Wednesday, August 24, 2005

அன்புத் தோழி! உனக்காக கொஞ்ச நேரம்.....

சமீபத்தில் என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவம் இது. கல்லூரிப் படிப்பை முடித்த மகன் படிப்பைத் தொடர வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்கிறான். அம்மாவால் மகனின் பிரிவை தாங்க முடியவில்லை. மகனை அனுப்பி வைத்துவிட்டு மன அழுத்தத்தாலும், மன உளைச்சலாலும் அவதிப்படுகிறாள் தாய். சிறிது நாட்களில் இது மனநிலை பாதிப்பாகவே மாறி மன நல மருத்துவரின் உதவியை நாடும் அளவிற்குப் போய் விட்டது.

இது ஒரு extreme example தான் என்றாலும் யோசித்து பார்த்த பொழுது பொதுவாகவே நமது குடும்ப சூழலில் திருமணம் ஆனவுடன் மனைவியின் திறமைக்கோ, படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட கணவனின் வேலைக்கும், ஈடுபாடுகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் என்பது தெரிந்தது தான்.

ஒரு குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே உடல் ரீதியாக பல பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் ஒரு தாய் இருக்கிறாள். அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் முக்கிய பொறுப்பு அவளுக்கு தான் அதிகம் வருகிறது.

என் தோழி ஒருத்தி திருமணத்திற்கு முன் நல்ல பரத நாட்டியக் கலைஞராக இருந்தார். கணவன் அவளிடம் “எனக்கு பரதம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நீ தொடர்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றான். ஆட்சேபிப்பது என்பது வேறு ஒத்துழைப்பது என்பது வேறு. குடும்ப பொறுப்புக்களிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், குழந்தை வளர்ப்பிலும் கணவன் பங்கேற்கவே இல்லை. அதனால் தன் நடனக் கலையை தொடர முடியாத நிலையில் இருக்கிறாள் என் தோழி. தற்பொழுது தன் ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக தன் ஒரே மகளை வளர்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள். மகளுக்கு பல விதமான கலைகளை கற்றுக் கொடுக்கிறாள். அந்த மகள் தன் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்துவிட்டால் இந்த தாயின் உலகில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.

நான் பார்க்கும் பல பெண்கள் தங்கள் திறமைகளையும், ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு கணவனுக்கு சேவை செய்வதிலும், குழந்தை வளர்ப்பதிலும் முழு கவனமும் செலுத்துகிறார்கள். தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே அந்த குழந்தையை ஒரு பெரிய ஆள் ஆக்குவது தான் என்று நினைக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். மகன்/மகளுக்கு பாடம் சொல்லித்தருவது, பிடித்ததை விதம் விதமாக சமைத்துப் போடுவது, பள்ளி தவிர பாட்டு, நடனம் போன்ற கலைகளை கற்றுக் கொடுப்பது என்று நேரம் போவதே தெரியாமல் வருடங்கள் ஓடி விடுகின்றன.

மகளோ மகனோ வளர்ந்து சுயமாக உலகை தெரிந்து கொள்ள மேல்படிப்பிற்காக வேறு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ சென்று விட்டால் இந்த தாயின் உலகம் சூன்யமாகி விடுகிறது. தன் வாழ்க்கைக்கு குறிக்கொளே இல்லை என்பது போல் அவள் செயல்படுகிறாள்.

சரி! இதை எப்படி தடுப்பது? சில உற்சாகமான பெண்களை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முன் உங்களை மன ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கென்று தனித்துவத்தோடு ஈடுபட ஒரு விஷயம் இல்லாமல் இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

உங்கள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் கலந்து பேசி, ஒரு நாளைக்கு உங்களுக்காக என்று ஒரு பகுதியை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளலாம், ஏதாவது புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம், உடல் பயிற்சி செய்யலாம், அல்லது தோழிகளுடன் வெளியே செல்லலாம். திருமணத்திற்கு முன் தனக்கிருந்த நல்ல தோழிகளுடன் தொடர்பை நீடிப்பதே சிலருக்கு பெரும் கஷ்டமாக போய்விடுகிறது. கணவரின் நண்பர்கள், மற்றும் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்கள் என்று உறவுகள் மாறி விடுகின்றன. கூடிய மட்டும் பள்ளி/கல்லூரித் தோழிகளோடு தொடர்ப்பு வைத்துக் கொண்டால் சமயத்தில் தோள் கொடுக்க ஒரு தோழி இருப்பாள்.

ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் மனதை செலுத்துங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் செய்ய முடிந்தால் அதிர்ஷ்டம். இல்லையேன்றால் விடா முயற்சியுடன் தொடருங்கள். உங்களின் உற்சாகத்தை பார்த்து அவர்கள் நிச்சயம் ஒரு நாள் உங்களை ஊக்குவிப்பார்கள். உங்கள் குழந்தை பெரியவனாகி யாரையும் சார்ந்து இல்லாமல் இருந்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள். அப்பொழுதுதான் பிறருக்காக வாழும் நாட்கள் பிற்காலத்தில் ஒரு சுமையாக மாறாது.

28 Comments:

At 9:59 am, August 24, 2005, Blogger துளசி கோபால் said...

ரம்யா,

இதைத்தான் இங்கே 'எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்'ன்னு சொல்றாங்க.

கொஞ்சநேரத்தை நமக்காக எடுத்துக்கறதுலே தப்பே கிடையாது.( இல்லாட்டா இப்படி வலை பதிஞ்சுக்கிட்டு இருக்க முடியுமா?)

ஆனா எத்தனை வீட்டுலே கனவன் இதைப் புரிஞ்சு நடந்துக்குவார்ன்னு நினைக்கறீங்க?

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 10:05 am, August 24, 2005, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

துளசி - empty nest sydrome உங்களுக்கு வந்ததா?

 
At 10:37 am, August 24, 2005, Blogger துளசி கோபால் said...

ஷ்ரேயா,

வந்துச்சு, ஆனா வேற மாதிரி!

 
At 10:48 am, August 24, 2005, Blogger குழலி / Kuzhali said...

ரம்யா அக்கா, இந்த மாதிரியான நிலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு, பொதுவாகவே தனிக்குடும்பங்களில் வாழும்போது வாழ்க்கையே அந்த குடும்பத்தோடு அமைந்து விடுகின்றது, பெற்றோர்களுக்கு அந்த பிள்ளைகளைத் தாண்டி யோசிக்க முடிவதில்லை, என் தனிக்குடும்பம் (Nuclear Family) ஒரு மாறுபட்ட அலசல் என்ற பதிவில் சிறிது தொட்டுள்ளேன்

 
At 11:00 am, August 24, 2005, Blogger Kannan said...

// உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள். அப்பொழுதுதான் பிறருக்காக வாழும் நாட்கள் பிற்காலத்தில் ஒரு சுமையாக மாறாது. //

உள்ளது... எல்லோருக்கும் பொருந்தும்.

 
At 1:22 pm, August 24, 2005, Blogger tamil said...

// உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள். அப்பொழுதுதான் பிறருக்காக வாழும் நாட்கள் பிற்காலத்தில் ஒரு சுமையாக மாறாது. //

முற்றிலும் உண்மை.

 
At 2:01 pm, August 24, 2005, Blogger Sud Gopal said...

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து எங்க அம்மா கிட்ட் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி,"ஏம்மா.அப்பாவோட ஃபிரண்ட்ஸ் மட்டும் நம்ம வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்காங்க.உன்னோட சினேகிதிமார் எல்லாம் யார் யாருன்னு உனக்கு ஞாபகமாவது இருக்கா?"

இதற்கு மௌனத்தை மட்டுமே பதிலாய்த் தரும் அம்மாவை நினைவு படுத்தியது இந்தப் பதிவு.திருமணம் ஆன பின்பு நிறைய மகளிர் தங்கள் சுயத்தை இழந்து விடுகின்றனர் என்றே தோன்றுகிறது.

வழக்கம் போலவே நல்லதொரு பதிவு கொடுத்த ரம்யா அக்காவுக்கு ஒரு ஓஓஓஓஒ போடலாம்.

 
At 4:01 pm, August 24, 2005, Blogger Ramya Nageswaran said...

துளசிக்கா, வைச்சிட்டாங்களா இதுக்கும் ஒரு பேரு?? நல்லாத்தான் இருக்கு!!

குழலி, கண்ணன், நீங்க சொல்றதைப் பார்த்தா இதை அன்புத் தோழா and தோழின்னு எழுதியிருக்கணும்னு தோணுது...

ஷ்ரேயா, சண்முகி, நன்றி.

