Friday, September 23, 2005

அமிதாவ் கோஷுடன் ஒரு சந்திப்பு

Amitav Ghosh




பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். 'என்றைக்காவது ஒரு நாள் படிக்க' என்று வாங்கி அடுக்கிய புத்தகங்களில் இவரின் THE HUNGRY TIDE புத்தகமும் அடக்கம். சிங்கைக்கு வருவார் என்று முன்னாடியே தெரிந்திருந்தால் 50 பக்கங்களாவது படித்திருப்பேன். அவரைப் பற்றியோ, அவரின் எழுத்துக்களைப் பற்றியோ ஒன்றுமே தெரியாமல் தான் சென்றேன். 50 பேர் வந்திருந்தார்கள். முழுவதுமாக நரைத்திருந்த தலை முடியைப் பார்த்தால் சற்று வயதானவராக தோன்றினாலும் 50 வயதானவர் என்று அவரைப் பற்றிய தகவல் தொகுப்பு சொன்னது.


THE GLASS PALACE என்ற தன் புத்தகத்திலிருந்து நான்கு பக்கங்கள் படித்தார். அவர் படித்த பகுதி, 1941ல் இந்திய தேசிய படையை சேர்ந்த இரு சிப்பாய்களின் அனுபவமும், அவர்களின் கலந்துரையாடலும் வரும் பகுதி. அதன் பிறகு கேள்வி/பதில் தொடங்கியது. அவர் படித்த பக்கங்களின் தொடர்ச்சியாக போர் வீரர்களைப் பற்றி முதலில் பேசினார்:

"ப்ரிடிஷ் அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு சென்று போர் புரிந்த படை வீரர்களைப் பற்றி பெரிதாக இலக்கிய குறிப்புகள் இல்லை என்பது வருத்தத்தை தரும் விஷயம். அவர்களில் பலர் நெருக்கடியான நிலமையைச் சந்தித்தார்கள். ஒரு புறம் அந்நிய படைகளுடன் போர் புரிய வேண்டிய கட்டாயம். இன்னோரு புறம் தாய்நாட்டில் சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களுடன் சேர்ந்து போராட முடியவில்லையே என்ற உறுத்தல் மற்றும் ஆதங்கம். போர் புரியும் இடங்களில் (முக்கியமாக மலாயா, சிங்கப்பூர்) மரியாதை இல்லாத சூழ்நிலை. இவர்களை ஆட்டு மந்தைகள் போல் தான் ப்ரிடிஷ் அரசாங்கம் நடத்தியது. போர் புரிந்த இடங்களில் இவர்களுக்கு கூலிக்காக கொலை செய்பவர்கள் (mercenaries) என்ற பட்டம் தான் கிடைத்தது. இந்த மனநிலையை THE GLASS PALACEஸில் வெளிக் கொண்டு வர முயன்றிருக்கிறேன்."


புலம் பெயர்ந்த இந்தியர்களைப் பற்றி பேசும் பொழுது (இவர் பல ஆண்டுகளாக ந்யூ யார்க்கில் வசிக்கிறார்):


"புலம் பெயர்ந்த இந்தியர்களின் முன்னோடிகள் என்றால் பொதுவாக நமக்கு தோன்றுவது இஞ்சினியர்கள் அல்லது டாக்டர்கள். உண்மையில் முதலில் புலம் பெயர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகளாகச் சென்ற இந்தியர்கள் தான். நாம் அவர்களை மறக்கவும் கூடாது, இந்த உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது. பிரவசி பாரதிய திவஸ் போன்ற விழாக்களில் நாம் இவர்களை நினைவுகூர வேண்டும். இவர்கள் கடுமையான பொருளாதாரக் கஷ்டத்தினால் தன் தாய் நாட்டிலிருந்து பிடுங்கி நடப்பட்டவர்கள். தாம் சென்ற நாடுகளில் ஒடுங்கங்களுக்கு ஆளானும் தன்னுடைய தாய் நாட்டின் ஞாபகங்களிலிருந்து புலம் பெயர்ந்த நாட்டில், ஒவ்வோரு செங்கலாக கட்டி தன் தாய் நாட்டின் ஒரு சிறு பகுதியையாவது மீட்டேடுக்க முயன்றவர்கள். உதாரணமாக மொரிஷியஸில் பல இடங்களில் புடவை கட்டிக் கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொண்டு, போஜ்புரியில் பேசும் பெண்களைப் பார்க்கிறேன். மும்பாயில் அரிதாக போய்விட்ட காட்சி இது. அதே போல் அங்கு கங்கைக்கு சமமாக கங்கா தலாவோ என்ற ஏரிக்கு நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மஹா சிவராத்திரியின் பொழுது நடந்தே செல்கிறார்கள். "


