அகத்தின் அழகு - சிறுகதை
இந்த வார நட்சத்திரம் கோ. கணேஷுடைய இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை பார்த்ததும் இந்த கதையை வலையேற்றலாம் என்று தோன்றியது.
-------------------------------------------------------------------------------
“நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா! வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான் கிஷோர்.
“என்ன கிஷோர்? நாளைக்கு ராத்திரி லோகு வரானே? மறந்துபோயிடுத்தா? மூணு நாள் இங்கே தானே தங்கப் போறான்!” என்றாள் ரேகா.
ரேகாவின் அத்தை மகன் லோகு என்ற லோகேஷ். பல குடும்பங்களில் நடப்பது போல் ரேகாவிற்கும் லோகுவிற்கும் திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் இரு குடும்பங்களிலும் லேசாக இருந்தது. அது அரசல் புரசலாக வெளிப்படவும் செய்தது. ரேகா காலேஜில் படித்துக் கொண்டிருந்த பொழுது லோகேஷ் எம். பி. ஏ படிப்பை முடித்து விட்டு ரேகாவிற்காக சென்னையில் வேலை தேடிக் கொண்டான். ஓரு புகழ் பெற்ற விளம்பர நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்தது. இயல்பாகவே கலகலப்பாகப் பழகுவான். ஏதாவது ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான். நேர்த்தியாகவும் சற்று ஆடம்பரமாகவும் உடை உடுத்துவான். ஒரு நாள் வீட்டில் தங்கி விட்டுப் போனால் இரண்டு நாட்கள் அவனுடைய டியோடெரெண்டின் வாசனை அந்த அறையைச் சுற்றும். ரேகாவின் மனம் அவனைச் சுற்றியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! இருவர் வீட்டிலும் சற்றுப் பழமைவாதிகள் இருந்ததாலும் அதிகாரப்பூர்வமாக சம்மதம் கிடைக்காததாலும் சந்திப்புக்களும் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தன.
ரேகாவின் படிப்பு முடிந்ததும் ஜாதகத்தை கையில் எடுத்த பெரியவர்கள் முதலில் லோகுவின் ஜாதகத்தோடு தான் ஒப்பிட்டார்கள். துளிக்கூட சேரவில்லை! தாம்பத்தியம் நீடிப்பது மிகவும் கஷ்டம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ஜோசியர். மனம் உடைந்துப் போனான் லோகு. அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் ரேகா. “ஜோசியத்தை நம்பாம திருமணம் செஞ்சுப்போம்னு தீவிரமா இருந்தீங்கன்னா நாங்க குறுக்க நிக்கலை. ஆனால் நாளைக்கு ஒரு கஷ்டம்னா எங்க கிட்டே வந்து கண்ணை கசக்காதே” என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டார் ரேகாவின் அப்பா. இருவருக்கும் குடும்ப ஜோசியரிடம் நம்பிக்கை இருந்ததால் இந்த விஷப் பரீட்சையில் இறங்க அவர்களிடம் தைரியம் இல்லை. சில மாதங்களில் யதார்த்தத்தை ஒப்புக் கொண்டுவிட்டனர் இருவரும். ரேகாவிற்கு கிஷோருடன் திருமணம் நடந்த இரண்டு மாதத்திற்குள் லோகுவிற்கு அனிதாவுடன் திருமணம் நடந்தது. உடனே லோகுவிற்கு மும்பைக்கு மாற்றமும் வந்தது.
கிஷோர் எந்தவிதத்திலும் லோகுவிற்கு குறைந்தவனில்லை. ஆனால் சுபாவத்தில் நேர் எதிர்! அமைதியானவன், ஆழமானவன். சுலபத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அலசக்கூடியவன். தன் காதலைப் பற்றி யாராவது உறவினர் மூலம் கேள்விப்படுவதை விட நாமே சொல்லிவிடுவது தான் நியாயம் என்று நினைத்த ரேகா, கல்யாணத்திற்கு முன்பாகவே கிஷோரிடம் தன் தோற்றுவிட்ட காதல் கதையை சொல்லிவிட்டாள்.
