Friday, May 12, 2006

மொழி - சிறுகதை

டைட்டில்லே 'மீண்டும் ஜே.கே.பி'ன்னு போடணும்ன்னு ஆசை தான். ஆனா அடங்கு, அடங்குன்னு ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கே..என்ன செய்யறது?

எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே? கொஞ்சம் நீண்ட இடைவெளியா போயிடுச்சு. இனிமே ஏதோ எழுதுவேன்னு தான் நினைக்கறேன்.

ப்ளாகேஸ்வரி (நல்ல பேருங்க), நீங்க கல்கிலே படிச்ச கதை இதோ:

____________________________________________________________________________________

அது ஒரு க்ளினிக் என்று நம்புவது முதலில் சிறிது கஷ்டமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான பிரத்யேக க்ளினிக். சுவரேல்லாம் சித்திரங்கள். பல 'பளிச்' நிறங்களில் பெற்றோர்கள் அமர நாற்காலிகள். குழந்தைகள் விளையாட சாமான்கள், படம் வரைய வசதியாக குட்டி மேஜை, முக்காலிகள், ஒரு அழகான சிறிய ப்ளாஸ்டிக் வீடு! சிங்கப்பூரில் க்ளினிக் கூட இவ்வளவு ஆடம்பரமாக இருந்தது எனக்கு முதலில் ஆச்சர்யமாக இருந்தத்து.

பணம் கொஞ்சம் அதிகம் வாங்கினாலும் டாக்டர் மிகவும் கைராசிக்காரர். அதனால் எப்பொழுது வந்தாலும் திருவிழாக் கூட்டம். சிங்கப்பூரில் வாழும் எல்லா வெளிநாட்டவர்களின் குழந்தைகளுக்கும் இவர் தான் டாக்டர் என்று என்னை சத்தியம் பண்ணச் சொன்னால் முக்கால்வாசி பண்ணுவேன் என்று தான் நினைக்கிறேன். 'சள சள' வென்று பல மொழிகளில் தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சும், சமாதானம் செய்யும், அதட்டும், பாலூட்டும் கலவையான சத்தம்.

வருண் என் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அதனால் நான் இந்த தாய்மார்கள் சிம்ஃபோனியில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக அமர்ந்திருந்தேன். முன்பதிவு செய்யாமல் வந்ததால் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றாள் டாக்டரின் உதவியாளர். ஜுரம் என்ன முன்பதிவு செய்து கொண்டா வருகிறது? எப்பொழுதும் எடுத்துக் கொண்டு வரும் புத்தகத்தை மறந்ததால் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ராத்திரி முழுக்கத் தூங்காமல், என்னையும் தூங்கவிடாமல்
இப்பொழுது நன்றாகத் தூங்கும் வருணைப் பார்த்து சற்று பொறாமையாகக் கூட இருந்தது.

எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் ஒரு ஜெர்மனியத் தாய் தன் குழந்தையுடன் காத்துக் கொண்டிருந்தாள். நான் கல்லூரியில் ஜெர்மன் படித்திருந்ததால் அவள் குழந்தையுடன் பேசியது புரிந்தது.

க்ளினிக்கின் உள்ளே நுழைந்தாள் ஒரு இந்தியப் பெண். கூட ஒரு மூன்று வயதிருந்த பெண் குழந்தை. எனக்கேதிரில் மட்டுமே இடம் இருந்ததால் அங்கே வந்தமர்ந்தாள். அவள் உடை, தலையில் தொற்றிக் கொண்டிருந்த கண்ணாடி, கைப்பை, காலணிகள் எல்லாம் இ த்தாலிய, அமெரிக்க டிசைனர்கள் செய்தது என்று சற்று சத்தமாகவே பறைசாற்றின. அவள் விரலில் இருந்த வைர மோதிரங்களை விற்றால் ஒரு குடும்பம் ஒரு மாதம் உட்கார்ந்து சாப்பிடலாம்! அவள் முகத்தில் இருந்த ஒப்பனையை பார்த்த பொழுது அவள் குழந்தையின் உடல் உபாதை முன்பதிவு செய்து கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. எங்கே என்னைப் பார்த்தால் என் இந்தியத்தனம் ஒட்டிக் கொண்டு விடுமோ என்று கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்ந்தாள்.

