Saturday, July 30, 2005

பெண்ணி(நே)யம் - சிறுகதை






பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரமாக வந்தது. வழக்கம் போல் அப்பா அம்மாவை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார். பெண்களுக்காக வெளிவரும் பத்திரிக்கையைப் படித்துக் கொண்டே அம்மா, “நானும் மனசுலே ஒரு டாபிக் வைச்சுருக்கேன். வாசகியர் உலகம்ங்கிற பகுதிக்கு அனுப்பலாம்ன்னு நினைச்சுண்டு இருக்...” அம்மா இன்னும் முடிக்கக் கூட இல்லை. அதற்குள் ஒரு இளக்காரச் சிரிப்பு சிரித்த அப்பா, “ஆமாமா.. இப்பெல்லாம் சிவசங்கரி, அனுராதா ரமணனேல்லாம் எழுதறது கம்மியாடுத்தில்லையா? கண்டிப்பா ஜானகி வரதராஜன் எழுதத்தான் வேணும்.” என்றார். அம்மாவின் முகம் லேசாக சிவந்து, சிறுத்தது. அதைத் தவிர வேறு எந்தவித பேச்சோ மாறுதலோ இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்த காட்சிதான், கேட்ட சொற்கள்தான். சந்தர்பங்கள் மட்டுமே வேறு.

நான் இவர்களின் மூத்தப் பெண் திவ்யா, வயது இருபத்தாறு. மூன்று வார விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து வந்து நான்கு நாட்கள் ஓடி விட்டன. “சே! இந்த அம்மா எவ்வளவு பெரிய பத்தாம் பசலி! இத்தனை வருஷமா எத்தனை அவமானங்களைப் பொறுத்துண்டு இருந்திருக்கா!”

அம்மாவிற்கும் அப்பாவிற்கும் வயது வித்தியாசம் கிட்டதட்ட பத்து வருடங்கள். அம்மா இயற்கையாகவே சிரித்த முகமும் நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளும் உடையவள். அப்பாவோ அதற்கு நேர் எதிர். அவர் ஒரு ஸினிக். எல்லாவற்றிலும் ஒரு குதர்க்கம், ஒரு குற்றம். எப்படித்தான் முடிச்சு போடுகிறாறோ கடவுள்? அம்மாவின் மென்மையான ரசனைகள், சக மனிதர்களில் மேல் உள்ள சிநேகம், ஒளிவு மறைவில்லாத பாசம், எளிமையான நம்பிக்கைகள் அனைத்தையும் சில நொடிகளில் சிதைத்து விடுவார் அப்பா. சின்ன வயதில் அப்பா முன் கோபக்கார், குத்தலாக பேசக் கூடியவர் என்பதைத் தவிர அவரின் வார்த்தைகளின் தீவிரத்தைப் பெரியதாகப் புரிந்து கொள்ளத் தெரியவில்லை.

எனக்கு சுமார் பத்து வயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம். பக்கத்து வீட்டில் இருந்த பாட்டி அம்மாவிடம் மிக அன்பாக இருப்பாள். அம்மாவும் அந்த பாட்டியிடம் பாசத்தோடு பழகுவாள். ஒரு நாள் வீட்டிற்கு வந்த அந்த பாட்டி அப்பாவிடம் “ஜானகி என்னோட பொண்ணு மாதிரி,” என்று நெகிழ்ச்சியோடுச் சொன்னாள். அதற்கு அப்பா, “ஆமா.. அதனாலே நாலு வெள்ளிப் பாத்திரம் தரப் போறேளா இல்லே உங்க ரெட்டை வடம் சங்கிலியத் தரப் போறேளா?” என்று சுள்ளென்று பதிலளித்தார். அந்தப் பாட்டியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி இன்னும் கண் முன்னே நிற்கிறது.