"இந்திய உணவு உண்ண சில சமயங்களில் முகம் சுளிக்கும் என் குழந்தைகளிடம், 'உங்களின் இந்தியத்தனத்திலிருந்து நீங்க நினைத்தாலும் இனி தப்பிக்க முடியாது. உங்கள் அமெரிக்க நண்பர்கள் உங்களிடம் இந்திய உணவு பற்றியும், பார்ட்டிகளில் பாங்க்ரா இசையைப் பற்றியும் கேள்விகள் எழுப்புவார்கள். அது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மற்றும் காலாச்சார ஈர்ப்பின் சக்தி' என்று சொல்கிறேன்," என்றார்.


எழுதுவது பற்றி வழக்கமான கேள்விகள் வந்தன. உதாரணமாக, "நீங்கள் ஒரு கதையை முழுவதுமாக யோசித்து விட்டு பின் கதாபாத்திரங்களால் நிரப்புவீர்களா அல்லது கதாபாத்திரங்கள் கதையின் ஓட்டத்தை நிச்சயிப்பார்களா?"


"இரண்டும் கலந்து தான். 'It's like driving a car at night. You never see further than your headlights, but you can make the whole trip that way' என்று சொன்ன E.L.Doctorowவின் கருத்து தான் தன்னுடையதும் என்றார்.


"பொதுவாக ஒரு எழுத்தாளரின் குணாதிசியத்தின் ஒரு பகுதியாவது அவரின் கதாபாத்திரங்களில் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது உங்களின் குணாதிசியத்திற்கு தொடர்ப்பே இல்லாத பாத்திரங்களை எப்படி படைக்க முடிகிறது?" என்ற ஒரு கேள்விக்கு "தனக்கு பரிச்சியமில்லாத ஒரு/பல பாத்திரத்தை/பாத்திரங்களை நிச்சயம் எழுத்தாளர்கள் கையாள வேண்டும். அப்படி செய்யும் பொழுது அந்த மனிதர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களை செலுத்துவது என்ன, தூண்டுதல்கள் என்ன போன்றவைகளை ஆராய்ந்து, முடிந்தால் அப்படிபட்டவர்களுடன் கலந்துரையாடி, அந்த பாத்திரத்துக்கு உயிரூட்டினால் அது நிச்சயம் ஒரு நேர்மையான முயற்சியாக இருக்கும்," என்றார்.

"உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள். உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெரும்."

பாசாங்கில்லாத, தன் வேர்களை மறக்காத, எளிதில் அணுகக்கூடிய ஒரு மனிதரைச் சந்தித்த உணர்வு நிகழ்ச்சியின் முடிவில் எனக்கு ஏற்பட்டது.

Sunday, September 18, 2005

கேள்வியின் நாயகியே....

நாலு நாளைக்கு ஒரு பதிவு போடலைன்னா என் பெயரை 'காணவில்லை' பட்டியல்லே சேர்க்க சில பேர்கள் தயாராயிட்டிருக்காங்கன்னு நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேள்விப்பட்டேன் (சரி, சரி, ஒருத்தர் தான்.. அவர் பெயர் வீ லே ஆரம்பிச்சு எம் லே முடியும்ங்கிற ஒரே க்ளு தான் கொடுக்க முடியும்).


சில கேள்விகள் கேட்டு வைப்போமேன்னு ஒரு பதிவு. இந்தக் கேள்விகள் 'lateral thinking' வகையைச் சேர்ந்தவை. அதாவது நாம் பிரச்சனைகளை கையாளும் பொழுது சில விஷயங்களை assume செய்வோம். அப்படி செய்யாமல் fundamentalsஸிலிருந்து பிரச்சனைகளை ஆராய கற்றுக் கொடுக்கும் இந்த exercises என்று சொல்கிறார்கள்.