“ஸாரி டு ஹியர் தட் ரேகா. நீ என்னை கல்யாணம் செஞ்சுண்டா எந்த விதமான ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ சந்திக்காம இருக்க என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் பண்றேன்,” என்று பண்போடு பதிலளித்தான். அதற்கு மேல் துருவித் துருவி ஒன்றும் கேட்கவும் இல்லை. லோகுவின் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டான்.
இதுவே ரேகாவிற்கு அவன் மேல் ஒரு மரியாதை கலந்த காதல் உருவாக அஸ்திவாரமாக இருந்தது.
இப்பொழுது இரண்டு வருடம் கழித்து லோகு வரப்போகிறான். ஆனால், கிஷோர் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை!
“நான் இல்லேன்னா என்ன ரேகா? உங்க ரெண்டு பேருக்கும் தான் பேச நிறைய விஷயம் இருக்குமே! நான் அடுத்த தடவை மீட் பண்ணா போச்சு!” என்றான் கிஷோர்.
கிஷோரை கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தாள் ரேகா, அந்த வலையில் தானே விழப் போவது தெரியாமல். “என்ன கிஷோர்? லோகு யாருன்னு மறந்து போயிடுத்தா? என் முன்னால் காதலனோட நான் மூணு தான் தனியா இருக்கிறதுலே ஆட்சேபம் ஒண்ணும் இல்லியா?” என்றாள் குறும்பாக சிரித்தபடி.
“லோகு யாருன்னு நன்னா ஞாபகம் இருக்கு ரேகா. ஒரு விதத்துலே நான் ஊர்லே இல்லாதது நல்லது தான்னு நினைக்கறேன்” என்று சொல்லி நிறுத்தினான் கிஷோர்.
ரேகாவின் முகம் சிவக்க ரம்பித்தது. “நான் சும்மா தமாஷ் பண்ணா நீ என்ன உளர்றே?” என்று சீறினாள்.
“கோபப்படாதே ரேகா. சொல்ல வந்ததை முழுக்க கேளு. இந்த சந்திப்பு உன் ழ் மனசுலே இருக்கிற சில உணர்ச்சிகளை நீ நேருக்கு நேர் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு” என்றான்.
குழம்பிய முகத்தோடு பார்த்தவள், “புரியலை” என்றாள்.
“நீ என்னை கணவனா பரிபூர்ணமா ஏத்துண்டாலும் லோகு மேலே ஒரு சின்ன கவர்ச்சி பாக்கி இருக்கு இல்லையா?” அவள் கண்களை நேராக பார்த்தபடி கேட்டான் கிஷோர்.
சடாரேன்று தலையை குனிந்து கொண்டாள் ரேகா. எல்லா விஷயங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளும் தன் கணவனின் இந்தக் குணம் அவளுக்கு பரிச்சியம் தான். ஆனால் தான் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை. அவனை நேருக்கு நேர் பார்க்க கூச்சமாக இருந்தது. தன் உணர்வுகளை மறுத்து கிஷோரை ஏமாற்ற அவள் விரும்பவில்லை.
“ஆமாம் கிஷோர். நான் அதை மறைக்க விரும்பலை. ஆனால் அதை நினைச்சு வெட்கப்படறேன். உன் முன்னாலே கூனிக் குறுகி ஒப்புக்கறேன். என்னோட உள் மனசுலே இருக்கிறதே எப்படி கண்டுபிடிச்சே கிஷோர்?” பாதி நேரம் தரையை பார்த்தபடி பேசி முடித்தாள் ரேகா.
