Wednesday, October 19, 2005

கிச்சா மாமா - சிறு கதை



நான் அமெரிக்காவிலிருந்து வந்திருப்பது யாருக்குத் தெரியுமோ தெரியாதோ என்னுடைய அம்மாவின் ஒன்று விட்ட அண்ணனான அசட்டு கிச்சா மாமாவிற்கு கண்டிப்பாகத் தெரிந்துவிடும். அடுத்த நாளே நான் தூக்கத்திலிருந்து முழுவதும் கண்ணைத் திறப்பதற்குள் அவர் நடுக்கூடத்தில் உட்கார்ந்துகொண்டு ‘ஹிண்டு’ படித்துக் கொண்டிருப்பார். “அவனை எழுப்பாதீங்கோ” என உரக்கச்சொல்லியே என்னை எழுப்பிவிடுவார்.
நான் படுக்கையில் அசைவதைப்பார்த்து, “மெதுவா எழுந்துவாப்பா” என்று அன்பாக அனுமதி வேறு தருவார். முகத்தில் தோன்றும் எரிச்சலை சற்று சிரமப்பட்டு மறைத்துக் கொள்வேன். வேண்டுமேன்றே நிதானமாக பல் தேய்த்து, குளித்து, காபி கோப்பையுடன் கூடத்திற்கு வருவேன். அவரின் வழக்கமான அசட்டுச் சிரிப்புடன் காத்துக் கொண்டிருப்பார்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் பெயர் அசட்டு கிச்சா மாமா தான். எப்பொழுது அந்த அடைமொழி ஒட்டிக்கொண்டது என்று சரியாக நினைவில்லை.
யாரும் பெரிதாகத் தடுத்ததும் இல்லை. அம்மா லேசாகக் கண்டித்ததாக ஞாபகம். ஆனால் அம்மாவின் கருத்துகளுக்கு மரியாதை இல்லாத காலம் அது. (இப்பொழுதும் நிலைமையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்!)

மாமா மிகவும் சாது. பலமுறை சந்தித்தும், மனதில் ‘டக்’ கென்று பதியாமல் போகும், சாதாரண தோற்றம். முன் பக்கம் தலை வழுக்கை. காதில் முடி. சற்றே தூக்கலான பற்கள். ஏதோவொரு அரசாங்க அலுவலகத்தில் வேலை. சராசரியான வாழ்க்கை. ‘வேகுவேகு’ வென்று சைக்கிளை மிதித்துக்கொண்டு எங்களைப்பார்க்க அவ்வப்போது வருவார். மாமி சிறிது உலக ஞானம் உள்ளவள். நன்றாக எல்லோரிடமும் பழகுவாள். அவர்களின் ஒரே மகன் அரவிந்த். அவனை இந்தியாவில் இருக்கும் பொழுது சின்னப் பையனாகப் பார்த்தது. அப்பொழுதே மாமா அவனிடம் சற்று அதிகமாக அன்பு வைத்திருப்பதாக எனக்குப்படும். நான் பெரியதாக அதைப்பற்றிச் சிந்தித்தில்லை. ஒரே பையன் என்பதால்தான் அப்படி என்று மட்டும் நினைத்துக்கொள்வேன்.

நான் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்று, அங்கு ஐந்து ஆண்டுகளாக பாஸ்டனில் ஒரு பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக இருந்தேன்.