சுதர்சன் கோபால்.. இதை கவனிச்சு அம்மாகிட்டே கேட்டிருக்கீங்களே உங்களுக்குத் தான் போடணும் ஒ!! அம்மாவோட பிறந்த நாள் பரிசா அவங்க நண்பிகளை கண்டுபிடிச்சு ஒரு surprise party கொடுக்கலாமே!!

 
At 5:02 pm, August 24, 2005, Blogger Sud Gopal said...

//அம்மாவோட பிறந்த நாள் பரிசா அவங்க நண்பிகளை கண்டுபிடிச்சு ஒரு surprise party கொடுக்கலாமே//

ஆ..இது கூட நல்ல ரோசனையா இருக்குதே.

ரொம்ப டாங்ஸ்கா.

 
At 1:06 pm, August 25, 2005, Blogger ஜென்ராம் said...

நல்ல பதிவு.. இன்னும் விரிவாக இதற்கான காரணங்களுடன் இன்னொரு பதிவு அலசுங்கள்.33 சதவீத இட ஒதுக்கீடு பத்து வருஷமா என்ன பாடு படுதுன்னு பார்க்கறீங்களா ரம்யா?

 
At 4:13 pm, August 25, 2005, Blogger enRenRum-anbudan.BALA said...

Good post, ramya !!!

Thanks for sharing the info. and your thoughts

 
At 4:36 pm, August 25, 2005, Blogger Ramya Nageswaran said...

ராம்கி, பாலா நன்றி!! ராம்கி, நீங்க நினைக்கிறா மாதிரி கனமாக பதிவேல்லாம் எழுதும் லெவலுக்கு இன்னும் நான் போகலை! :-)

 
At 1:38 pm, August 26, 2005, Blogger ஜென்ராம் said...

பரவாயில்லை. கனமான பதிவு எழுதாமல் இருப்பதில் தவறும் இல்லை. அடிப்படையான பிரச்னையை அடையாளம் காட்டி அது குறித்து வாசிப்பவரைச் சிந்திக்க வைக்கிறீர்களே. அதுவே பாராட்டுக்குரியது.

 
At 9:53 pm, August 26, 2005, Blogger வீ. எம் said...

அருமையா எழுதியிருக்கீங்க ரம்யா ,
இது இரு பாலருக்கும் பொருந்தும்..

பெண்களுக்கு கி மு, கி பி என்பது போல, க மு (கல்யாணத்துக்கு முன்) க பி (கல்யானதுக்கு பின்) என்ற இரு காலகட்டங்கள் இருப்பதால் கூடுதல் சுமை , பாதிப்புகள் இருக்க்கிறது..

 
At 3:06 pm, August 27, 2005, Blogger Ramya Nageswaran said...

ராம்கி, மீண்டும் வந்து ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி...

மிக்க நன்றி வீ.எம்.

 
At 3:06 pm, August 27, 2005, Blogger Ramya Nageswaran said...

This comment has been removed by a blog administrator.

 
At 6:31 pm, August 27, 2005, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்

இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்

 
At 10:03 am, August 29, 2005, Blogger Ramya Nageswaran said...

ரசிகவ் ஞானியர், நன்றி.. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி.. எப்பவுமே இதயம் நெகிழ்வோடு இருக்கீங்களே?? கவிஞரோட இதயம்ங்கிறதுனாலேயா?

 
At 9:17 pm, September 02, 2005, Anonymous Anonymous said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.


"குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் செய்ய முடிந்தால் அதிர்ஷ்டம். இல்லையேன்றால் விடா முயற்சியுடன் தொடருங்கள். உங்களின் உற்சாகத்தை பார்த்து அவர்கள் நிச்சயம் ஒரு நாள் உங்களை ஊக்குவிப்பார்கள்"

சரியாகச் சொன்னீர்கள். அந்த ஊக்கம் அவர்களையும் ஒத்துழைக்கச் செய்யும்!

 
At 5:22 pm, September 04, 2005, Blogger Ramya Nageswaran said...

நன்றி, டுபுக்கு.

 
At 12:36 pm, September 08, 2005, Blogger Ganesh Gopalasubramanian said...

//ஆட்சேபிப்பது என்பது வேறு ஒத்துழைப்பது என்பது வேறு.//
நல்ல கருத்து.