“ரொம்ப சுலபம். சாதாரணமாவே ஒருத்தரை புரிஞ்சுக்க எனக்கு அதிக நேரம் தேவைப் படாது. அதுவும் தவிர உன் கண்கள் எவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ்னு நான் பல தடவை வர்ணிச்சுருக்கேன். அதை வைச்சே உன் உணர்ச்சிகளை நான் கண்டுபிடிச்சுடுவேன். லோகுவை பத்தி பேசும் பொழுதேல்லாம் உன் கண்கள்லே ஒரு பிரகாசம். அவன் கல்யாணம் நடந்த பொழுது அவன் மனைவி உன்னை விட பெரிசா அழகுலேயோ படிப்பிலேயோ உசத்தி இல்லைன்னு நீயா முடிவு பண்ணி சந்தோஷப்பட்டுண்டே. உன் அம்மாவோட பேசும் பொழுதும் சரி, மும்பைலே இருக்கிற உங்க ரெண்டு பேரோட இன்னோரு கஸினோட பேசும் பொழுதும் சரி லோகுவை பத்தி விசாரிக்காம இருக்க மாட்டே. என்னை ஏமாத்தறதா நினைச்சு குரலை மட்டும் அசுவாரஸ்யமா மாத்திப்பே. என்னோட வேலையிலே எனக்கு கிடைக்கிற வளர்ச்சியையும், நம்ம வாழ்க்கை முறையிலே ஏற்ப்படற வளர்ச்சியையும் லோகுவோட வாழ் நிலையோட ஒப்பிட இந்த சம்பாஷணைகள் உனக்கு உதவியா இருந்ததுன்னு எனக்கு தெரியும். இத்தனை க்ளூஸ் போறாதா ரேகா உனக்கு இன்னும் கொஞ்சம் கவர்ச்சி பாக்கி இருக்குனு முடிவு பண்ண?” என்ற கிஷோர் தொடர்ந்தான், “இதிலே வெட்கப்படவோ, வருத்தப்படவோ ஒண்ணுமே இல்லை ரேகா. ஒரு நல்ல ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுவை கொஞ்ச நேரம் நாக்குலே தங்கறதில்லையா? அதே மாதிரி உன்னை உண்மையா நேசிச்ச ஒருவனோட அன்பு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.”
“ஒரு பக்கம் நான் இவ்வளவு ட்ரான்ஸ்பெரண்டாவா இருந்திருக்கேன்னு நினைச்சு அவமானமா இருக்கு. இன்னோரு பக்கம் என் கணவன் என்னை இவ்வளவு தெளிவா புரிஞ்சு வைச்சுருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு. உனக்கு கோவமோ, பொறாமையோ வரலையா?”
“இரண்டுமே ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகள் இல்லையே! உன் உணர்ச்சிகள் நிஜம். அதை முதல்லே நாம ஒப்புக்கணும். அக்ஸெப்டண்ஸ் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கிற முயற்ச்சியின் முதல் படி. அடுத்தது பிரச்சனையை தைரியமா எதிர் கொள்ளணும். அதைத் தான் நாம இப்ப பண்ணறோம். நான் கோபபட்டிருந்தா நீ உன் பீலிங்ஸை அமுக்கி மனசோட ஒரு மூலைக்கு தள்ளியிருப்பே. ஆனா அது இருந்துகிட்டு தான் இருக்கும். அது சரியான தீர்வில்லையே? முதல்லே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. தீவிரமா யோசிச்சு பார்த்தப்போ நீ என் மேல மனப்பூர்வமா அன்பு செலுத்தறதுலே எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. லோகு மாதிரி நான் வெளித் தோற்றத்துலே கொஞ்சம் ஆடம்பரமா இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னு எனக்கு புரிஞ்சுது. இதை நீ மறைமுகமா எனக்கு பல தடவை உணர்த்தியிருக்கே. உனக்காக நான் ஓரளவு மாறினாலும் லோகுவை காபி அடிக்கறதுலே எனக்கு உடன்பாடு இல்லை. வெளித் தோற்றத்துலே மயங்கறது மனித இயல்பு ரேகா. எவ்வளவோ பேரு மாதவன் போட்டோவையும், சிம்ரன் போஸ்டரையும் வீட்லே வைச்சுக்கறது இல்லையா? அதுக்காக எல்லா கணவனும் மாதவனாக முடியுமா இல்லை மனைவி தான் ஆல் தோட்டா பூபதி டான்ஸ் ட முடியுமா?” என்று சிரித்தான் கிஷோர்.
ரேகாவால் சிரிக்க முடியவில்லை. கண்கள் லேசாக கலங்க ரம்பித்தன. “என் எதிர்பார்ப்புகளை உன் மேலே திணிக்க முயற்சி செஞ்சு என்னை அறியாம உன்னை காயப்படுத்தியிருக்கேன் இல்லை?” என்றாள்.