அரவிந்த் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த நேரம், நான் இந்தியா வந்திருந்த போது ஒரு இரண்டு மணி நேரம் மாமா என்னைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவனை மேல் படிப்பிற்கு அமெரிக்காவில் எந்தப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவது என்பதைப் பற்றிக் கேள்வி மேல் கேள்வி. நானும் எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்லி அனுப்பிவைத்தேன். சில மாதங்களுக்குப் பிறகு போனில் பேசும் பொழுது அரவிந்த் பாஸ்டனிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஆம்ஹர்ஸ்ட் என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சேரப் போகிறான் என்றாள் அம்மா. நான் பாஸ்டனில் இருப்பதால் என்று தான் மாமா அவனை ஆம்ஹர்ஸ்டுக்கு அனுப்புகிறார் என்றும் சொன்னாள். ‘அப்பொழுது தானே என்னைப்படுத்த முடியும்’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஆண்டிறுதி விடுமுறைக்கு வரும் பொழுதெல்லாம் அடுத்த நாளே மாமா வந்துவிடுவார். “அங்கேல்லாம் ரொம்பக் குளிராமே?” என்று தொடங்குவார். “ஆவணி ஆவிட்டத்துக்கு எந்த கோவிலுக்குப் போனேள்? பிட்ஸ்பர்க் கோவிலுக்கு கூடப் படிக்கிறவங்களோட போயிட்டு வந்தானாம் அரவிந்த். பாண்டியாக் நல்ல காரா? அது தான் மலிவா இருக்குன்னு வாங்கியிருக்கான். உங்காத்துலேர்ந்து அவன் வீடு எவ்வளவு மைல்? அவனுக்கு தர உதவிப் பணம் போறுமா? குழந்தை பணத்துக்குத் திண்டாட மாட்டானே? சாப்பாடுதான் கொஞ்சம் சிரமமா இருக்காம். பாஸ்டன் மாதிரி இந்தியக் கடையெல்லாம் பக்கத்திலே இல்லையாம்” இப்படியாகத் தொடந்து கொண்டே போகும் பேச்சு.

என் மனைவி ஆர்த்தி, “கவலைப்படாதீங்கோ மாமா. நாங்க முடிஞ்சபோது போய் பார்த்துக்கறோம்.” என்று சொல்லி வைப்பாள். ஆனால் எங்கே நேரம்? அவளும் வேலைக்குப் போகிறாள். எங்களுக்குச் சின்னக் குழந்தை வேறு. அரவிந்த் நல்ல சங்கோஜி. எளிதில் பழகமாட்டான். ஆனால் மரியாதை தெரிந்த, நல்லப் பையன். பல முறை ஆர்த்தியும், நானும் அவனை வாரமுடிவில் வா என்று அழைத்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ‘நிறையப் படிக்கணும் அண்ணா’ என்று மென்மையாக மறுத்துவிடுவான். தீபாவளி சமயங்களில் ஒரிரு முறை வந்திருக்கிறான். இந்தியாவிலிருந்து திரும்பும் பொழுது அரவிந்துக்காக ஒரு மூட்டையைச் சுமந்து கொண்டு வருவோம். வழக்கமாக எல்லோரும் அனுப்பும் கிராண்ட் ஸ்வீட்ஸ் முறுக்கு, ஊறுகாய், அப்பளம், க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா. அதைத் தவிர அவனுக்குத் துணிமணிகள். தன் மகன் ஒரு டாலர் கூட அனாவசியமாகச் செலவழிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார் அசட்டு மாமா.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் ஹைதராபாதில் உள்ள ஒரு வணிகப்பள்ளியில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறேன். அதனால் அடிக்கடி சென்னை வரும் வாய்ப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த ஏற்பாட்டில் மாமாவின் அறுவையைத் தவிர எல்லாமே நன்றாகத்தான் இருந்தது.

நூறாவது முறையாக அமெரிக்கா பற்றிய கேள்விகளைக் கேட்டு விட்டு ஒரு பெரிய பையைக் காண்பித்து “இதை எடுத்துண்டு போக முடியுமா?” என்றார். “பாக்கறேன் மாமா. நான் லண்டன்ல நாலு நாள் இருந்துட்டு தான் பாஸ்டன் போகப்போறேன்,” என்று புளுகிவிட்டு அவரை அனுப்பிவைத்தேன்.

இந்த முறை எனக்குப் பொறுமை போய்விட்டது. அம்மாதான் சிக்கினாள். “ஏம்மா இந்த மாமா இப்படிப் படுத்தறார்? பேருக்கு ஏத்த மாதிரி சரியான அசடு! இவர் பிள்ளை தான் அதிசயமா அமெரிக்காலே இருக்கானா, இல்லே இவர் தான் ஊர்லே, உலகத்துலே இல்லாத பிள்ளையைப் பெத்திருக்காறா? நான் நிச்சயமா இந்த மூட்டையை எடுத்துண்டு போகமாட்டேன். அவனுக்கு பூம்புஹார் பனியன், ஜெட்டி கூட எடுத்துண்டு போயாச்சு,” என்று பொரிந்தேன்.

அம்மா என்னை ஒரு விநாடி கூர்ந்து பார்த்துவிட்டு சொன்னாள், “ஊர்லே, உலகத்துலே இல்லாத பிள்ளைதாண்டா. ஏன்னா அவன் கிச்சாவோட பிள்ளை இல்லை.”

