Monday, August 08, 2005

விடியல் - சிறுகதை

குழந்தை வீறிட்டு அழுதது. அவள் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். மணி இரவு 11:45. கண்கள் எரிந்தன. குழந்தையை வாரியணைத்து முதுகில் தட்ட ஆரம்பித்தாள்.

சாயந்திர நிகழ்ச்சிகள் ஞாபகம் வந்தன. ஏதோ ஒரு அல்ப விஷயத்திற்காக ஊரிலிருந்து வந்திருக்கும் மாமியாரிடம் சண்டை. அறிவுபூர்வமாக வந்த வாக்குவாதம் என்றால் சில நிமிடங்களில் வெற்றி, தோல்வி நிச்சயிக்கப்பட்டு அமைதி நிலவியிருக்கும். ஆனால் இரண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். 'ஈகோ'க்கள் விஸ்வரூபமெடுத்ததால் சமாதானப் புறா பறக்க இடமே இல்லை. வழக்கம் போல் மாமனாரும், கணவரும் தலையிடவில்லை. 'உங்கள் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்' என்பது அவர்களது அணுகுமுறை. எல்லோரும் ஏதோ சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிவிட்டு படுத்து விட்டார்கள்.

குழந்தை 'சட்'டென்று அழுகையை நிறுத்த வேண்டுமே என்று மனம் பரபரத்தது. சப்தம் கேட்டு மாமியார் எழுந்து வந்து, குழந்தை அவரிடம் சமாதானம் அடைந்து விட்டால் அது ஒரு அடையாளத் தோல்வியாக இருக்குமே என்று பயம். மாமனாரின் இருமல் சப்தம் கேட்டது.

"அழுதையை நிறுத்தேண்டா. என் மானத்தை வாங்கிடாதே!' என்று சற்று சத்தமாக முணுமுணுத்தாள். தட்டலின் வேகத்தை அதிகரித்தாள்.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கணவன், "அம்மாவை வேணா கூப்பிடட்டுமா?" என்றான்.

'ஒண்ணும் வேண்டாம். நீங்க பேசாம படுங்க!' என்றபடி அறைக் கதவை மூடினாள்.

'எழுப்பினால் என்ன?' என்றது பகுத்தறிவு. பெங்களூரிலிருந்து கணவனுக்கு டெல்லிக்கு மாற்றல் வந்த பொழுது 'மொழி தெரியாமல் கைக் குழந்தையுடன் கஷ்டப்படுவாயே' என்று உதவி செய்யத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மாமனார் வேலையில் இருந்த பொழுது பல ஊர்களில் இருந்த அனுபவம். இருவரும் சரளமாக ஹிந்தி பேசுவார்கள்.

குழந்தையும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டான். தங்கள் உடல் சிரமத்தை பொருட்படுத்தாது அவனுடன் சமமாக விளையாடினார்கள். மாமானாரின் வேலையினால் வசதிகள் இல்லாத பல ஊர்களில் தன் ஒரே மகனை வளர்க்க பட்ட கஷ்டங்களைக் கூறியுள்ளார் மாமியார். இன்னும் பத்து நாட்களில் சென்னை திரும்பி விடுவார்கள். கணவனும் வேலை விஷயமாக வெளியூர் சென்று, குழந்தையும் இப்படி படுத்தினால் என்ன செய்வது என்ற பயம் தோன்றியது. "இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு போங்கள்" என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வது? 'நாம தான் கொஞ்சம் விட்டு கொடுத்து, பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் என்ன?' என்று நினைத்துக் கொண்டாள்.

அழுகையின் தீவிரம் சற்றுக் குறைந்ததே தவிர நிற்கவில்லை. 'ஒருவேளை வயிற்று வலியா இருக்குமோ? இல்லே வேறேதாவது உடம்புக்கு....?' நாளைக்கு டாக்டரிடம் போகணும் என்றாலும் மாமியார் துணையோடு தான் போகணும். புது வீட்டில் இன்னும் சாமான்கள் கூட சரியாக எடுத்து வைக்காத நிலையில், உடல் அலைச்சலோடு இப்பொழுது மன உளைச்சல். லேசாக கண்ணீர் துளிர்த்தது.