அம்மா நன்றாகப் பாடுவாள். னால் அதை ஊக்குவிக்க அப்பா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பழக்கம் விட்டுப் போகாமல் இருக்க பாட்டு கற்றுக் கொடுக்கலாம் என்று சில குழந்தைகளுக்கு க்ளாஸ் எடுத்தாள் அம்மா. வந்தவர்களிடம் தன் எரிச்சலை மறைக்க அப்பா துளிக் கூட மெனக்கெடமாட்டார். அப்பொழுது தான் “ஜானகி, காப்பி!” என்று அலறுவார் அல்லது “இந்த சட்டையை இன்னுமா இஸ்திரி பண்ணலை?” என்று ஒரு சட்டையை முகத்திற்கு நேரே நீட்டுவார். சத்தமாக டி.வி பார்ப்பார். இத்தனையும் மீறி அம்மாவிடம் பாட்டு கற்றுக்கொள்ளும் தைரியம் யாருக்கும் வரவில்லை.

யாருடனாவது சிறிது நேரம் வாசலில் பேசிக் கொண்டிருந்து விட்டால் போதும். கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பார். உள்ளே வந்தவுடன் “இவ்வளவு நேரம் இத்தனை சுவாரஸ்யமா என்ன பேச்சு? உனக்கேன்ன பெரிய சொற்பொழிவாளர்ன்னு நெனப்பா? கைய ஆட்டறே, கண்ணை உருட்டறே.. பார்க்க சகிக்கலை”” என்பார்.

அம்மாவின் பாங்கான வேலைகளை அதிசயமாகத்தான் பாராட்டுவார். ஏதாவது சரியாக இல்லையென்றால் பலமுறை அதை சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார்.

இப்படி நடந்த பல உணர்வுக் கொலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நானும் என் தம்பியும் மெளன சாட்சிகள். இவை அனைத்தையும் ஒரு வித கையாலாகாதனத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம். எங்களிடம் சாதாரணமாகத்தான் பழகுவார். நாங்கள் நன்றாகப் படிப்பதில் பெருமை. பெரியதாக எங்கள் விஷயத்தில் தலையிட மாட்டார். அதுவும் அம்மாவின் பொறுப்பு தான். அம்மா எங்கள் இருவரையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டாள். தம்பி தினேஷ் சிங்கப்பூரில் நன்யாங் பல்கலைகழத்தில் எம்.பி.ஏ படிக்கிறான். நான் சென்னையில் படிப்பை முடித்த உடன் அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ப் விஸ்கான்ஸினில் எம். எஸ் படிக்க சென்றேன்.

இயற்கையாகவே எனக்கு சில ஆன்டி-எஸ்டாப்ளிஷ்மெண்ட் கொள்கைகள் உண்டு. எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் தன் வாழ்க்கையை நடத்தும் அம்மாவைப் பார்த்து ஏற்பட்டிருக்கலாம். அமெரிக்க அனுபவம், அங்கு நான் சந்தித்த முற்போக்கான எண்ணங்கள் உடைய பெண்கள், என்னுடைய பொருளாதார சுதந்திரம் அனைத்தும் என் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியிருந்தன.

முக்கியமாக என் தோழிகள் இவோன் மற்றும் எஸ்தர் எனக்கு வழிகாட்டிகள். ஆப்ரிக்காவின் கானா நாட்டில் பிறந்த இவோன் மேல் படிப்பிற்காக அமெரிக்கா வந்தாள். ஷிகாகோ பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பு முடித்து விட்டு அங்கே ஒரு பிரபல வக்கீல் நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் நிறைந்த நிறுவனம். அதுவும் ஒரு கறுப்பினப் பெண்ணை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள அங்கு பல பேர் தயாராக இல்லை. இவோன் ஒரு சர்வைவர். கானாவின் பொறுளாதார அவலத்தை மீறி, தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவள். அதற்காக அவள் சில குணங்களை கவனமாக வளர்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தாலே ‘என்னிடம் அனாவசியமாக வம்புக்கு வர வேண்டாம்’ என்று சொல்வது போல் இருக்கும். ஒரு அலட்சிய பார்வை, நடை. பேச்சும் உச்ச ஸ்தாயில் இருக்கும். ‘எனக்கு இங்கிருக்க எல்லா உரிமையும் உள்ளது’ என்பதை நிலைநாட்டும் இணக்கமற்ற போக்கு. அதனால் அவளைப் பிடிக்காதவர்கள் கூட அவளிடம் ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பழகினார்கள். அதைப் பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளைப் போல் இருப்பது தான் தன்னம்பிக்கைக்கு வழி என்று முடிவு செய்தேன்.