//கணவனுக்கு சேவை செய்வதிலும், குழந்தை வளர்ப்பதிலும் முழு கவனமும் செலுத்துகிறார்கள். //
வருத்தப்படக்கூடிய நிஜம்

//இந்த தாயின் உலகம் சூன்யமாகி விடுகிறது.//
தனக்கான ஆசைகளை தியாகம் செய்து வளர்த்துவிட்ட சிசு அவனுக்காக ஓடும் பொழுது ஏற்படும் சூன்யம்...

 
At 4:51 pm, September 08, 2005, Blogger Ramya Nageswaran said...

கோ. கணேஷ்.. நன்றி. எனக்கும் நீங்க ஹைலைட் பண்ணின முதல் பாயிண்ட் முக்கியமானதா படுது. நிறைய கணவன்மார்களுக்கு இந்த இரண்டுக்கு வித்தியாசம் தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.

 
At 5:19 pm, September 08, 2005, Blogger ரவியா said...

நல்ல பதிவு ரம்யா ! ஆண்களுக்கும் ஓய்வு பெற்றவுடன் இவ்வுணர்வு வரும்.

எங்களை தனியாக விட்டு விட்டு தோழிகளுடன் வெளியே போய் வாருங்கள். நாங்களும் பொறுப்பாக (நிம்மதியாக) இருப்போம்.

எங்க சமையலை மட்டும் குறை சொல்லக் கூடாது. ஆமா !

:))

 
At 5:22 pm, September 08, 2005, Blogger அன்பு said...

(நான் ஊருக்குப் போயிருந்த வாரத்தில் எழுதியதால் இன்றுதான் படிக்க முடிந்தது).

வழக்கம்போல் ஒரு நல்ல பதிவு.

ஆனால் 'நல்ல பதிவு' என்பதோடு விடமுடியாது அதான் உங்கள் எழுத்தோட தொல்லை:) படிக்கறவங்களை யோசித்து, அசைபோட்டு, கண்ணாடிமுன் நின்று மனசாட்சியை கேள்வி கேட்க வச்சுடும் ம்ம்...

ஆட்சேபிப்பது என்பது வேறு ஒத்துழைப்பது என்பது வேறு.

என்பதற்கும் நான் சொல்லும் "நீ என்ன வேணா பண்ணிக்கோ" என்ற வகையில் சுதந்திரம் கொடுப்பதற்கும் அதிக வித்தியாசம் இல்லைதான்:(

(மனைவிட்ட கேட்டுடாதீங்க... நாள் முழுவது வீட்ல வேலை பாத்துண்டு அதுக்கு மேல என்ன, என்னவேணா பண்ணிக்கோ-ன்ன என்னா அர்த்தம்... ஒரு சவுண்ட் வரும்:)

எப்படியோ திரும்பவும் யோசிக்கவச்சுட்டீங்க... எதாவது நடக்கும்,நன்றி.

 
At 6:54 pm, September 08, 2005, Blogger Ramya Nageswaran said...

ரவியா.. என்ன வீட்லே உங்க கமேண்டேல்லாம் படிக்க மாட்டாங்கங்கிற தைரியமா?? சமைச்சு வேறே வைக்கறேங்கிறீங்க? நல்ல offer தான்! :-)

அன்பு.. வாங்க, வாங்க.. பயணமேல்லாம் நல்லா இருந்துச்சா?

ஒரு சின்ன டிப் சொல்றேன்: பல பெண்கள் ஒரு actual breakஐ விட கணவரோ, குழந்தைகளோ "நீ ஓய்வில்லாம வேலை செய்யறியே.. உனக்கு ஒரு break ரொம்ப அவசியம்" என்று சொல்ல வேண்டும் என்று தான் எதிர்பார்க்கறாங்க. Acknowledgement கூட இல்லாதது தான் பலருக்கு வருத்தத்தை தரும் விஷயம்.

 
At 7:30 pm, September 08, 2005, Blogger அன்பு said...

சத்தியமான உண்மை...
அதிலும் அந்த டிப் தெரிந்தும் கண்டுக்காம இருக்கறவங்கள என்ன பண்ணறது!?

 
At 5:17 pm, October 28, 2005, Blogger fieryblaster said...

great post ramya.

old couples find someway or other to keep themselves occupied and it is really good to know that some are engaging themselves in charity. i think the self realization process already started and yet to pick up to a great extent.

 
At 8:27 pm, October 28, 2005, Blogger Ramya Nageswaran said...

Thanks for visiting and for your comments, fieryblaster!

 

Post a Comment

<< Home