமரனும் நல்ல கதை ஒண்ணு எழுதியிருக்கார். நான் கொஞ்சம் technologically challenged. அதனால் எழுதும் பொழுதே இந்த hyperlink தர விஷயமேல்லாம் இன்னும் தெரியாது. அவர்களின் சைட் முகவரிகள்;
http://jeyanthisankar.blogspot.com/2005/03/blog-post_21.html
http://www.shockwave-india.com/tamil/blog/2004_07_01_archive.htm
மிக்க நன்றி, மூர்த்தி.
சரவணன், டெலிவரி டைம்லே ஊருக்கு போவீங்கன்னு நம்பறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
நேர்த்தியானப் பதிவு,
//*இந்தியாவின் ஜனத் தொகை ஒரு பில்லியனைத் தொட்டாலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷம் தான்.*//
நீங்கள் சொல்லிய விதம் மிக அழகு!
மிக்க நன்றி, திரு. அபூ முஹை
கொஞ்சம் நீண்ட பதிவென்றாலும் நிச்சயமாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நல்ல பதிவு.
பாதுகாக்க வேண்டிய பயனுள்ள யோசனைகள். பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ரம்யா அவர்களே!
வீ எம்
மிக்க நன்றி திரு. வீ. எம்.
இந்த கட்டுரை மங்கையர் மலரில் பிரசுரமான பொழுது, 'பெண்கள் பத்திரிக்கையில் வந்து என்ன பயன்?' என்று சில நண்பர்கள் கேட்டார்கள். ப்ளாகின் மூலம் பல ஆண்கள் இதை படித்தது மிக்க மகிழ்ச்சி.
(மங்கையர் மலரை சில ஆண்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்)
மிகவும் உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்.
நன்றி, திரு. பி.பி. சரவணன்
அருமையான ஒரு விசயத்தை அற்புதமாகச்சொல்லி இருக்கின்றீர் ரம்யா, எனக்கு ஒரு சந்தேகம், என் அடுத்த ஆராய்ச்சி செயற்கை கருப்பை அல்லது கருப்பை மாற்று அறுவை சிகிச்சை பற்றி, அது குறீத்து ஏதேனும் கட்டுரை உண்டா உங்களிடம்??? கருப்பை இல்லா மகளிருக்கு இந்த ஆராய்ச்சி ஒரு உபயோகமானதாக இருக்குமென எண்ணுகிறேன்....
ஸ்ரீஷிவ்...
ஸ்ரீஷிவ், நன்றி.. நீங்கள் சொல்லும் topicல் நான் கட்டுரைகள் பார்த்ததில்லை. பார்த்தால் link அனுப்புகிறேன்.
வெட்டி விவாதங்களும் வேண்டாத சிந்தனைகளும் விரவி இருக்கும் இந்த தமிழ் மனத்தில்
வாழ்க்க்கை சிந்தனை வழிமுறைகளும் வருகின்றதே . வாழ்த்துக்கள் ரம்யா இன்னும் விவரமாக ஆனந்த விகடன் பதிப்பில் "உச்சி முதல் உள்ளங்கால் வரை" ஜனன தொழிற்சாலை என்றொரு பெரிய கட்டுரை எல்லொருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளதுதொடரட்டும் உங்கள் தூய பணி
Ramya,
The manner in which you have put down your thoughts makes this posting all the more nice and worthwhile to read.
இந்தப் பதிவினை நான் சேமித்து எனது பிற்காலத்தில அதாவது ஒரு 10 வருடங்களுக்கு பிறகு பயன்படுத்தி கொள்கிறேன். ஏனெண்டால் நான்இப்ப சின்னப் பெடியன்..
செயகுமார், டி ராஜ், பாலா, சய்ந்தன், ரொம்ப நன்றி.
அருமையான .. தேவையான பதிவு .. இப்போதுதான் மனைவியிடமும் படித்துக்காண்பித்து check பண்ணிக்கொண்டேன் ..நன்றி ரம்யா
நன்றி, LL Dasu, மனைவி என்ன சொன்னாங்க?
மிகவும் அருமையான பதிவு ரம்யா. எடுத்துக் கொண்ட விடயமும், அதை நீங்கள் சொல்லிருக்கும் விதமும் அருமை, அருமை.
கயல், பதிவு பிடித்தது குறித்து மகிழ்ச்சி...ரொம்ப நன்றி..
Romba nalla pathivu! Vaazthukkal!!
ரொம்ப நன்றி, தங்கம்.
//இந்தப் பதிவினை நான் சேமித்து எனது பிற்காலத்தில அதாவது ஒரு 10 வருடங்களுக்கு பிறகு பயன்படுத்தி கொள்கிறேன். ஏனெண்டால் நான்இப்ப சின்னப் பெடியன்..//
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
sayanthan sinna podiyan endu ungka makanai patti sonningkalaa??
Very good post.
Post a Comment
<< Home