எஸ்தர் நெதர்லாண்ட்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். என்னுடன் படிக்கும் பொழுதே கூட படித்த விக்டரை திருமணம் செய்து கொண்டாள். ஒரு முறை அவர்களோடு சாப்பிடச் சென்ற பொழுது இருவரும் தனித் தனியே பில்லை செட்டில் செய்ததைப் பார்த்து ச்சர்யப்பட்டேன். அதற்கு அவள், “ஆமாம். எங்கள் டாலர் கணக்கு வழக்கு தனித் தனி தான். ஒரு சினிமா பார்த்தா கூட அவரவர் டிக்கேட் அவரவர் தான் வாங்க வேண்டும். நாளைக்கே நாங்க பிரியணும்னா சுலபமா போயிடும் பாரு. என் பணத்தை நான் எதுக்கு அனாவசியமா விக்டருக்காக செலவழிக்கணும்?” என்றாள். என்ன ஒரு யதார்த்தமான அணுகுமுறை என்று வியந்தேன்.

படிப்பு முடிந்த உடன் பாஸ்டனில் வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷ் ஜாதகம் என்னுடையதுடன் பொறுந்துவதாக அம்மா போனில் சொல்லி காஷை சந்திக்கச் சொன்னாள். இருவரும் பேசிப் பார்த்ததில் பிடித்துப் போய்விட்டது. ஆறே மாதத்தில் இந்தியாவில் திருமணம் நன்றாக நடந்தது. என் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து அதே போல் காரியங்களை நிறைவேற்றினேன். ஆகாஷ் ஒப்புக் கொள்ளாத பொழுது அல்லது மாற்று யோசனை தெரிவித்த பொழுதேல்லாம் என் வழிக்கு எப்படியோ கொண்டு வந்தேன். பாதி நேரம் சண்டை போட்டுத்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நான் அம்மா மாதிரி பழமைவாதியா என்ன? சின்ன விஷயங்களில் கூட என் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. திருமணமான உடனேயே விட்டுக் கொடுக்க ஆரம்பித்தால் பிறகு இந்த ஆண்கள் தலை மேல் ஏறி உட்கார்ந்து விடுவார்கள்.

ஒரே வருடத்தில் எங்கள் ஜாக்கிரதை உணர்வை மீறி நான் கருவுற்றேன். புதிய வேலையில் நான் சேர்ந்து ஆறு மாதமங்கள் கூட ஆகவில்லை. அதனால் பிடிவாதமாக அதை கலைக்க முடிவு செய்தேன். இதில் ஆகாஷ¤க்கும் விருப்பம் இல்லை. அம்மாவிற்கும் உடன்பாடில்லை. என் முடிவை மாற்ற முயற்சி செய்ய அம்மா கூட ஒரு இரண்டு மாதம் பாஸ்டன் வந்து தங்கி விட்டுப் போனாள். னால் இறுதியில் என் பிடிவாதம் தான் வென்றது.