‘என்னது?’ என்பது போல் பார்த்தேன்.

“கிச்சா சின்ன வயசுலே கல்யாணமே வேண்டாம்னு இருந்தான். அவனோட கூட வேலைப்பார்த்துண்டு இருந்தாள் கமலா. அவளோட ஆத்துக்காரன் ரொம்ப கொடுமைக்காரனாம். பாதி நாள் அழுதுண்டே வருவாளாம் ஆபீசுக்கு. மூஞ்சி, முதுகெல்லாம் அடி வாங்கின அடையாளம் இருக்குமாம். ஒரு நாள் தாங்க முடியாம விவாகரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு, தன் அஞ்சு வயசு மகன் அரவிந்தோட அம்மா வீட்டுக்கு வந்துட்டாள். இந்த மாமா தான் ஆறுதலா இருந்து, கொஞ்ச நாள் கழிச்சு அவளைக் கோவில்ல கல்யாணம் பண்ணிண்டான்.”

“அப்படியா? ஏம்மா இவ்வளவு நாளாச் சொல்லவேல்லே?”

“நீங்கள்ளாம் சின்னவாளா இருக்கும் பொழுது அரவிந்த் கிட்டே ஏதாவது தெரியாத்தனமாக்கேட்டு வைக்கப்போறேளேன்னு எங்களைச்சொல்ல வேண்டாம்ன்னு கெஞ்சி கேட்டுண்டான். அதான் நாங்க அந்த விஷயத்த கிட்டத்தட்ட மறந்தே போயிட்டோம். கமலாவும் நன்னா பழகுவாளா...,” பேசிக் கொண்டே போனாள் அம்மா.

அந்த நிமிடம் அசட்டு கிச்சா மாமா தன் அடைமொழியை இழந்தார்.

(அமுதசுரபி - Oct 2004)

38 Comments:

At 9:05 am, October 19, 2005, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At 9:52 am, October 19, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,

கிச்சா மாமா மாதிரி ஆட்கள் உலகத்தில் இன்னும் இருக்காங்க. அதுவே கொஞ்சம் மனநிறைவுதருகிறது.

 
At 10:17 am, October 19, 2005, Blogger Curious Servant said...

?

 
At 4:28 pm, October 19, 2005, Blogger Ramya Nageswaran said...

டி ராஜ், துளசிக்கா..கருத்துக்களுக்கு நன்றி.

Curious Servant ??

 
At 4:43 pm, October 19, 2005, Blogger அன்பு said...

கிச்சாமாமா கதை நல்லாருந்துச்சு.

வருகைதரு பேராசிரியராக அமுதசுரபி-ன்றதால இந்தச்சொல் தப்பியது என்று நினைக்கிறேன். இருந்தாலும் உங்களால் இயன்றவரை இதுபோன்ற தமிழ்வார்த்தைகள் பயன்படுத்துங்கள். பாராட்டுக்கள்.

 
At 4:47 pm, October 19, 2005, Blogger Ramya Nageswaran said...

அன்பு, Visiting Professorன்னு நான் எழுதினதை திருத்தியது அமுதசுரபியின் அன்றைய ஆசிரியர் திரு. அண்ணா கண்ணன். இல்லேன்னா நானாவது இவ்வளவு அழகா எழுதறதாவது :-) அவரைப் போன்றவர்களின் குட்டுக்களால் முயற்சி செய்துகிட்டிருக்கேன்!!

 
At 5:23 pm, October 19, 2005, Blogger அன்பு said...

அச்சச்சோ... இப்படி வாரிட்டீங்களே ரம்யா:) அந்தவார்த்தை தனியா தெரிஞ்சதாலதான் குறிப்பிட்டேன். எப்படியிருந்தாலும் அண்ணாக்கண்ணன் போன்ற பத்திரிக்கையாசிரியர்களுக்குப் பாராட்டுக்கள். நீங்களும் தொடர்ந்து முயலுங்கள்.

 
At 8:06 pm, October 19, 2005, Blogger வீ. எம் said...

அருமையான கதை ரம்யா அக்கா.. நீங்க எழுதி அமுதசுரபில வந்த கதையா இது ..சூப்பர்..
இவ்ளோ சூப்பரா எழுதற நீங்க ஏன் முகமூடி சிறுகதை போட்டில எழுதல?