"முருகா! நான் வயசானவங்க மனசு நோகும்படியா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடப்பா. என் குழந்தையை தண்டிச்சுடாதே. என்னாலே தாங்க முடியாது!" கந்தசஷ்டி சொல்ல ஆரம்பித்தாள். அழுகை ஒரு விதமான விசும்பலாக மாறி இருந்தது.

'அம்மா! ஸாரிம்மா! கொஞ்சம் படபடன்னு பேசிட்டேன். இவனுக்கு கொஞ்சம் 'கிரைப் வாட்டர்' கொடுத்து பார்க்கறீங்களா? ரொம்ப நேரமா அழறான். பயம்மா இருக்கு....' மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே கதவை திறக்கப் போனாள்.

'டக்'கென்று அழுகை நின்றது. ஒரே சீராக மூச்சு விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான் குழந்தை. மணி 11:58. பதின்மூன்று மாதங்களாக தோன்றிய பதின்மூன்று நிமிடங்கள்!

காலையில் காப்பி போடுவதற்காக சமையலறையில் நுழைந்தாள்.

"குழந்தை ராத்திரி ரொம்ப அழுதான் போலிருக்கே", என்றார் மாமியார்.

"ம்ம்... கொஞ்சம் அழுதான். நான் தான் பத்தே நிமிஷத்துலே சமாதானப்படுத்திட்டேனே!" 'வெடுக்' கென்று வந்தது பதில்.

வெளியே மட்டும் தான் விடிந்திருந்தது.

(கல்கி - 12/12/99)

15 Comments:

At 3:38 am, August 09, 2005, Blogger முகமூடி said...

// சமாதானப் புறா பறக்க இடமே இல்லை //

மாமியார் கிட்ட மாத்திரமா.. புருஷன்கிட்டயும்தான் இந்த பெண்மனிகள் ரொம்ப ஈகோ பார்க்கிறார்கள்...

>> பத்த வச்சிட்டியே பரட்டை <<

 
At 3:38 am, August 09, 2005, Blogger முகமூடி said...

பெண்மணிகள்

 
At 5:39 am, August 09, 2005, Blogger ச.சங்கர் said...

Realistic-ஆக எழுதியிருக்கீங்க
நடுவுல "அம்மாவ வேணா எழுப்பட்டுமா"ன்னு கேட்டு
வாங்கிக் கட்டிக்கிட்டாரே ஒருத்தர்..ஆம்பளைங்களுக்கு பட்டாலும் தெரியறதில்லையப்பா

அன்புடன்...ச.சங்கர்

 
At 9:31 am, August 09, 2005, Blogger துளசி கோபால் said...

அதானே, அப்படிச் சட்டுன்னு தோல்வியை ஒப்புக்கொள்ள முடியுமா?

ஹிந்தி என்ன பெரிய ஹிந்தி, கத்துக்க முடியாதா என்ன?

நல்ல கதை ரம்யா!

 
At 6:49 pm, August 09, 2005, Blogger Ramya Nageswaran said...

முகமூடி.. இது தான் சாக்குன்னு சொந்த கதை சோக கதையை சொல்லிட்டீங்களா?? :-))

சங்கர் உங்க அனுபவமுமா?? :-)) பின்னூட்டத்துக்கு நன்றி!

துளசிக்கா, நீங்க நிச்சயம் ஈகோ இல்லாத மருமகளாத்தான் இருந்திருப்பீங்க.. எங்க எல்லார் பதிவிலேயும் உங்க ஊக்கம் தர பின்னூட்டத்திலிருந்தே தெரியறதே உங்களுக்கு ஈகோ இல்லைன்னு!

நன்றி!!

 
At 8:17 pm, August 09, 2005, Blogger கயல்விழி said...

நன்றாக இருக்கிறது கதை. பெண்களுக்க பெண்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்தா என்னவாம். மாமியும் அம்மாவைப்போல தானே? :)_

 
At 7:30 pm, August 10, 2005, Blogger Ramya Nageswaran said...

