அமிதாவ் கோஷுடன் ஒரு சந்திப்பு
Amitav Ghosh

பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். 'என்றைக்காவது ஒரு நாள் படிக்க' என்று வாங்கி அடுக்கிய புத்தகங்களில் இவரின் THE HUNGRY TIDE புத்தகமும் அடக்கம். சிங்கைக்கு வருவார் என்று முன்னாடியே தெரிந்திருந்தால் 50 பக்கங்களாவது படித்திருப்பேன். அவரைப் பற்றியோ, அவரின் எழுத்துக்களைப் பற்றியோ ஒன்றுமே தெரியாமல் தான் சென்றேன். 50 பேர் வந்திருந்தார்கள். முழுவதுமாக நரைத்திருந்த தலை முடியைப் பார்த்தால் சற்று வயதானவராக தோன்றினாலும் 50 வயதானவர் என்று அவரைப் பற்றிய தகவல் தொகுப்பு சொன்னது.
THE GLASS PALACE என்ற தன் புத்தகத்திலிருந்து நான்கு பக்கங்கள் படித்தார். அவர் படித்த பகுதி, 1941ல் இந்திய தேசிய படையை சேர்ந்த இரு சிப்பாய்களின் அனுபவமும், அவர்களின் கலந்துரையாடலும் வரும் பகுதி. அதன் பிறகு கேள்வி/பதில் தொடங்கியது. அவர் படித்த பக்கங்களின் தொடர்ச்சியாக போர் வீரர்களைப் பற்றி முதலில் பேசினார்:
"ப்ரிடிஷ் அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு சென்று போர் புரிந்த படை வீரர்களைப் பற்றி பெரிதாக இலக்கிய குறிப்புகள் இல்லை என்பது வருத்தத்தை தரும் விஷயம். அவர்களில் பலர் நெருக்கடியான நிலமையைச் சந்தித்தார்கள். ஒரு புறம் அந்நிய படைகளுடன் போர் புரிய வேண்டிய கட்டாயம். இன்னோரு புறம் தாய்நாட்டில் சுதந்திரத்திற்காக பாடுபடும் மக்களுடன் சேர்ந்து போராட முடியவில்லையே என்ற உறுத்தல் மற்றும் ஆதங்கம். போர் புரியும் இடங்களில் (முக்கியமாக மலாயா, சிங்கப்பூர்) மரியாதை இல்லாத சூழ்நிலை. இவர்களை ஆட்டு மந்தைகள் போல் தான் ப்ரிடிஷ் அரசாங்கம் நடத்தியது. போர் புரிந்த இடங்களில் இவர்களுக்கு கூலிக்காக கொலை செய்பவர்கள் (mercenaries) என்ற பட்டம் தான் கிடைத்தது. இந்த மனநிலையை THE GLASS PALACEஸில் வெளிக் கொண்டு வர முயன்றிருக்கிறேன்."
