Saturday, September 03, 2005

நிஜ பூதங்கள்





"Amma, are there real monsters?" வாரம் ஒரு முறையாவது என் ஆறு வயது மகள் தூங்கப் போவதற்கு முன் கேட்கும் கேள்வி. ஏதாவது கதை படித்திருப்பாள் அல்லது டிஸ்னியின் உபயமாக இருக்கும். எப்பொழுதுமே அரைகுறை நம்பிக்கையோடு தான் "இல்லை கண்ணம்மா..there are no real monsters" என்று சொல்லுவேன். அவள் கேள்வி எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 'எந்த தைரியத்திலே நான் குழந்தை பெற்றுக் கொண்டேன்? நம்மால் இந்த உலகுக்கு வந்த குழந்தையிடம் 'உனக்கு இங்கு ஒரு பாதுகாப்பான, சுகாதாரமான சூழ்நிலை இருக்கும். சக மனிதர்கள் உன்னை மனிதாபினத்தோடு நடத்துவார்கள். நீ ஒரு நல்ல மனிதனாக/மனுஷியாக வளருவாய்..' அப்படின்னு உறுதி மொழி தர முடியுமா? அப்படி இருக்கும் பொழுது இந்த உலகுக்கு கொண்டு வர எனக்கேன்ன உரிமை இருக்கிறது?' அவள் இரண்டு நாள் குழந்தையாக என் மடியில் இருக்கும் பொழுதே "நம்மை முழுவதுமாக நம்பி இன்னோரு உயிர்" என்ற உணருதல் வந்து ஒரு பயத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தியது. கண்ணீர் வழிந்தது. பிறகு அதை போஸ்ட் பார்டம் ப்ளூஸ் என்று தள்ளினாலும் அந்த பயம் உண்மையானதுதானே?


கல்யாணம் ஆனா சில வருடங்கள்லே குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு நம்ம மனசுலே ஒரு எண்ணம் படிஞ்சுத்தான் போயிருக்கு. 'ஏன்? எதுக்கு' ன்னு கேள்வி கேட்க நிறைய பேருக்கு தோன்றுவதில்லை. நான் கேட்டுக்கலைங்கிறது தான் உண்மை. இன்னும் சொல்லப் போனா சில வருடங்களுக்கு முன் மருத்துவ காரணங்களுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு தம்பதியரின் நட்பு கிடைத்தது. நானாகவே அவர்களுக்கு இது வருத்தமளிக்கும் விஷயம் அப்படிங்கிற முடிவுலே இருந்தேன். 'பாவம்.. அவளுக்கு குழந்தை பொறக்கலை' என்று அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு cliched வாக்கியத்தின் பாதிப்பு. ஒரு நாள் இதைப் பற்றி அந்த தோழி வெளிப்படையாக பேசினாள் 'குழந்தை இல்லாதது ஒரு குறையாகவே தெரியலை. என்னாலே என் மனசுக்கு பிடிச்ச பல விஷயங்களை சுதந்திரமா செய்ய முடியறது," என்று. அன்று தான் அந்த பரிமாணத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டால் பல பதில்கள் வரலாம்: நம்மோட திருமண வாழ்க்கையிலே ஒரு பொதுவான குறிக்கோள் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவியை ஒண்ணு சேர்க்கிற ஒரு விஷயம், வயசானால் நம்மை பார்த்துக்க ஒரு ஆள், நம்மாலே சாதிக்க முடியாத சில விஷயங்களை சாதிக்க ஒரு வாரிசு... இப்படி யோசிச்சா குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு சுயநலமான முடிவை தவிர வேறொன்றும் இல்லையோ?