இப்பொழுது பாஸ்டனில் வாழ்க்கை தொடங்கி மூன்று வருடங்கள் ஓடி விட்டன. திருமணதிற்குப் பிறகு முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்கிறேன். திரும்பி போவதற்குள் அப்பாவைச் சூடாக நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கி கொள்கிற மாதிரி கேட்காமல் போவதில்லை என்று முடிவு செய்தேன். இந்த அம்மாவும் தான் சுத்த மோசம். அவள் என்ன உலகம் தெரியாதவளா? இணையத்தில் பல தளங்களுக்கு செல்வது, எனக்கு மின் அஞ்சல் அனுப்புவது போன்ற விஷயங்களை எவ்வளவு சுலபத்தில் கற்றுக் கொண்டு விட்டாள். (இது அப்பாவின் புதிய எரிச்சல் என்பது வேற விஷயம்!) அம்மாவிடம் முதலில் பேச வேண்டும். என்னை உருவாக்கிய பெண்களைப் பற்றி எல்லாம் சொல்லி அவள் இந்த நரகத்திலிருந்து மீள வழி காட்டணும்.

அம்மாவிடம் பேசும் வாய்ப்பு அன்று இரவே கிடைத்தது. அப்பா ஒரு நண்பரின் பெண்ணின் திருமணத்திற்கு போய் விட்டார். “நீ இன்னும் எத்தனை நாள் அடிமையா இருக்கப் போறே?” என்று ஆரம்பித்து படபட வென்று சொல்ல நினைத்த அத்தனையும் சொல்லி “அடுத்த தடவை அப்பா உன்னை எதாவது சொன்னா, நன்னா எதிர்த்து நில்லு. நானும் தினேஷ¤ம் இருக்கோம் உன்னை சப்போர்ட் பண்ண” என்று முடித்தேன்.

அம்மா புன்சிரிப்பு மாறாமல் எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட்டு சொன்னாள் “இது தான் விஷயமா? திவ்யா, எஸ்தரும், இவோனும் அனுதாபத்திற்கு உடையவர்களே தவிர பின்பற்ற வேண்டியவர்கள் இல்லை. பிரிவுக்கு தினம் தயார் பண்ணிண்டே கணவனோட வாழறது ஒரு வாழ்க்கையா? அந்த அளவுக்கு தங்கள் உறவு மேலே நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு திருமணம் செஞ்சுக்கணும்? அதற்கு பதிலா அவர்கள் ஒரு பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் போட்டுண்டு வாழலாமே. இவோனும் பாவம் திவ்யா. வேறெந்த உணர்ச்சிகளையும் காட்ட முடியாமல் எப்பொழுதும் உலகத்தோடு ‘சண்டைக்கு தயார்’ என்ற தோற்றத்தோடு வாழணும்னா அது எவ்வளவு பெரிய சுமை? அவளுக்கு உண்மையான தோழிகள் எவ்வளவு பேர் இருக்கா சொல்லு? பெண்ணியம்ங்கிறது ஒரு நல்ல உடை மாதிரி. அதை கம்பீரமா போட்டுண்டா பார்க்கிறவங்களுக்கு தன்னாலே மரியாதை வரும். அதை விட்டுட்டு உறையிலேர்ந்து எடுத்த கத்தி மாதிரி கையிலேயே வைச்சுண்டு அலைஞ்சா பயம் தான் வருமே தவிர மரியாதை இல்லை” என்றாள்.

யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான். அதனால் “சரி! அவங்களைப் பத்தி இப்ப என்ன? உன் வாழ்க்கைக்கு வா” என்றேன்.