“சீ! பைத்தியம். எதுக்கு அழறே? எதிர்பார்க்கறதுலே என்ன தப்பு? என்ன எதிர்ப்பார்க்கிறோம்ங்கறது தான் முக்கியம். இப்போ நாம ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போறோம். அவர் மனைவி அருமையா சமைச்சுருக்காங்க. ரேகா இவ்வளவு நன்னா சமைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கறது தப்பில்லை. ஆனால் இவங்க எனக்கு மனைவியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நான் நினைச்சா, அது நம்ம மண வாழ்க்கையோட தோல்வி! அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கிற விஷயம்.”
“எனக்கு புரியறது கிஷோர். நான் இப்ப என்ன செய்யணும்?”
“நாளைக்கு லோகுவைப் பார்க்கும் பொழுது தைரியமா உன் உணர்ச்சிகளை முழுமையா சந்திச்சு, இந்தக் கவர்ச்சி வாழ் நாள் முழுக்க நீடிக்க போறதா இல்லை நீ இதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான உணர்ச்சியா மாத்திக்க போறியான்னு முடிவு பண்ணிக்க. குட் லக்!” என்று சொல்லிவிட்டு பிஸ் போய்விட்டான் கிஷோர்.
அடுத்த நாள் மாலை வாசல் மணி ஒலித்தது. லோகுவோடு உள்ளே நுழைந்தாள் அனிதா. சம்பிரதாய பேச்சுக்களும் பரஸ்பர விசாரிப்புகளும் முடிந்தன. அனிதா பாத்ரூமில் நுழைந்ததும், “நீ மட்டும் தானே ஆஃபீஸ் விஷயமா வரதா இருந்தே....” என்றாள் ரேகா.
“நேத்திக்கு சாயங்காலம் போன்லே பேசும் பொழுது நீ கிஷோர் ஊருலே இல்லைன்னு சொன்னே இல்லையா? அனிதாவுக்கு நம்ம காதல் விஷயத்தை சொல்லியிருக்கேன். அதான், அடம் பிடிச்சு கடைசி நேரத்துலே என் கூட வந்துட்டா. நான் அவளை உண்மையா நேசிக்கறேன் ரேகா இருந்தாலும் எப்பப் பார்த்தாலும் சந்தேகம்...” என்று சோகமாக இழுத்தான் லோகு. அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் வடிந்து ஆயாசமும் அயர்ச்சியும் தான் தெரிந்தது.
லோகுவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. மனதில் ஒரு மூலையில் இருந்த உணர்ச்சிகளுக்கு விடுதலை அளித்து மனத்தை விசாலப் படுத்திய கிஷோர் எங்கே? இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மனத்தை குறுகலாக்கி கொண்டிருக்கும் அனிதா எங்கே?
“கவலைப்படாதே லோகு. இன்னும் ஒரு ரெண்டு நாட்கள் கூட தங்கிட்டுப் போ. கிஷோர் வந்ததும் நானும் அவரும் அனிதாவோட பக்குவமா பேசி அவ மனசை மாத்த எல்லா முயற்சியும் செய்யறோம். உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்,” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் கிஷோரின் வருகையை வலுடன் எதிர் நோக்கினாள் ரேகா.
(அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2004ல் இரண்டாவது பரிசு பெற்ற கதை)
29 Comments:
அப்டி போடுங்க....
சிறுகதை எழுதறது எப்படின்னு உங்க கிட்டக்க பயிற்சி எடுத்துக்கறதா இருக்கேன்.
வாழ்க்கை பரிணாமங்களை நாலு காரக்டர் மூலமா சொன்னது நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள் கதைக்கும் வாங்கிய பரிசுக்கும்
ரம்யா..
இதுக்கு முன்னால இந்த சிறுகதைய வேற ஏதாவது மின்சஞ்சிகையில பதிஞ்சிருக்கீங்களா? எங்கயோ படிச்சா மாதிரி இருக்கு.
கண்டிப்பா கல்கியில இல்லை.