அவர்கள் அளிக்கும் அளவில்லா மகிழ்ச்சியையும், உலகைப் பற்றிய ஒரு புதிய, fresh ஆன பார்வையையும், சில சமயம் கண்ணீர் துளிர்க்கச் செய்கிற innocence ஐயும் அணு அணுவாக ரசிக்கும் அதே நேரத்தில் இது போன்ற பயங்களும்/கேள்விகளும் வரத்தான் செய்கின்றன. அதுவும் சுனாமி, மும்பாய் பேய் மழை, குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நடந்தாலும் சரி, தேன் துளி பத்மாவின் சமீபத்திய பதிவில் படித்த விஷயங்கள், வன்முறை தாக்குதல்கள், குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கும் வெறியர்கள், வக்ர புத்தி படைத்தவர்களின் கொடுமைகள் போன்ற செய்திகளைப் படித்தாலும் சரி... நிஜ பூதங்கள் பற்றிய பயம் வந்துவிடும். என் மகளைப் பொறுத்த வரை monsters என்றால் பச்சை நிறத்தில், பெரிய சைஸில், பயங்கற கண்களோடு இருக்கும் ஜந்துக்கள். சக மனிதர்கள் எல்லோரும் நேசிக்கப்பட வேண்டியவர்கள். சில எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும், இன்னும் கொஞ்ச நாளாவது இந்த சிந்தனையை குலைக்க வேண்டாமே என்று மனம் ஏங்குகிறது.

நேற்றிரவு மீண்டும் முளைத்த அவள் கேள்விக்கு அதே பதில் தான் சொன்னேன். அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் என்னை கட்டிப் பிடித்தபடி தூங்கிவிட்டாள். 'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் தான் கொஞ்சம் நேரமானது.

21 Comments:

At 4:50 pm, September 03, 2005, Blogger துளசி கோபால் said...

//கல்யாணம் ஆனா சில வருடங்கள்லே குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு நம்ம மனசுலே ஒரு எண்ணம் படிஞ்சுத்தான் போயிருக்கு. 'ஏன்? எதுக்கு' ன்னு கேள்வி கேட்க நிறைய பேருக்கு தோன்றுவதில்லை. //

குழந்தையில்லேன்னு நாம கவலைப்படுறதைவிட இந்த சமுதாயம் நமக்காகக் கவலைப்படுது பாருங்க, அப்பத்தான் குழந்தை இல்லாத குறை பூதாகரமாத் தெரியும்.

அதுவும் குழந்தை இல்லாததுக்கும் எது எதுக்குன்னு கணக்கே இல்லாத விஷயங்களுக்கெல்லாம் முடிச்சுப் போட்டு பின்னாலே பேசற 'சொல்' உங்களை வந்து சேரும் பாருங்க அப்ப இருக்கு
மனவேதனை. இட்டிலித்தட்டு = குழந்தை!!!!!

இதை நான் சும்மாச் சொல்லலை. எல்லாம் சொந்த அனுபவம்தான்.

குழந்தை கிடைக்கிறவரை அதைத் தவிர வேறு சிந்தனையே இல்லாம இருந்ததெல்லாம் ஒரு காலம் ரம்யா!

 
At 9:54 pm, September 03, 2005, Blogger Ramya Nageswaran said...

துளசிக்கா, எப்பவுமே ஜாலியா இருக்கிற உங்களை ஃபீல் பண்ண வைச்சுட்டேனா? ஸாரி!

 
At 10:17 pm, September 03, 2005, Blogger பத்மா அர்விந்த் said...

Ramya
For many women across globe, children are a tool to keep their lover, husband and marriage together. I know many american women get preganant intentionally to get a commitment from their husband and then end up in misery.
I had discussed the women who lost their husband because they could not have a child. Even before we analyze the reasons, men with their mother's support get married again. Poor women loose their life, and be a burden on their father who are poor themselves. This fear even leads to adultary in India an dother nations.
As foa as monsters are concerned, I am of the belief that one day in the future they will be completely extinguished. This is what I tell my son, and also tell him that he will get the courage to be part of the force that destroy them.
I apologize for my comment in English

 
At 2:47 am, September 04, 2005, Blogger Ramya Nageswaran said...