“அப்பா ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தார். படிப்பு ஜாஸ்தி இல்லை. சின்ன வயசிலேயே தன் அப்பாவை இழந்தவர். எப்படியோ கவர்மெண்ட் வேலையில் சேர்ந்துட்டார். அவருக்கு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைச்சல். நான் ஒரே பொண்ணு. எங்கப்பாவுக்கு ஜாதகத்துலே ரொம்ப நம்பிக்கை. அப்பாவோட ஜாதகத்தோட என்னோடது அமோகமா சேர்ந்து போச்சுங்கிற ஒரே காரணத்துக்காக வேற எதை பத்தியும் கவலைப்படாம எங்க கல்யாணத்தை நடத்திட்டார். எனக்கு ஓரளவு சொத்தும் வைச்சுட்டு போய்ட்டார். எங்க கல்யாணம் நடந்த அன்னிக்கே எவ்வளவோ பேரு ‘இந்த அசட்டு வரதுவுக்கு என்ன அதிர்ஷ்டம் பாத்தியா’ன்னு எங்க காதுபடவே பேசிக்கிட்டாங்க. அப்பாவுக்கும் நம்பவே முடியலை. ‘இது எந்த நிமிஷமும் கலையப் போற ஒரு கனவு’ன்னு நினைச்சுண்டு தான் வாழ்க்கையைத் துவக்கினார். ஆனால் நான் அவருக்கு எல்லா மரியாதையும் தந்தேன். நான் ஏதாவது ஒரு விஷயத்துலே பெரிசா முன்னுக்கு வந்து அவரை விட்டுட்டுப் போயிடுவேன் இல்லை அவரோட அதிகாரத்தை எதிர்த்துடுவேன்னு அவருக்கு எப்பவும் ஒரு பயம், கவலை . அதீதமான அன்பு காரணமாத்தான் இந்த பயம். அந்த அன்பை வெளிப்படுத்த முடியாம ஒரு பொசசிவ்னெஸ் குறுக்கே வந்துடறது. நான் அவரைச் சார்ந்திருக்கும் பொழுது அன்பா இருப்பார். உதாரணமா எனக்கு ஏதாவது உடம்பு படுத்தினா சிரத்தையா கவனிச்சுப்பார். இதை நான் நன்னா புரிஞ்சுண்டேன். அதனாலே அதை நான் பெரிசுபடுத்தலை. ஆனால் சில விஷயங்கள்லே நான் விட்டுக் கொடுக்கலை. உதாரணமா உங்க ரெண்டு பேரையும் வளர்க்கிறதுலே நான் சொன்னது தான் சட்டம்!” என்று நிறுத்தினாள்.

“அதுக்காக எவ்வளவு நாள் பாக்கி விஷயங்கள்லே இப்படி அவமானப்படப்போறே?”

“திவ்யா, நீ ஆகாஷோட வார்த்தைக்கு வார்த்தை வாதாடி உன் சுதந்திரத்தை நிலை நாட்டறதா நினைக்கறே. இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்கின கருவை நீ மட்டும் வேண்டாம் முடிவு பண்ணினது நியாயமா? மிரட்டலும், பிடிவாதமும் தான் பெண் சுதந்திரத்துக்கு வழியா திவ்யா? கணவன், மனைவி ஒருத்தரை ஒருத்தர் மதிக்கிறது தான் சுதந்திரமே தவிர ஒருத்தரை பார்த்து பயப்படறது இல்லை. நீ சொல்ற மாதிரி அப்பாவை அவமானப்படுத்தி, சூடா நாலு வார்த்தை கேட்க எனக்கு ரொம்ப நாழி ஆகாது. என்னாலே அவமானங்களை தாங்கிக்க முடியும். ஆனால் பதிலுக்கு நான் அவமானப்படுத்தினா அவர் உடைஞ்சு போயிடுவார். அதைச் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. உலகம் தெரியாத பொழுது கணவர்னா இப்படித்தானோன்னு பயத்திலே பேசாம இருந்தேன். உலகம் தெரிஞ்ச உடனே “ஐயோ பாவம்! என்னைத் தவிர வேற யார்கிட்டேயும் இவர் ஜம்பம் சாயாது”ன்னு பரிதாபத்திலே பேசாம இருக்கேன். என் சுதந்திரத்தை நான் எப்படி உபயோகப்படுத்தறேன் தெரியுமா? அவருக்கு தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்த நான் அனுமதி தரேன், இடம் தரேன். என் முகத்திலே இருக்கிற புன்சிரிப்பை சுலபமா யாராலேயும் துடைக்க முடியாது. னால் அவரைச் சுலபமா ஒரு மூலையிலே உட்கார வைச்சுடலாம். எங்க தாம்பத்தியத்லே நான் தாண்டி பலசாலி. அவரில்லை. இப்பச் சொல்லு, நீ பெண்ணியவாதியா, நானா?