புலம் பெயர்ந்த இந்தியர்களைப் பற்றி பேசும் பொழுது (இவர் பல ஆண்டுகளாக ந்யூ யார்க்கில் வசிக்கிறார்):
"புலம் பெயர்ந்த இந்தியர்களின் முன்னோடிகள் என்றால் பொதுவாக நமக்கு தோன்றுவது இஞ்சினியர்கள் அல்லது டாக்டர்கள். உண்மையில் முதலில் புலம் பெயர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகளாகச் சென்ற இந்தியர்கள் தான். நாம் அவர்களை மறக்கவும் கூடாது, இந்த உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது. பிரவசி பாரதிய திவஸ் போன்ற விழாக்களில் நாம் இவர்களை நினைவுகூர வேண்டும். இவர்கள் கடுமையான பொருளாதாரக் கஷ்டத்தினால் தன் தாய் நாட்டிலிருந்து பிடுங்கி நடப்பட்டவர்கள். தாம் சென்ற நாடுகளில் ஒடுங்கங்களுக்கு ஆளானும் தன்னுடைய தாய் நாட்டின் ஞாபகங்களிலிருந்து புலம் பெயர்ந்த நாட்டில், ஒவ்வோரு செங்கலாக கட்டி தன் தாய் நாட்டின் ஒரு சிறு பகுதியையாவது மீட்டேடுக்க முயன்றவர்கள். உதாரணமாக மொரிஷியஸில் பல இடங்களில் புடவை கட்டிக் கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக்கொண்டு, போஜ்புரியில் பேசும் பெண்களைப் பார்க்கிறேன். மும்பாயில் அரிதாக போய்விட்ட காட்சி இது. அதே போல் அங்கு கங்கைக்கு சமமாக கங்கா தலாவோ என்ற ஏரிக்கு நூற்றுக் கணக்கான இந்தியர்கள் மஹா சிவராத்திரியின் பொழுது நடந்தே செல்கிறார்கள். "
"இந்திய உணவு உண்ண சில சமயங்களில் முகம் சுளிக்கும் என் குழந்தைகளிடம், 'உங்களின் இந்தியத்தனத்திலிருந்து நீங்க நினைத்தாலும் இனி தப்பிக்க முடியாது. உங்கள் அமெரிக்க நண்பர்கள் உங்களிடம் இந்திய உணவு பற்றியும், பார்ட்டிகளில் பாங்க்ரா இசையைப் பற்றியும் கேள்விகள் எழுப்புவார்கள். அது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மற்றும் காலாச்சார ஈர்ப்பின் சக்தி' என்று சொல்கிறேன்," என்றார்.
எழுதுவது பற்றி வழக்கமான கேள்விகள் வந்தன. உதாரணமாக, "நீங்கள் ஒரு கதையை முழுவதுமாக யோசித்து விட்டு பின் கதாபாத்திரங்களால் நிரப்புவீர்களா அல்லது கதாபாத்திரங்கள் கதையின் ஓட்டத்தை நிச்சயிப்பார்களா?"
"இரண்டும் கலந்து தான். 'It's like driving a car at night. You never see further than your headlights, but you can make the whole trip that way' என்று சொன்ன E.L.Doctorowவின் கருத்து தான் தன்னுடையதும் என்றார்.
"பொதுவாக ஒரு எழுத்தாளரின் குணாதிசியத்தின் ஒரு பகுதியாவது அவரின் கதாபாத்திரங்களில் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது உங்களின் குணாதிசியத்திற்கு தொடர்ப்பே இல்லாத பாத்திரங்களை எப்படி படைக்க முடிகிறது?" என்ற ஒரு கேள்விக்கு "தனக்கு பரிச்சியமில்லாத ஒரு/பல பாத்திரத்தை/பாத்திரங்களை நிச்சயம் எழுத்தாளர்கள் கையாள வேண்டும். அப்படி செய்யும் பொழுது அந்த மனிதர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களை செலுத்துவது என்ன, தூண்டுதல்கள் என்ன போன்றவைகளை ஆராய்ந்து, முடிந்தால் அப்படிபட்டவர்களுடன் கலந்துரையாடி, அந்த பாத்திரத்துக்கு உயிரூட்டினால் அது நிச்சயம் ஒரு நேர்மையான முயற்சியாக இருக்கும்," என்றார்.
"உலகிற்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து எழுதுவதை விட உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை உலகிற்கு பிடிக்கும்படி எழுதுங்கள். உண்மையாகவும், முழுமையாகவும் எழுதினால் நிச்சயம் அந்த எழுத்து வெற்றி பெரும்."
பாசாங்கில்லாத, தன் வேர்களை மறக்காத, எளிதில் அணுகக்கூடிய ஒரு மனிதரைச் சந்தித்த உணர்வு நிகழ்ச்சியின் முடிவில் எனக்கு ஏற்பட்டது.