தேன் துளி, நன்றி.. நீங்கள் எழுதியது போல் குழந்தை பிறப்பு என்பது பல பரிமாணக்கள் உள்ள ஒரு விஷயம். நான் ஒரு பரிமாணத்தை தான் தொட்டிருக்கேன்.

இவ்வளவு அவலங்களைச் சந்தித்த/ சந்திக்கும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பொழுது எனக்கும் அது தொற்றிக் கொள்கிறது.. நன்றி.

 
At 5:23 am, September 04, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,

இதுக்கு எதுக்கு ஸாரி? 'குழந்தை'ன்ற விஷயம்
நம்ம தேந்துளி சொல்ரதுபோல பல குடும்பங்களை ஒரு கட்டுக்குள்ளே வைக்கவும் பயன்படுதுதான்!

நல்ல பதிவு ரம்யா.

வருங்காலத்தில் உலகம் இன்னும் நல்லா மாறிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கணும்தானே!

 
At 10:57 am, September 04, 2005, Blogger ஜென்ராம் said...

//'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் தான் கொஞ்சம் நேரமானது.// - இது ரம்யாவின் பதிவில் இருக்கும் வரிகள்..

//I am of the belief that one day in the future they will be completely extinguished. This is what I tell my son, and also tell him that he will get the courage to be part of the force that destroy them.// - இது தேன் துளியின் மறுமொழியில் இருக்கும் வரிகள்..

இரு வேறு சிந்தனைகள்..

காண்டேகரின் கிரௌஞ்சவதம் படித்திருக்கிறீர்களா?
சமூகத்தில் ஒரு தவறு..இதை 3 விதமாக மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

சொல் - கண்ணீர் - ரத்தம் !

வெறும் கண்டனப் பேச்சுக்கள் நமது வலைப் பதிவுகளைப் போல்..

தவறுகளைக் களைய கருத்துரீதியாக முடிவு, ஆனால் செயல்பாடின்றி போராடுபவர்கள் மீது அனுதாபம் மட்டும் கொண்டு கண்ணீர் விடுதல்..

செய் அல்லது செத்து மடி என்று களத்தில் நிற்கும் போராளிகள்..

ஒரு பேராசிரியர், சுலோ என்ற அவரது மகள், திலீபன் என்ற அவரது மாணவன்..மூன்று கதாபாத்திரங்கள் மூலம் இந்த "சொல், கண்ணீர், ரத்தம்" தத்துவத்தை நாவல் முழுக்க பிரமாதமாக விளக்கியிருப்பார்..

 
At 5:19 pm, September 04, 2005, Blogger Ramya Nageswaran said...

ராம்கி, நன்றி.. நாவலை நான் படித்ததில்லை.

என்னை பொறுத்த வரை நீங்கள் சொல்லும் மூன்று விதமான reactions ஸும் mutually exclusive அல்ல. சூழ்நிலை மற்றும் நம்முடைய மனோதிடத்தை பொறுத்து நாம் react செய்வோம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு சற்று விரக்தியாக இருக்கும் நான் கண்ணீர் விட்டால், எல்லா சூழ்நிலையும் நான் கண்ணீர் தான் விடுவேன் என்று அர்த்தமில்லை.

இரண்டாவது, பத்மா சொல்லும் best case scenarioவின் மீது நம்பிக்கை வைத்தாலும், ஒரு practical scenario விற்கு மனரீதியாக தயாரகத் தான் இருக்க வேண்டியிருக்கிறது.

 
At 11:02 pm, September 04, 2005, Blogger தாணு said...