சிறிது நேரம் பேச்சற்று கழிந்தது. ‘அம்மா தான் என்னைவிட சக்தி வாய்ந்தவளோ?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

(கல்கி - 19/9/2004)

17 Comments:

At 12:23 pm, July 30, 2005, Blogger குழலி / Kuzhali said...

// உலகம் தெரிஞ்ச உடனே “ஐயோ பாவம்! என்னைத் தவிர வேற யார்கிட்டேயும் இவர் ஜம்பம் சாயாது”ன்னு பரிதாபத்திலே பேசாம இருக்கேன். என் சுதந்திரத்தை நான் எப்படி உபயோகப்படுத்தறேன் தெரியுமா? அவருக்கு தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்த நான் அனுமதி தரேன், இடம் தரேன்//

உண்மை போலத்தான் தெரிகின்றது, அடுத்த ஆண்டு சொல்கின்றேன் எந்த அளவு உண்மையென

முந்தைய தலைமுறை ஆண்கள் மட்டுமல்ல இந்த தலைமுறை ஆண்களிலும் பலர் இப்படி செய்கின்றனர்.

 
At 12:50 pm, July 30, 2005, Anonymous Anonymous said...

நீண்ட நாளைக்குப் பின் அருமையான கதை அக்கா.

அப்பா, அம்மாவாக இருந்தாலும் நியாயம் எனப் பட்டால் நம் பக்கத்து வாதத்தை எடுத்துச் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன் நான்.

 
At 4:08 pm, July 30, 2005, Blogger முகமூடி said...

யதார்த்தமான கதை ரம்யா.. அந்த அம்மாவின் தெளிவையும் சிந்தனை¨யும் கொண்ட பெண்மணிகளை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். இந்த கதை பிரசுரமானதில் ஆச்சரியமில்லை.

 
At 8:34 pm, July 30, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

யதார்த்தமான கதை என்றாலும், ஒரேயடியாக அடங்குவதும் இல்லை என்றால் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவதாகவுமே கதைகளை படிக்கிறேன்.பெணக்ள் பாத்திரங்களை இப்படி ஏன் all or none என்று படைக்க வேண்டும்?

 
At 8:46 pm, July 30, 2005, Blogger யாத்ரீகன் said...

thaen thuli solvadhu sari..

aanaal, kadhaiyin karuvaanadhu arumai..

pen viduthalai, puratchi pen endru ellam palar ninaithukondu enna panukindraargal... enna ninaithaal paavamaagathaan iruku..

 
At 9:34 pm, July 30, 2005, Anonymous Anonymous said...

உண்மை போலத்தான் தெரிகின்றது, அடுத்த ஆண்டு சொல்கின்றேன் எந்த அளவு உண்மையென

குழலி, அடுத்த ஆண்டு உங்களுக்குத் திருமணம் என்பதை தெரிவித்தமைக்கு நன்றி :)

 
At 10:30 pm, July 30, 2005, Blogger Jayaprakash Sampath said...

அட.... மொதல்ல கொஞ்சம் ஏனோதானோன்னு படிக்க ஆரம்பிச்சு... சட்டுன்னு கதை, உள்ள இழுத்துடுச்சு....நல்லா எழுதியிருக்கீங்க ரம்யா...

 
At 7:34 am, July 31, 2005, Blogger Ramya Nageswaran said...