அட... என்னங்க இது... முன்னாள் காதலர்கள், சந்திப்பு, ரூப்புதேரா மஸ்தானா... ந்னு raincoat கணக்கா கதை போவும்னு பார்த்தா... மனைமாட்சி கணக்கா முடிச்சுட்டீங்களே... ஓ... கதை வந்தது கல்கியா.. சரி சரி...
Ramya eppidi irukringal??
kathai valakam polave nalla iruku.
ரம்யா:
லோகுவை பழைய காதலில் இன்னும் இருப்பவனாக சித்தரிப்பீர்கள், அதை கண்டு ரேகா திருந்துவாளென என்று நினைத்தேன். :) நல்ல வித்தியாசமான முடிவு.
கதை சூப்பருங்க.கிஷோர் மாதிரி ஆளுங்களை பாக்கிறது அறிதுங்க.மனசு விட்டு பேசிட்டா
பிரச்சனையே இல்லீங்க ,அப்பிடியே நமக்கும் கதை எழுத ஆசை ,டிப்ஸ் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்.
ரம்யா
இந்த கதையை நான் முன்பே படித்திருக்கிறேன். எங்கே என்று நினைவில்லை. நிச்சயமாக கல்கியாக இருக்க முடியாது. நான் கல்கி படித்தே 15 வருடங்கள் ஆகிவிட்டன.வேறேங்காவது வலையேற்றி இருந்தீர்களா?
றம்யா கதையின் கருவும் அதை கூறிய விதமும் அழகு வாழ்த்துக்கள். உறவினர்கள் அதுவும் காதலித்தவர்கள் சாத்திரம் சம்பிரதாயங்களை நம்பி பிரிந்தது தான் வருத்தம். அதெப்படி இப்படி அழகா கதை சொல்ற மாதிரி எழுதிறீங்க. :))
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கணேஷ், செயகுமார்..ரொம்ப நன்றி..பயிற்சி, டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கேல்லாம் இன்னும் எழுதலை!! :-)
ஜோசஃப் சார், பத்மா, என்னுடைய வலைத்தளம் ஆரம்பிச்ச புதுசிலே ஒரு முறை போட்டேன். இரண்டு நாட்கள் இருந்தது. அப்புறம் காணாம போய்கிட்டே இருந்தது. சரி, ப்ளாகருக்கும் கதை பிடிக்கலைன்னு விட்டுட்டேன். அப்ப படிச்சுருக்கலாம் நீங்க...வேறே எங்கேயும் போடலை.
ப்ரகாஷ்..இன்னுமா மனைமாட்சி காட்டறாங்க?:-) முதல்லே மனைமாட்சி எடுப்போம் ப்ரகாஷ்..அப்புறம் rain coat அப்படி இப்படின்னு எடுக்கலாம்..என்ன சொல்றீங்க?
சினேகிதி..நல்லா இருக்கேன்..ரொம்ப நன்றி.
டி ராஜ், கயல்விழி..கதை பிடித்தது குறித்து ரொம்ப மகிழ்ச்சி..நன்றி.
ரம்யா இந்த கதையை இரண்டு வருடத்திற்கு முன்பு, பெங்களூரில் இருந்து சென்னை திரும்பும்பொழுது படித்தது ஞாபகம் இருக்கு.
ஆனா அப்ப ரம்யா யாரு என்று தெரியாது :-)
பிரகாஷ் சொல்லியதைப் போல, முடிவு இம்ரஸ்சிவா இல்லை, ஆனால் யோசித்துப் பார்த்தால் எப்படி முடிப்பது என்றும்
தெரியவில்லை. நீங்கள் வேறு முடிவு முயற்சி செய்தீர்களா?