இவ்வளவு மோசமான உலகத்துக்குள் புது ஜீவனை கொண்டு வர நமக்கென்ன உரிமை உள்ளது என்று யோசிப்பதைவிட, கொஞ்சம்
வித்தியாசமாக யோசிக்கலாமே! அடுத்த தலைமுறையை வழி நடத்த தக்கவர்களாக நம் மக்களை வளர்க்க முயற்சிக்கலாம் இல்லையா? பூதங்கள் பற்றிய கனவு நம் குழந்தைப்பருவத்தில்
வந்தபோது எப்படி யோசித்தோம்? அதன் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட பதில்களைச் சொல்லும் திடம் நமக்குள் வரும்போது குழப்பங்கள் தவிர்க்கப்படும்!

 
At 10:49 am, September 05, 2005, Blogger Ramya Nageswaran said...

தாணு, நன்றி.. அப்படி வளர்க்கத் தான் முயன்று வருகிறேன். நம் பெற்றோர்களுக்கு இல்லாத ஒரு வசதி நம்க்கின்று இருக்கிறது: அது தான் information explosion. இது பல சமயம் நன்மையே விளைவித்தாலும், சில சமயம் ignorance is bliss என்றே தோன்றுகிறது.

 
At 11:15 pm, September 06, 2005, Anonymous Anonymous said...

'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்'

உங்கள் தாயுள்ளம் தெரிகிறது. கவலைப் படாதீர்கள் இந்தக் கால குழந்தைகளுக்கு நம்மை விட மனவலிமை அதிகம். நிஜ பூதங்களையெல்லாம் நம்மை விட அனயாசமாக திறமையாக சமாளிப்பார்கள்

 
At 6:34 am, September 07, 2005, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ரம்யா, உங்கள் அன்பும், எச்சரிக்கையுணர்வும் ஆதங்கமும் புரிகிறது. நிஜ பூதங்கள் சாத்தியம் என்பது ஒரு புறம் இருந்தாலும், நீங்கள் குழந்தைக்கு ஊட்டும் நம்பிக்கை பொதிவானது தான். அதனையே நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

 
At 10:22 am, September 07, 2005, Anonymous Anonymous said...

//இந்தக் கால குழந்தைகளுக்கு நம்மை விட மனவலிமை அதிகம். நிஜ பூதங்களையெல்லாம் நம்மை விட அனயாசமாக திறமையாக சமாளிப்பார்கள் //

ஆமாம் ரம்யா. அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வைக் கொடுத்துவிட்டால் போதும்.

 
At 11:29 am, September 07, 2005, Blogger Ramya Nageswaran said...

டுபுக்கு, செல்வராஜ், தங்கமணி, நம்பிக்கையூட்டும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.. நானும் கூடிய வரை அந்த மனோபாவத்தில் தான் இருக்கிறேன். ஆனால், நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு fragile என்பதை மனிதர்களோ, இயற்கையோ நினைவூட்டும் பொழுது சற்று ஆடித்தான் போய்விடுகிறேன்.

வாழ்க்கையின் மேல் இருக்கும் அதீத நம்பிக்கையின் சிறந்த எடுத்துக் காட்டு குழந்தை பெற்றுக் கொள்வது என்று எங்கோ படித்த ஞாபகம். நம் நம்பிக்கைகள் வீண் போகாமல் இருக்க இன்று விநாயகரிடம் ப்ரார்திக்கிறேன்.

 
At 4:49 pm, September 08, 2005, Blogger Ramya Nageswaran said...

டி. ராஜ் நன்றி.. உங்க ப்ளாகைப் பார்த்தேன். நிறைய எழுத வாழ்த்துக்கள்.

 
At 5:51 pm, September 08, 2005, Blogger U.P.Tharsan said...

அருமை! என் அம்மாவின் அன்புப்புலம்பல்களை ஒத்திருப்பதான ஒரு பதிவு. :-) அருமை.

 
At 6:36 pm, September 08, 2005, Blogger Sud Gopal said...

//இப்படி யோசிச்சா குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு சுயநலமான முடிவை தவிர வேறொன்றும் இல்லையோ?//
இனப்பெருக்கம் என்பது அனைத்து உயிரினங்கள் இடையேயும் காணப்படும் ஒரு பொதுவான விஷயமில்லையா??