 
At 9:02 pm, October 19, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

வீஎம்
ரம்யா வளர்ந்த எழுத்தாளார். அதனால் வளாருகின்றவர்களுக்கு வாய்ப்பு தந்து விலகி இருக்கலாம். இது என் கருத்து)
ரம்யா: இந்த கதையில் உள்ள எந்த கருத்து தவறானது என்று பலரும் படிக்க வேண்டாம் என்று எதிர்மறை ஓட்டுக்கள் விழுகின்றது என்று புரியவில்லை:(

 
At 11:28 pm, October 19, 2005, Blogger பாலராஜன்கீதா said...

//அப்பொழுதே மாமா அவனிடம் சற்று அதிகமாக அன்பு வைத்திருப்பதாக எனக்குப்படும். நான் பெரியதாக அதைப்பற்றிச் சிந்தித்தில்லை. ஒரே பையன் என்பதால்தான் அப்படி என்று மட்டும் நினைத்துக்கொள்வேன்.//

இதைப்படித்த உடனே, முடிவை ஊகிக்க முடிகிறது:-)

 
At 5:19 am, October 20, 2005, Blogger Priyamvada_K said...

idhu pOnra manithaabimaanavargaL ulagathil iruppadhu sandosham.

Priya.

 
At 8:46 am, October 20, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம்..நன்றி..டைட்டில்லே இது வீ.எம் ஸ்பெஷல்னு போடணும்னு நினைச்சேன்..உங்களுக்காக தேடி தேடி பழைசெல்லாம் reclycle பண்ணிகிட்டிருக்கேன். ஆமா..நம்ம சுதர்சன் கோபால் எங்கே? அவருக்கு ஒரு காணவில்லை போட வேண்டாமா?

பத்மா, நீங்க சொல்ற காரணத்தை 'பந்தாவா' சொல்லணும்னு ஆசையாத் தான் இருக்கு! :-) ஆனா, உண்மை என்னன்னா எனக்கு புது கதை எதுவுமே தோணலை. இரண்டாவது, உண்மையிலேயே ரொம்ப நல்லா, வித்தியாசமா எழுதறவங்க வலைத்தளங்கள்லே இருக்காங்க..

பாலராஜன்கீதா, கண்டுபிடிச்சுட்டீங்களா? ஒரு வேளை அந்த வரிகளை எடுத்திருக்கலாமோ?

ப்ரியம்வதா, வருகைக்கு நன்றி. என் எல்லாக் கதைகளுமே நான் பார்த்தவங்களின் கதை தான் (80%ஆவது). கிச்சா மாமாவும் அப்படித்தான்.

டி ராஜ், பத்மா...எனக்கு இப்பேல்லாம் குறைஞ்சது 8 - votes வருது. இந்த பதிவாவது ஒத்துக்கலாம் கதை பிடிக்கலைன்னு. 'ஒரு Green திருமணம்' பதிவுக்கும் -8! அப்ப எனக்கு வரும் ஒரே எண்ணம்: That is their life and this is mine. அவ்வளவுதான்.

 
At 2:53 pm, October 20, 2005, Blogger Gnana Kirukan said...

ramya - very good story - while I was reading I guessed that it was not his son - I thought he adopted him - but u gave a different reason :) - dont u think it wuld have more punch if u had said that his wife died - and he adopted a kid and lived his life for this kid. Innum sentiment-a irukum - something similar to the film alagan :)

 
At 3:25 pm, October 20, 2005, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் ரம்யா,

மைனஸ் வோட்டு விழுந்தா யாரோட பொறாமைக்கோ ஆளாகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அதையே ஊக்கமாகக் கொண்டு, 'காணவில்லை' என்று தேடும்வரை காத்திருக்காமல் : ) தொடர்ந்து எழுதுங்கள். சில மாதங்களாக நான் கவனித்த வரை உங்களுடைய வலைப்பதிவுதான் அதிகமாகப் படிக்கப்படும் பதிவுகளில் ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பதிவுகளுமே (மைனஸ் வாங்கியும் : )) வாசகர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அனைத்துமே பயனுள்ள பதிவுகள் என்பதால் தானே இப்படி,..? : )தொடர்ந்து எழுதுங்கள். புதுப்புது வாசகர்களைக் கண்டையவும், புது வாசகர்களைத் தமிழ்மணத்தின் பக்கம் இழுக்கவும் முடிகிறது உங்களால்.
வாழ்த்துக்கள்!
அன்புடன், ஜெ

 
At 6:06 pm, October 20, 2005, Blogger Ramya Nageswaran said...