ஆனால் கணவன், மனைவிக்கு நடக்கும் சம்பாஷணைகள் ரொம்ப நல்லா வந்திருக்கு. இப்படி புரிந்துக் கொள்ளும் கணவன்,
யதார்த்தவாதியைப் பார்க்கலாமே தவிர, மனைவியின் அந்தரத்தை தானும் படித்து பிறருக்கு காட்டுபவன்..ஹீஹ¥ம் :-)
ரம்யா, கணேஷின் பதிவுக்குரிய பின்னூட்டம் இது. உங்க கதையை வாசித்துவிட்டு எழுதறேன்---
அந்த கவிதை கற்பனையாக இல்லாத பட்சத்தில், அது ஏன் உங்க நண்பரோட கதையாகவே இருக்கக்கூடாது. தண் நிலைமையை மனைவியின் டைரிக் குரிப்பாக எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து. தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அளவு பிறரின் உணர்ச்சிகளை இத்தனை நெருக்கமாக விளக்க முடியாது. இது னிச்சயன் உங்கள் நண்பரின் முதல் காதல் தாக்கமாகத்தான் இருக்கும், நோண்டிப் பாருங்க.
முதல் காதலும், முதல் முத்தமும், எல்லார் மனதிலும் நீறு பூத்துதான் இருக்கும். நிகழ்காலம் தோல்வி காட்ட ஆரம்பிக்கும்போது, கடந்த காலம் பீறிட்டு வந்துவிடும்.
ரம்யா,
ப்ராக்டீஸ் பண்றீங்களா? கதைக்கரு ஏதேனும் கேஸின் பாதிப்பா? லோகுவின் மனைவி போன்ற காரெக்டர்கள்தான் அதிகம் ரம்யா? தம்பதியருக்குள் ஒளிவு மறைவு இருக்காக்கூடாதுன்னு பழைய கதைகள் சொல்லாப் பட்டதாலே விவாகரத்துக்கு செல்லும் அளவு மன முறிவு கொண்டவர்கள் அதிகமில்லையா? ஆனால் கிஷோர் கற்பனைப் பாத்திரம் என்றாலும், இது போன்ற தெளிந்த கருத்துக்களை நம் அளவிலாவது வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் இந்த கதைக்கு வெற்றி.
ரீ ரன்னா இருந்தாலும் நல்லா இருக்கு.
'சிறுகதைச் செம்மல்'னு பட்டம் யாரும் கொடுக்கலியா? மதுமிதா பத்து நாள் ஊருக்குப் போகப்போறேன்னு ஒரு மாசமா சொல்லிகிட்டிருக்காங்க. திரும்ப வந்ததும் பரிந்துரைக்க வேண்டியதுதான்.
//கணேஷ், செயகுமார்..ரொம்ப நன்றி..பயிற்சி, டிப்ஸ் கொடுக்கிற அளவுக்கேல்லாம் இன்னும் எழுதலை!! :-)//
ரம்யா.. இந்த சிரிப்பு ஒண்ணு போதுமே நீங்க ஓகே சொன்னதா எடுத்துக்கறேன்.
//மனைவியின் அந்தரத்தை தானும் படித்து பிறருக்கு காட்டுபவன்..ஹீஹ¥ம் :-)//
ஐயோ... பாதிப்புகள் அதிகமா இருக்கும் போல:-) ரொம்பவே கோபமா இருக்கீங்களோ...???!!!!!
உஷா
கணவன், மனைவியே ஆனாலும் ஒருவரின் அந்தரங்கத்தை மூன்றாம் நபருக்கு சொல்வது முற்போக்கு இல்லை, அநாகரீகம். அந்த வகையில் நீங்கள் சொல்வதை ஒப்பு கொள்கிறேன். அதுதான் யதார்த்தம். அதெ சமய்ம் கிஷோர் போன்ற பாத்திரங்களும் இருக்க கூடும்.
"thanu said...
ரம்யா, கணேஷின் பதிவுக்குரிய பின்னூட்டம் இது. உங்க கதையை வாசித்துவிட்டு எழுதறேன்---
அந்த கவிதை கற்பனையாக இல்லாத பட்சத்தில், அது ஏன் உங்க நண்பரோட கதையாகவே இருக்கக்கூடாது. தண் நிலைமையை மனைவியின் டைரிக் குரிப்பாக எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து. தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அளவு பிறரின் உணர்ச்சிகளை இத்தனை நெருக்கமாக விளக்க முடியாது. இது னிச்சயன் உங்கள் நண்பரின் முதல் காதல் தாக்கமாகத்தான் இருக்கும், நோண்டிப் பாருங்க.