ஒரு இன்டென்சிவ் ரீடிங் விட்டுட்டு மத்த கருத்துகளையும் சொல்றேன்...

 
At 9:09 pm, September 08, 2005, Blogger Ramya Nageswaran said...

வாங்க பிரிய தர்சன்..எல்லா அம்மாக்களுக்கும் ஒரு விஷயத்துலே ஒண்ணு தான் போல! :-)

சுதர்சன் கோபால்.. இன்டென்சிவ்வா படிக்க மாதிரியேல்லாம் ஒண்ணும் எழுதலை!:-)

 
At 9:47 pm, September 08, 2005, Blogger வீ. எம் said...

//அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் //

ரம்யா அக்கா,

நிஜ பூதங்கள் வராமல் இருக்கவேண்டுவது நல்லது.. அதே சமயத்தில் சில பூதங்கள் வாழ்க்கையில் வராமல் தடுப்பது சற்று கடினம்.. தவிர்க்க இயலாத பூதங்கள் பல உள்ளது.. அதிலும் பெண்களுக்கு எதிரான பூதங்கள் நிறைய என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்....

ஷ்ரேயாவின் குழந்தைக்கு பிறந்தநாள் விழாவின் போது மாமி ரூபத்துல ஒரு குட்டி பூதம் வந்தார்களே. நினைவிருக்கா?? அது மாதிரி குட்டி குட்டி பூதங்களும் ஏராளம்.. தவிர்ப்பது கடினம்..

ஆக, முற்றிலும் வர வேண்டாம் என நினைப்பதை விட, வரும் பூதங்களை எப்படி கையாள வேண்டும்..தைரியமாக எதிர்கொள்ளவேண்டும் என சொல்லிக்கொடுங்கள்..
எதிர்க்கொள்ள குழந்தைக்கு தைரியம் கொடு என இறைவனிடம் வேண்டுங்கள்!

 
At 3:14 pm, September 09, 2005, Blogger Ramya Nageswaran said...

//மாமி ரூபத்துல ஒரு குட்டி பூதம் வந்தார்களே. நினைவிருக்கா??//

வீ.எம், ஷ்ரேயாவின் மாமி ஊர், ஊரா வந்து நம்மளையேல்லாம் ஒதைக்க போறாங்க!! :-) கோ. கணேஷ் வேற அவங்களை லூஸு மாமின்னு சொன்னதா ஞாபகம்!

டி. ராஜ்.. இங்கே பல பதிவர்கள் பூனை தான் (என்னையும் சேர்த்து).. எப்பவாவது கஷ்டபட்டு புலி உறுமல் மாதிரி ஒரு சவுண்ட் விடுவோம். அவ்வளவுதான். அதைப் கேட்டு தப்பா எடை போட்டுடாதீங்க! :-)))

 
At 4:35 pm, September 09, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

//கோ. கணேஷ் வேற அவங்களை லூஸு மாமின்னு சொன்னதா ஞாபகம்!//
பாத்தீங்களா..... மாமிக்கு பாயிண்டு எடுத்துக் கொடுக்கறீங்களல்ல...

ரம்யா.... இரண்டு முறை இந்த பதிவைப் படித்து முடித்திருந்தாலும் ஏனோ என்னால் இயல்பாக எழுத முடியவில்லை. கருத்துக்கள் அருமை.

எங்கம்மா எப்படி யோசிச்சாங்கன்னு கேட்கணும்.

 
At 9:09 am, September 10, 2005, Blogger Ramya Nageswaran said...

கணேஷ்..நன்றி. அம்மவோட பேசும் பொழுது அப்படியே கொழுக்கட்டை ரெசிப்பி வாங்கினா, எனக்கும் மெயிலே அனுப்பிவிடுங்க. இங்கே பிள்ளையாருக்கு சேமியா பாயஸம் தான்!!

 

Post a Comment

<< Home