வாங்க கயல்விழி.. நீங்க சொன்னது போல நடந்துகிட்டா பிரச்சனையே இல்லையே!

 
At 11:15 pm, August 10, 2005, Blogger Manjula said...

ஆஹா, நல்லா சொன்னீங்க துள்சி, அவங்களே ஹிந்தி கத்துண்டாங்கன்னா, நம்மளால முடியாதா? நம்ம கிட்ட சமாதானம் ஆகாத குழந்தை அவங்க கிட்ட போனா மட்டும் அழுகையை நிறுத்திடுமா? என்னத்துக்கு தோல்விய ஒத்துக்கணும்கறேன்..!

நன்றாகக் கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள் ரம்யா. பாராட்டுக்கள்.

 
At 1:58 am, August 11, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் said...

அப்பாடா..

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதை உணர்த்திய முகமூடிக்கும், ச சங்கருக்கும் நன்றி!

கதை நன்றாக இயல்பாக இருந்தது ரம்யா, நான் சொல்லலாமா கூடாதா எனத் தெரியவில்லை, ஆரம்பத்தில் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. (நமக்குள்ளே கூட சொல்லிக்கலைன்னா வேற யார் இதையெல்லாம் சொல்லுவாங்க?)

 
At 1:01 pm, August 11, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, மஞ்சுளா, சுரேஷ்.. சுரேஷ், திருந்தங்களை தாராளமா சொல்லலாம்.. ஆரம்பம் கொஞ்சம் நீளமா இருக்கா?

 
At 2:05 pm, August 11, 2005, Blogger பினாத்தல் சுரேஷ் said...

நீளமாக இருக்கிறது என்று கூறவில்லை. முன்னால் நடந்த சண்டை சம்பவங்களை முதலில் சொல்லாமல், கதைக்கு உள்ளே கூறி இருந்தால், வாசகர்களை உடனேயே கதைக்குள்ளே இழுத்திருக்கலாம். உள்ளே நுழைவதில் சற்று சிரமம் இருந்திருக்காது என்றுதான் கூற வந்தேன்.

 
At 4:48 pm, August 11, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

ரம்யா,

யதார்த்தத்தின் மிக அருகில் சென்று, கதை சொல்லியிருக்கிறீர்கள். ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி (மாமியாருடன் சமரசம் செய்து கொள்வார் என்று!) குழந்தையின் அழுகை பிரச்சினையில்லாமல் தீர்ந்தவுடன், மீண்டும் மனம் குரங்காக மாறுவதாகக் காட்டியிருப்பது இந்தக் கதையின் சூழலுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல சூழல்களுக்கும் பொருந்தக் கூடியதே !!!!

Well written !!! மென்மேலும் சிறப்பான கதைகள் புனைய வாழ்த்துக்கள்.

அப்படியே (கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு!) என் பழை .............ய கதை ஒன்றையும் படித்துப் பாருங்கள் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

 
At 10:26 pm, November 05, 2005, Blogger S.G.Ramkumar said...

சிறுகதை எனக்கு பிடித்துள்ளது. எனக்கு விமர்சனமெல்லம் தெரியாது. தலைப்பு நன்றாகா அமைந்துள்ளது.

 
At 9:28 pm, November 07, 2005, Blogger தருமி said...

நன்றாக இருந்தது. சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை. எழுத்துச் சித்தருக்கு பெண்பால் போட்டுக்குங்க; அது என்ன> 'எழுத்துச் சித்தி'!!

 
At 9:17 am, November 08, 2005, Blogger Ramya Nageswaran said...

Ram, இந்தக் கதையை எப்படி தேடிப் படிச்சீங்க? :-) பிடித்தது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.

தருமி சார், இவ்வளவு நாட்கள் அக்காவா இருந்தேன், இப்ப சித்தி ஆக்கிட்டீங்களா?? :-) ரொம்ப நன்றி!!

 

Post a comment

<< Home