முதல் காதலும், முதல் முத்தமும், எல்லார் மனதிலும் நீறு பூத்துதான் இருக்கும். நிகழ்காலம் தோல்வி காட்ட ஆரம்பிக்கும்போது, கடந்த காலம் பீறிட்டு வந்துவிடும். "
"அகத்தின் அழகு" -இது கற்பனை கதையோ? இல்ல சம்மந்தபட்டவரின் சொ(தெரி)ந்த நிகழ்வோ?
நண்பர்களே, மீண்டும் எல்லோருடைய கருத்துக்களுக்கும் நன்றி...
என்னுடைய கதைகள் எதுவுமே நூற்றுக்கு நூறு கற்பனை இல்லை..நான் நேரிடையாக சம்மந்தப்பட்ட விஷயங்கள் அல்லது பார்த்த விஷயங்கள் தான். என் அண்ணனின் நண்பர்கள் இருவர் காதலித்தார்கள் ஆனால் சில காரணங்களுக்காக திருமணத்தில் முடியவில்லை..ரேகா கொஞ்சம் அந்தப் பெண்..கொஞ்சம் நான்..எனக்கும் ஒருவர் மேல் ஈர்ப்பு இருந்தது. ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதேல்லாம் தெரிந்த என் கணவர் அவருடன் ஒரு நல்ல நண்பராக பழகினார், பழகுகிறார். கிஷோர் என் கணவரின் குணாதிசியங்களின் பாதிப்பு(ஆனா ரேகா அளவு நான் சீரியஸா இல்லாததுனாலே உரையாடல்கள் கற்பனையே!)
உஷா, முடிவு கொஞ்சம் contrived தான். என் கதைகளை நண்பர் Sreekanth Meenakshi படித்து கருத்து சொல்வார். இதை அவருக்கு அனுப்பியவுடன் "ஏதோ கணவன் - மனைவி couselling sessionனுக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு" என்று சொன்னார்!
டாபிக் கொஞ்சம் sensitiveஆ இருந்ததாலே வேறே எப்படி எழுதறதுன்னு எனக்கு தெரியலை.
சகோதரி, இன்று தான் உங்க கதையை படித்தேன்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கணவன், மனைவி என்று ஆனப்பின்பு ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அகத்தினை அறிந்து வாழ வேண்டும்.
நீங்க சொன்ன கிஷோர் மாதிரி ஒருவர் உண்மையில் இருந்தால் கை எடுத்து கும்பிட வேண்டும்.
கதையில் வரும் ரேகா ஆகட்டும் அனிதா ஆகட்டும், அதே நிலையில் தான் ஆண்களுக்கும். எத்தனையோ குடும்பங்களில் நாம் பார்த்திருக்கிறோம் தானே.
லோகுவின் நிலையில் எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை அவஸ்தையாக அனுபவித்து வருகிறார்கள் தானே.
இக்கதையை, உங்க அனுமதியோடு எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்க திட்டமிட்டுருக்கிறேன்.
இது போன்ற கதைகள் அதிகம் எழுதுங்கள்.
Hi:
You liked the Ambi Mama Survey iliya? Check out the sequel to it now : http://tambram.bravehost.com/tambram_vikatan.html
BTW www.tambram.bravehost.com is the new destination for TamBrams worldwide. We are trying to promote this as a meeting place for tambrams and also a place to contribute any content a tambram ma like...
Pour in your content to tambrams@gmail.com
Regards,
TamBram Team
For a Tam, who is a Bram, by a TamBram
""அகத்தின் அழகு" -இது கற்பனை கதையோ? இல்ல சம்மந்தபட்டவரின் சொ(தெரி)ந்த நிகழ்வோ?" ரொம்ப யோசனைக்கு பின்(கொஞ்சம் பயம்)இந்த கேள்வி கேக்கலாமான்னு நெனச்சி அப்புறம் சொ(தெரி)ந்த அப்டீனு எழுதினேன்
உங்கள் திறந்த மனதுக்கு என்னுடைய மனச்சார பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
ரம்யா,
முன்பே படிச்ச கதைன்னாலும் இன்னொருக்காப் படிச்சேன்.