Arjuna, thanks for your comments..so you also guessed? :-)
The point I am trying to make through this story is that appearances are deceptive and we tend to judge people too quickly. Some of them have a much deeper and broader personality than we can ever imagine.

டி ராஜ்..நன்றி :-)

ஜெ..உங்க அன்புக்கும், ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி..யாரும் பொறாமைபடற மாதிரியேல்லாம் ஒண்ணும் எழுதலை ஜெ..ஏதோ சிலருக்கு சில பதிவுகள்லே - போடறதுலே ஒரு சந்தோஷம்..
போட்டுட்டு போகட்டுமே:-) வலைப்பதிவு நண்பர்களோட பகிர்ந்துக்க ஏதாவது விஷயம் இருந்தா நான் நிச்சயம் எழுதுவேன்..+ or - no problem :-)

 
At 7:22 pm, October 20, 2005, Blogger G.Ragavan said...

இப்பொழுதுதான் இந்தக் கதையைப் படிக்கிறேன். முடிவை ஊகிக்க முடியவில்லை என்னால். வேறு ஏதேனும் இருக்குமோ என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இப்படி ஆகி விட்டது. நல்ல கதை. கிச்சா உண்மையிலேயே பஹுத் அச்சா!

 
At 9:39 pm, October 20, 2005, Blogger A Motley Tunic said...

" அந்த நிமிடம் அசட்டு கிச்சா மாமா தன் அடைமொழியை இழந்தார். "

ரம்யா ரொம்ப நல்லா எழுதரீங்க.

 
At 1:05 am, October 21, 2005, Blogger தங்ஸ் said...

Mudivu yookikka koodiyathaaga irunthaalum, ezhuthu nadai pramaathaam. Oru therntha ezhuthaalarim nerthi. Greetings!!!

~Thangam

 
At 8:49 am, October 21, 2005, Blogger Ramya Nageswaran said...

//கிச்சா உண்மையிலேயே பஹுத் அச்சா!//:-) நன்றி, ராகவன். சன் டி.வி டாப் டென் மூவிஸ் பார்ப்பீங்களா? :-)

செளமியா, தங்கம்..நீங்க இரண்டு பேரும் முதல் முறையா என் பதிவுக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். வந்தமைக்கும், ஊக்க கருத்துக்களும் ரொம்ப நன்றி.

 
At 11:11 pm, October 21, 2005, Blogger வீ. எம் said...

// வீ.எம்..நன்றி..டைட்டில்லே இது வீ.எம் ஸ்பெஷல்னு //

மிக்க நன்றி அக்கா .. ,
சுதர்சன் கோபால் சார் மட்டும் இல்லை..இன்னும் கொஞ்ச பேருக்கும் போட வேண்டி இருக்கு .. ஒரு 4 நாளு வெயிட் பன்னிட்டு "காணவில்லை" போட்டுடலாம் , என்ன சொல்றீங்க?

 
At 7:55 pm, October 22, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

ரம்யா,
கதை மனதைத் தொட்டது !

இவரைப் போல் ஒருவர் எங்களுக்கும் உதவி செய்திருக்கிறார் !!! ஆனால், அசடு அல்லர்.

முடிவை யூகிக்க நான் முயலவில்லை :)

 
At 5:14 am, October 23, 2005, Blogger ammani said...

We've all met someone like Kichha mama in our lives. Aiyo sariyaana aruvainnu munumunuppom. I liked your style more than the story itself.

 
At 10:39 am, October 23, 2005, Blogger Ramya Nageswaran said...

வீ.எம்..லிஸ்ட் தயாராகிகிட்டிருக்கா? :-)

நன்றி, பாலா. உங்களுக்கு தெரிந்த அந்த மாமாவிற்கு வணக்கங்கள்.

Ammani, I am glad you liked something! :-) Thanks a lot!

 
At 3:12 pm, October 24, 2005, Anonymous Anonymous said...

Ramya superb story..
u r style of writing really amazes me
kudos

kavya

 
At 1:07 pm, October 25, 2005, Blogger Ramya Nageswaran said...

Thank you Kavya..you are too kind..I have a long way to go :-)

 
At 11:22 pm, October 25, 2005, Blogger P B said...