குழலி, அனானிமஸ் சொன்ன மாதிரி அடுத்த வருடம் கல்யாணமா? கல்யாண மாலை ஸ்டைல்லே சொல்றேன் "சிறந்த மனைவி அமைவாங்க. வாழ்த்துக்கள்."

நன்றி, மூர்த்தி.. கொஞ்ச நாளா காணுமே வலைப்பூக்கள்லே.. நலம் தானே?

முகமூடி நன்றி.. இது கிட்டதட்ட நானும் பார்த்தவர்களைப் பற்றியது தான்..

நன்றி பத்மா.. இந்த கதையை பொறுத்தவரை ஒரேடியா அடங்கும் பாத்திரம் இல்லை. ஏன் சிலர் (வெளி உலகப் பார்வையில்) இப்படி அடங்கி வாழ்கிறார்கள்? ஏன் எதிர்க்க பயப்படுகிறார்கள்? பயம் தான் ஒரே காரணமா? வேறு காரணங்கள்? நாம் யார் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று assume பண்ணுவதற்கு? Things are never black and white. இப்படியேல்லாம் யோசனை சென்றது. அப்பொழுது வந்தது தான் இந்தக் கதை.

நன்றி, செந்தில்.

நன்றி, ஐகாரஸ்.. கொஞ்சம் நீளமோ கதை? கல்கியிலே இரண்டு பாரா கட் பண்ணிடாங்க.. எனக்கு மனசு வரலே.. :-)

 
At 7:30 pm, July 31, 2005, Blogger Ramya Nageswaran said...

மஞ்சுளா, நன்றி..உங்க புகைப்பட collection வளர வாழ்த்துக்கள்!

 
At 9:54 pm, July 31, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

சற்றே நீளமான சிறுகதை !!! யதார்த்தமாக உள்ளது. நல்ல கதையும் கூடத் தான்.
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

 
At 12:58 am, August 01, 2005, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

ரம்யா
உங்கள் கதையில் (??) வருவதைப் போல் பலரது நிஜமான வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி... ஜாதகம் பார்த்து வைக்கும் திருமணங்களில் வீட்டுக் கொடுத்தல் என்பது எழுதப் படாத சட்டமாக இருக்கிறது. யார் எங்கே எந்த சமயத்தில் எதை விட்டுக் கொடுக்கிறார்கள் என்பது ஒருவரது திருமண வாழ்க்கையின் முதிர்ச்சியையும் அறிவையும் காட்டுகிறது.

பெண்ணியம் என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் எதிர்ப்பது சரியானதில்லை. சுயமான சம்பாதனை, சுயசிந்தனை பெண்களுக்கு சுதந்திரக் காற்றை தானாகவே அவர்கள் பக்கத்தில் தென்றலாக வீசச் செய்கிறது என்பது தான் உண்மை.

 
At 8:56 am, August 01, 2005, Anonymous Anonymous said...

//நன்றி, மூர்த்தி.. கொஞ்ச நாளா காணுமே வலைப்பூக்கள்லே.. நலம் தானே?//

அன்பின் சகோதரி,

எனது மின்முகவரி, ப்ளாக்கர் கணக்கு, புத்தக குழுமம் என எல்லாமும் ஒருசேர தாக்குதலுக்கு உள்ளாதனதால் என்னால் வலைப்பூக்களில் தலைகாட்ட முடியவில்லை. நிறையபேரின் மின் முகவரிகளையும் இழந்து விட்டேன். தயவு செய்து mmorthee [at] yahoo [dot] com எனும் புதிய மடல் முகவரிக்கு மடல் இடுங்கள். சில முக்கியமான செய்திகள் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.

 
At 12:33 pm, August 01, 2005, Blogger Ramya Nageswaran said...

கருத்துக்களுக்கு நன்றி, கங்கா.

நன்றி, பாலா.. பொறுமையாக படித்ததற்கும்!