நல்லா வந்துருக்கு. வாழ்த்துக்கள்.
சகோதரர் பரஞ்சோதி, கதை பிடித்தது குறித்து ரொம்ப மகிழ்ச்சி..தாராளமாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
செயகுமார், எல்லோருக்கும் இது போன்ற ஒரு அனுபவமாவது ஏற்பட்டிருக்கும். அதனால் நீங்க கேட்டதை நான் தவறாகவே நினைக்கவில்லை. இது ஒரு இயற்கையான அனுபவம். இதை பகிர்ந்து கொள்ளறதுலே நான் வெட்கப்படலை.
துளசிக்கா, நன்றி..
80'ஸ்ல விசு நடிச்சு, இயக்கி வந்திருக்க வேண்டிய ideal ppl படம் :-)
மன்னிச்சுக்கோங்க இரம்யா.. படிக்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா மனசுல மேல உள்ள வரிதான் தோணுச்சு..
ஒரு எக்ஸ்ட்ரா ஸ்மைலி வேணா போட்டுக்குறேன் :-)
என்னுடைய தோழி ஒருத்தி, இத்தகைய நிலையில தான் இருக்கா, இன்னும் கல்யாணம் ஆகலை, ஆனால் கட்டாயம் காதலித்தவனோட கல்யாணம் கிடையாதுனு வீட்ல சொல்லிட்டாங்க... அவளோட எண்ண ஓட்டங்கள் புரிந்ததனால், என்னால கதைக்களத்தை புரிஞ்சுக்க முடிஞ்சது..
கதையை இரசிக்க முடியாட்டியும்.. வசனங்கள் நல்லாவே இருந்தது..
தீவிர காதல் ஒருவனை, கல்யாணம் ஒருவனை.. எல்லாம் நம்பிக்கை வைத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய ஒரு சின்ன கிராமத்து பெற்றோரின் மனநிலையில் ஒரு சிறுகதை சொல்லுங்களேன்..
அந்த perspective-உம் கேட்க்க ஆர்வமா இருக்கேன்..
-
செந்தில்/Senthil
யாத்ரீகன், வருகைக்கும், உங்க வெளிப்படையான கருத்துக்களுக்கும் நன்றி..இதுக்கு மன்னிப்பேல்லாம் எதுக்கு?? :-)
//எல்லாம் நம்பிக்கை வைத்து வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய ஒரு சின்ன கிராமத்து பெற்றோரின் மனநிலையில் ஒரு சிறுகதை சொல்லுங்களேன்..//
இப்படிப்பட்டவர்களை இன்னும் சந்திக்கவில்லை...சந்தித்தால் நிச்சயம் எழுதுகிறேன்..
உண்மையில் கதை மிக நன்றாக வந்திருக்கிறது.
நன்றி, மூர்த்தி..புதுமணத் தம்பதியர் தீபாவளி நன்றாக கொண்டாடினீர்களா?
Ramya,
"kathai super. kishore nalla act kuduthukunaar.. suspense sooper..nooru naal odum"
oru vishayam romba pidichi irunthathu... kishore pattu'nu sonnapiram rekha atha marupillama yethukittathukku...
innum yezhuthunga...
vaazhuthukkal.
இதை படிக்க இப்போ தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப நுணுக்கமான சப்ஜக்ட். நல்ல கையாண்டிருக்கீங்க. நல்லா இருக்கு.
//இப்போ நாம ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போறோம். அவர் மனைவி அருமையா சமைச்சுருக்காங்க. ரேகா இவ்வளவு நன்னா சமைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கறது தப்பில்லை. ஆனால் இவங்க எனக்கு மனைவியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நான் நினைச்சா, அது நம்ம மண வாழ்க்கையோட தோல்வி! அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கிற விஷயம்.”//
நிதர்சணமான வரிகள். ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.
இன்னைக்குத்தான் உங்களோட வலைப்பூவுக்கு முதம் முறையா வர்றேன்.
இனிமே தான் எல்லா பதிவுகளையும் படிக்கனும்.
Post a comment
<< Home