டோண்டு ஸார் இதையேல்லாம் முன்னாடியே கேட்டுட்டாரான்னு தெரியலை. 'புதுசு கண்ணா புதுசு'ன்னா முயன்று பாருங்க....இல்லைன்னா சொல்லுங்க வேற ஒரு கடி பதிவு போட்டுடறேன்.! :-)

1. ஜாக் தரையில் செத்துக் கிடக்கிறார். ஜன்னல் வழியாக பறந்து வந்த ஒரு கூரிய கல் அவரின் சாவுக்கு காரணம். ஆனால் அவரைச் சுற்றி ரத்தம் இல்லை. தண்ணீர் இருக்கிறது.

2. Barருக்குள் வரும் ஒருவர் bartenderரிடம் தண்ணீர் கேட்கிறார். அவரோ துப்பாக்கி எடுத்து hands up என்கிறார். சில நொடிகள் கழித்து வந்தவர் 'நன்றி' என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

3. ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறார். உடனே தன் கவனக் குறைவால் பல உயிர்கள் பலி என்று புரிந்து கொள்கிறார்.

4. கப்பல் மூழ்கியதால் ஒரு தீவில் பல நாட்கள் சிக்கியிருந்த மாலுமிகளில் ஒருவர் ஊருக்கு திரும்புகிறார். அவர் ஒரு restaurantக்கு சென்று seagull soup ஆர்டர் செய்கிறார். அதை ஒரு வாய் சாப்பிட்டவுடன் தன் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்.

5. ஒரு தாய்க்கு இரண்டு மகள்கள் ஒரே வருடத்தில், ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் டிவின்ஸ் இல்லை.

6. இரு அமெரிக்கர்கள் பாரிஸில் உள்ள ஒரு ம்யூசியத்தில் நுழைய உள்ளார்கள். ஒருவர் மற்றவரின் மகனுக்கு தந்தை.

7. ஒரு பூட்டிய அறையில் ஒருவர் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார். அவர் காலடியில் இருந்த தண்ணீரைத் தவிர அந்த அறையில் வேறேந்த பொருளும் இல்லை. அவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?

8. ஜோன்ஸ் கீழே விழுந்ததால் காலில் காயம். பெரிய டாக்டர் வந்து அதை சரி செய்து விடுகிறார். இருந்தாலும் சில நாட்கள் கழித்து இந்த காயத்தால் ஜோன்ஸின் மரணம் நிகழுகிறது.

9. மாடர்ன் ஆர்ட் பிடிக்காத ரோஜர், ஒரு நாள் ஒரு பெரிய ம்யூசியத்தில் உள்ள மாடர்ன் ஓவியங்களின் மேல் தண்ணீரை கொட்டி பாழடித்து விடுகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு தண்டனையும் கிடைக்கவில்லை.

10. கெவினும் (6 வயது) அவனுடைய அண்ணனும் (8 வயது) சோபாவில் அமர்ந்து ஒரு xxx படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அம்மா உள்ளே நுழைகிறாள். ஆனால் அவர்களை கண்டிக்கவில்லை.


கூகிள் உதவியில்லாம கண்டுபிடிக்கிறவங்களுக்கு தன்யா வரைந்த படத்தை அன்பளிப்பாக அனுப்பி வைப்பேன்.

Monday, September 12, 2005

ஒரு துண்டு துணி....





மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விஷயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வோரு மாதமும் ஒவ்வோரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான். அது தான் ஸானிடரி நாப்கின். இதை ஒரு பெரிய விஷயமாக நம்மில் பலர் நினைக்க மாட்டோம். இதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன், கூஞ்ச் என்ற அமைப்பின் தலைவர் அன்ஷு குப்தாவின் பேச்சை கேட்கும் வரை.

என் நண்பர்களோடு சேர்ந்து நான் சிங்கையில் நடத்தும் NRI Singapore என்ற ஒரு சிறு அமைப்பின் அழைப்பை ஏற்று பிப்ரவரி மாதம் அன்ஷு சிங்கைக்கு வந்தார். நாங்கள் அவர் அமைப்பின் ஸ்கூல்-டு-ஸ்கூல் திட்டத்திற்கு பண உதவி செய்து கொண்டிருக்கிறோம். ('என் முந்தைய பதிவில் அதை பற்றி எழுதியிருக்கிறேன்) அத்திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி பேசுவார் என்று நினைத்தேன். "Every woman needs a clean piece of cloth for five days every month" என்று தன் பேச்சை ஆரம்பித்தவர், சமீபத்தில் கிராமங்களுக்கு சென்று, பெண்களோடு பேசி அவர் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டார். சாப்பாட்டுக்கே கஷ்டபடும் மக்கள் ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்து பார்க்க முடியுமா?