மூர்த்தி, நன்றி.. கூடிய விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

 
At 12:43 pm, August 01, 2005, Blogger Chandravathanaa said...

ரம்யா
நல்லா எழுதியிருக்கிறீங்கள்.

அவருக்கு எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைச்சல்.
நான் ஏதாவது ஒரு விஷயத்துலே பெரிசா முன்னுக்கு வந்து அவரை விட்டுட்டுப் போயிடுவேன் இல்லை அவரோட அதிகாரத்தை எதிர்த்துடுவேன்னு அவருக்கு எப்பவும் ஒரு பயம்இ கவலை .


இதுதான் பல சமயங்களில் ஆண்கள் தமது அதிகாரத்தை மனைவியர் மீது செலுத்துவதற்கான முக்கிய காரணம்.

முழுமையாக ஆண்களை எதிர்ப்பதுதான் பெண்விடுதலை இல்லை. அந்தந்த இடங்களில் விட்டுக் கொடுத்து ,காலங்காலமாகத் தொடரும் ஆண் அதிகாரம் பெண்களை எப்படி ஒடுக்குகிறது என்பதை ஆண்களுக்குப் புரிய வைத்து.... என்று தொடர்கிறது. விட்டுக் கொடுப்பு என்பது அவசியம்.

அதற்காக மனைவி வகுப்பு நடத்தும் போது ஒரு கணவன் சேர்ட்டை கொண்டு வந்து முகத்தின் முன் நீட்டி இஸ்திரி போடவில்லையா என்று கேட்பது மிகுந்த அநாகரீகமான செயற்பாடு. உடனே மற்றவர்கள் முன் பேசாமல் இருந்தாலும் பின்னர் அந்தக் கணவனுக்கு, அது எத்தகைய அநாகரிகமான ஈகோ நிறைந்த செயற்பாடு என்பதை மனைவி புரிய வைக்காது விட்டால் அது கூடத் தவறுதான்.

இந்தத் தந்தையின் அதிகாரத் தன்மையும், தாயின் அடங்கல் தன்மையும் பிள்ளைகளின் மனதைப் பெரிதும் பாதிக்கும் என்பதற்கு அந்த மகளின் செயற்பாடே உதாரணமாகிறது. மகள் கர்ப்பமான போது, குழந்தை இருவருடையதும். கணவன் விரும்பாத போதும் நான் அதை இல்லாமற் செய்வேன் என்ற பிடிவாதமான செயற்பாடு அந்த மகளுக்கு ஏன் வந்தது? இது பெற்றொரின் நடத்தை அந்த மகளிடம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பே!

 
At 2:20 pm, August 01, 2005, Blogger Ramya Nageswaran said...

வாங்க வாங்க சந்திரவதனா, உங்க நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி..குழந்தைகளைப் நீங்கள் சொல்வது மிகவும் சரி. ஒன்று, அவர்கள் மிகவும் தைரியமில்லாதவர்காளாகி விடுகிறார்கள் அல்லது மிகவும் மூர்க்கமாக சிலவற்றை எதிர்பவர்களாகிவிடுகிறார்கள்.

அதனால் தான் கணவன்-மனைவி என்ற உறவை விட பெற்றோர்கள் என்ற உறவுக்கு பொறுப்புகள் மிக மிக அதிகம். அவர்களின் செயல்கள் பாதிக்க போவது அவர்களின் குழந்தைகளை மட்டுமல்ல அந்த குழந்தைகள் பெரியவர்களாகி உருவாக்கும் குடும்பங்களையும் தான்.

 
At 6:16 am, August 06, 2005, Anonymous Anonymous said...

Very nice story after a long time. Please keep writing. It is very hard to find a nice short story in tamil magazine nowadays

 
At 7:31 am, August 06, 2005, Blogger Ramya Nageswaran said...

Dear Mr. Deiva Meyyapppan,

Thank you for your generous compliments and encouragement.

 

Post a Comment

<< Home