குழந்தையிடம் பேசும் மொழியை வைத்து இந்தியாவில் எந்தப் பகுதியை சேர்ந்தவள் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்த என் எண்ணத்தில் மண்! அவள் குழந்தையிடம் சத்தமாக ஜெர்மனில் பேசினாள்! 'உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று எனக்கு புரியவைக்க செய்தது போலிருந்தது.

பக்கத்தில் இருந்த ஜெர்மனியப் பெண்ணின் குழந்தையிடம் அவள் குழந்தை சரளமாக உரையாடியது. புருவத்தை உயர்த்திய குழந்தையின் தாயிடம் அதற்குத் தான் காத்திருந்தது போல் தன் சுயசரிதையை அவிழ்த்துவிட்டாள். தன் கணவன் ஸ்விட்சர்லாந்தில் ஐந்து வருடம் பணியாற்றியது, அந்த நாட்டு கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதால் தான் தீவிரமாக ஜெர்மன் கற்றுக்கொண்டது, தன் குழந்தை அங்கேயே பிறந்து மூன்று வருடம் வளர்ந்ததால் அதற்கு ஜெர்மன் தவிர வேறு மொழி தெரியாதது, இங்கே கூட ஜெர்மன் சர்வதேச பள்ளியில் தான் குழந்தையை சேர்ப்பதாக உத்தேசம் என்று சொல்லிக் கொண்டே போனாள். 'நான் உன்னைச் சேர்ந்தவள்' என்று அவளுக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெடுவது போல் தோன்றியது.

அந்த ஜெர்மனியப் பெண் சுவாரஸ்யமாக கேட்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள். ஒரு வேளை தான் சொன்னதின் முக்கியத்துவம் அவளுக்கு புரியவில்லையோ என்று நினைத்தால் போலும் இந்த இந்தியப் பெண். மேலும் தீவிரமாக தன் மொழிவளத்தை காட்ட தன் மகளை மடியில் அமர்த்தி, குதிரையில் போவது போல் கால்களை மேலும் கீழுமாக ஆட்டி ஜெர்மனில் ஒரு குழந்தைகளுக்கான பாட்டு வேறு பாடிக் காண்பித்தாள்!

'உன் கணவன் கென்யாவில் பணியாற்றி இருந்தால் நீ ஸ்வாஹிலி கற்றுக் கொண்டிருப்பாயா?' 'என்று இந்தியப் பெண்ணிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது.

இந்த ஜெர்மனிய மங்கை இந்தியாவில் ஐந்து வருடங்கள் வாழ்ந்தால் தன் தாய்மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டு இந்தியனாக மாறிவிடுவாள் என்று நினைக்கிறாயா?' என்ற கேள்வியும் மனத்தில் தோன்ற, தன் குழந்தையிடம் ஜெர்மனியப் பெண் 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' பாடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.

அதற்குள் இந்தியப் பெண்ணின் பிடியிலிருந்து தப்பிய குழந்தை அங்கிருந்த சிறு மேஜை மேல் ஏறியது. பேச்சு மும்மரத்தில் அவள் கவனிப்பதற்குள் மேஜையிலிருந்து குதிக்க முயன்று, அஷ்ட கோணலாக கீழே விழுந்து, வீறிட்டலறியது! 'விறுக்' கென்று உடனே திரும்பினாள் அவள். தன்னை சுதாரித்து கொள்வதற்குள் அவள் வாயிலிருந்து 'டக்'கென்று வெளிப்பட்டது வார்த்தை: "சனியனே!"