'சரி, பழைய துணிகள், பஞ்சு?' என்று கேட்கலாம்.

'இரண்டே புடவைகள் இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது கூட குதிரைக் கொம்பு தான்' என்கிறார் அன்ஷு.

'அப்படியா? என்னதான் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்?'

சிலர் தரையை துடைக்க வைத்திருக்கும் துணியை உபயோகிக்கிறார்கள். சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள். சில சமயம் இரண்டு நாட்களுக்கு ஒரு துணி தான். அந்தத் துணியை பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ கூடாது. அதனால் சரியாக காயாத ஒரு அழுக்கு துணியை ஐந்து நாட்கள் உபயோகிக்க வேண்டும்! ஒரு வீட்டில் ஒன்றிர்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்! இது எப்படிப்பட்ட கொடுமை என்பது பதிவை படிக்கும் பெண்களுக்கு புரியும். இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம். "இப்படிபட்ட பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப் பெண்கள் கர்ப்பமானால் அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை. அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பிவிடுகிறார்கள். இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது, " என்கிறார் அன்ஷு.

கிராம மருத்துவ நலத்திட்டங்கள் பல இருந்தும் அடிப்படையான இந்தத் தேவையை எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை ஸானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்களான P&G, Hindustan Lever போன்றவைகள் தான் செய்கின்றன. இதன் விலையைப் பார்த்தால் ஒரு அத்தியாவசிய பொருளின் விலை போல இல்லை. ஒரு cosmetic பொருளின் விலை போல் தான் உள்ளது. எனக்கு தெரிந்தவரை இது சுற்றுப்புறத்திற்கும் தீங்கிழைக்கும் வகையில் தான் செய்யப்படுகிறது. அதாவது bio-degradable பொருட்களால் செய்யப்படுவதில்லை.

இதற்கு பெரிய தீர்வுகள் யோசிப்பதை விட அன்ஷுவின் செயல்படுத்தக் கூடிய திட்டத்திற்கு வருவோம். பழைய பருத்தி துணிகளை அவரின் அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்தால் அவற்றை உபயோகித்து குறைந்த செலவில் மறுபயனளிக்ககூடிய பருத்தி sanitary towels தயாரிக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறார் அன்ஷு. நேற்று அவரிடம் தொலைபேசியில் உரையாடினேன். "முதல் batch ரெடி. ஃபரிதாபாதுக்கு அனுப்பிவிட்டேன். இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கு சென்று பெண்களின் கருத்துக்களை கேட்டு மடலனுப்பிகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். வாரயிறுதியை உற்சாகமாக்கிய செய்தி.

நாம் அனைவரும் அவருக்கு உதவலாம். அவர் அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

போன வாரம் அவரைப் பற்றி Hindu வில் வந்த செய்தியைப் படிக்க இங்கே சுட்டவும்.

யாரும் யோசிக்காத பிரச்சனைகளைப் பற்றி யோசித்து அயராமல் அதற்கு தீர்வுகள் காண முயற்சிக்கும் இந்த இளைஞருக்கு ஒரு salute!

Saturday, September 03, 2005

நிஜ பூதங்கள்





"Amma, are there real monsters?" வாரம் ஒரு முறையாவது என் ஆறு வயது மகள் தூங்கப் போவதற்கு முன் கேட்கும் கேள்வி. ஏதாவது கதை படித்திருப்பாள் அல்லது டிஸ்னியின் உபயமாக இருக்கும். எப்பொழுதுமே அரைகுறை நம்பிக்கையோடு தான் "இல்லை கண்ணம்மா..there are no real monsters" என்று சொல்லுவேன். அவள் கேள்வி எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 'எந்த தைரியத்திலே நான் குழந்தை பெற்றுக் கொண்டேன்? நம்மால் இந்த உலகுக்கு வந்த குழந்தையிடம் 'உனக்கு இங்கு ஒரு பாதுகாப்பான, சுகாதாரமான சூழ்நிலை இருக்கும். சக மனிதர்கள் உன்னை மனிதாபினத்தோடு நடத்துவார்கள். நீ ஒரு நல்ல மனிதனாக/மனுஷியாக வளருவாய்..' அப்படின்னு உறுதி மொழி தர முடியுமா? அப்படி இருக்கும் பொழுது இந்த உலகுக்கு கொண்டு வர எனக்கேன்ன உரிமை இருக்கிறது?' அவள் இரண்டு நாள் குழந்தையாக என் மடியில் இருக்கும் பொழுதே "நம்மை முழுவதுமாக நம்பி இன்னோரு உயிர்" என்ற உணருதல் வந்து ஒரு பயத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தியது. கண்ணீர் வழிந்தது. பிறகு அதை போஸ்ட் பார்டம் ப்ளூஸ் என்று தள்ளினாலும் அந்த பயம் உண்மையானதுதானே?