"சின்னப் பையனாகப் பார்த்தது. அப்பொழுதே மாமா அவனிடம் சற்று அதிகமாக அன்பு வைத்திருப்பதாக எனக்குப்படும். நான் பெரியதாக அதைப்பற்றிச் சிந்தித்தில்லை."

Ingaiye kathai purinthu vittadhu...very expected end..aana unga style Nalla iruku. NIraya ezhuthavum.

 
At 8:57 am, October 26, 2005, Blogger Ramya Nageswaran said...

முத்துகுமார், நீங்களும் கண்டுபிடிச்சுட்டீங்களா?? அடுத்த கதைலே இவ்வளவு predictability இல்லாம பார்த்துக்கறேன். உங்க ஊக்கத்திற்கு நன்றி.

 
At 5:03 pm, October 26, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

கோ.கணேஷ்ங்கிற என் பெயரை நிறைய பேர் கோமாளி கணேஷ்னுதான் கூப்பிடுவாங்க......

எனக்கும் காலம் வராதா என்ன அடைமொழியை இழப்பதற்கு.

 
At 5:56 pm, October 26, 2005, Blogger Ramya Nageswaran said...

கணேஷ்..நூறு வருஷம் இருப்பீங்க நீங்க! இன்னிக்கு தான் என்னடா உங்க கிட்டேருந்து பின்னூட்டங்களும் காணும், பதிவும் காணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்..

 
At 3:13 am, October 27, 2005, Blogger பரஞ்சோதி said...

அருமையாக எழுதியிருக்கீங்க, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

 
At 7:29 am, October 27, 2005, Blogger Ramya Nageswaran said...

அவதாரம் விஜி, பரஞ்சோதி, இருவருமே முதல் முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கறேன்..

உங்கள் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றி.

 
At 1:19 pm, October 27, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

//கணேஷ்..நூறு வருஷம் இருப்பீங்க நீங்க! இன்னிக்கு தான் என்னடா உங்க கிட்டேருந்து பின்னூட்டங்களும் காணும், பதிவும் காணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்..//

ஒரு வாரம் பணிச்சுமை காரணமாக வலைப்பூவிற்கு விடுமுறை விட்டாச்சு.
பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் இடுகிறேன்.

//கணேஷ்..நூறு வருஷம் இருப்பீங்க நீங்க!//
நன்றி ரம்யா... யாருக்கு தொந்தரவு கொடுக்காம இருந்துட்டு போய் சேர்ந்திரணும்.... பார்ப்போம்.... என்ன நடக்குதுன்னு.....

 
At 3:58 am, October 29, 2005, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல கதை ரம்யா...உங்கள் மற்ற பதிவுகளையும் விரைவில் படித்துவிடுகிறேன்...

 
At 12:35 pm, November 01, 2005, Anonymous Anonymous said...

Ramya, I have been here couple of times and first time commenting...Good story and your narratin style is very good..

 
At 2:20 pm, November 01, 2005, Blogger Ramya Nageswaran said...

கணேஷ்..நூறு வருடங்கள் ஆரோக்கியமாக இருங்கள்!!

குமரன், உங்க வருகைக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

Sundaresan, thanks very much for your visit and encouraging comments.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

 
At 3:35 am, November 22, 2005, Blogger Murali said...

Hello Ramya

I didnt know that you were right short stories too.

In short
நல்லதொரு சிறுகதை ரம்யா.
தொடர்ந்து எழுதுங்கள்..

All the best.
Murali

 
At 5:45 pm, March 15, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல கதை ரம்யா.. நான் முடிவை எதிர் பார்க்கவில்லை. ரொம்ப நல்ல கதை. அர்ஜுன் சொல்லி இருப்பது போல், தத்து எடுப்பது போல் இருந்திருந்தால், அந்த கதாபாத்திரத்தின் ஆழம் கொஞ்சம் குறைந்திருக்கும்.

 
At 12:02 am, August 30, 2007, Blogger kalyam vijayan said...

hello Ramya
surprisingly the calcutta episode provoked my daughter suchitravijayan barrister who started a similar NGO Lines of grey at africa and taught photgraphy to street chidren. Look www.suchitravijayan.com or Lines of grey in google. I am a senior advocate in chennai i too like the same tamil writers u mentioned and read them. i write about ur blog little later. Nice to see one more person having orientation like my daughter. good wishes K.M.Vijyan senior advocate lmvijayan@gmail.com

 

Post a Comment

<< Home