கல்யாணம் ஆனா சில வருடங்கள்லே குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு நம்ம மனசுலே ஒரு எண்ணம் படிஞ்சுத்தான் போயிருக்கு. 'ஏன்? எதுக்கு' ன்னு கேள்வி கேட்க நிறைய பேருக்கு தோன்றுவதில்லை. நான் கேட்டுக்கலைங்கிறது தான் உண்மை. இன்னும் சொல்லப் போனா சில வருடங்களுக்கு முன் மருத்துவ காரணங்களுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு தம்பதியரின் நட்பு கிடைத்தது. நானாகவே அவர்களுக்கு இது வருத்தமளிக்கும் விஷயம் அப்படிங்கிற முடிவுலே இருந்தேன். 'பாவம்.. அவளுக்கு குழந்தை பொறக்கலை' என்று அடிக்கடி கேள்விப்பட்ட ஒரு cliched வாக்கியத்தின் பாதிப்பு. ஒரு நாள் இதைப் பற்றி அந்த தோழி வெளிப்படையாக பேசினாள் 'குழந்தை இல்லாதது ஒரு குறையாகவே தெரியலை. என்னாலே என் மனசுக்கு பிடிச்ச பல விஷயங்களை சுதந்திரமா செய்ய முடியறது," என்று. அன்று தான் அந்த பரிமாணத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

எதற்காக குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டால் பல பதில்கள் வரலாம்: நம்மோட திருமண வாழ்க்கையிலே ஒரு பொதுவான குறிக்கோள் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவியை ஒண்ணு சேர்க்கிற ஒரு விஷயம், வயசானால் நம்மை பார்த்துக்க ஒரு ஆள், நம்மாலே சாதிக்க முடியாத சில விஷயங்களை சாதிக்க ஒரு வாரிசு... இப்படி யோசிச்சா குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு சுயநலமான முடிவை தவிர வேறொன்றும் இல்லையோ?

அவர்கள் அளிக்கும் அளவில்லா மகிழ்ச்சியையும், உலகைப் பற்றிய ஒரு புதிய, fresh ஆன பார்வையையும், சில சமயம் கண்ணீர் துளிர்க்கச் செய்கிற innocence ஐயும் அணு அணுவாக ரசிக்கும் அதே நேரத்தில் இது போன்ற பயங்களும்/கேள்விகளும் வரத்தான் செய்கின்றன. அதுவும் சுனாமி, மும்பாய் பேய் மழை, குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நடந்தாலும் சரி, தேன் துளி பத்மாவின் சமீபத்திய பதிவில் படித்த விஷயங்கள், வன்முறை தாக்குதல்கள், குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கும் வெறியர்கள், வக்ர புத்தி படைத்தவர்களின் கொடுமைகள் போன்ற செய்திகளைப் படித்தாலும் சரி... நிஜ பூதங்கள் பற்றிய பயம் வந்துவிடும். என் மகளைப் பொறுத்த வரை monsters என்றால் பச்சை நிறத்தில், பெரிய சைஸில், பயங்கற கண்களோடு இருக்கும் ஜந்துக்கள். சக மனிதர்கள் எல்லோரும் நேசிக்கப்பட வேண்டியவர்கள். சில எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும், இன்னும் கொஞ்ச நாளாவது இந்த சிந்தனையை குலைக்க வேண்டாமே என்று மனம் ஏங்குகிறது.

நேற்றிரவு மீண்டும் முளைத்த அவள் கேள்விக்கு அதே பதில் தான் சொன்னேன். அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் என்னை கட்டிப் பிடித்தபடி தூங்கிவிட்டாள். 'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் தான் கொஞ்சம் நேரமானது.