Monday, June 20, 2005

கணினி கலாசாரம்

கணினி கலாசாரம்
(மங்கையர் மலர் - செப்டம்பர் 2003)


நீங்க ஒரு உறவினர் வீட்டுக்கோ, நண்பர் வீட்டுக்கோ விருந்தாளியா போகும் பொழுது இங்கே இருக்கிற ஏதாவது ஒரு காரியத்தை செய்வீங்களா?
1. அவர்களோட கடிதங்கள் இருக்கும் இடத்தை குடைவது,2. அவர்களோட வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும் பெட்டியை திறந்து பார்ப்பது,3. அவர்களின் கணக்கு வழக்கு, வருமானம் போன்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பது,4. அவர்கள் தங்கள் பீஸ் வேலையை செய்யவிடாமல் இடைஞ்சலாக இருப்பது,5. அவர்களின் தொலைபேசியை வெகு நேரம் க்ரமிப்பது.
“என்னங்க! இதெல்லாம் அநாகரீகம்னு எங்களுக்கு தெரியாதா? நிச்சயம் செய்ய மாட்டேன்,” அப்படின்னு தானே சொல்றீங்க?
னால் இதையெல்லாம் நீங்க அறியாமலேயே செய்ய வாய்ப்பு இருக்குங்க. எப்படி தெரியுமா? அவர்கள் வீட்டிலிருக்கிற கம்ப்யூட்டரை நீங்க உபயோகப்படுத்தினா இதெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கு!
பொதுவா நம் பொருட்களை தங்கள் பொருட்கள் போல் சுவாதீனமாக உபயோகப் படுத்தும் விருந்தாளிகளை கண்டால் மனசுக்குள்ள அலறாமல் இருக்க முடியாமா?
இப்பொழுதுள்ள காலகட்டத்திலே டி.வி, வி.சி.டி ப்ளேயர் இருக்கிற மாதிரி பெரும்பாலான வீடுகள்லே கண்டிப்பா கம்ப்யூட்டர் இருக்கு. அதுவும் சாப்ட்வேர் துறைலே வேலை செய்யறவங்களோட முக்கியமான வேலை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அதிலே தாங்க இருக்கு.
உதாரணமா என் தோழி ரேகா வீட்டிலிருந்தபடியே சாப்ட்வேர் கன்ஸல்டண்டாக வேலை செய்கிறாள். கணவன், மனைவி இருவருக்கும் தனி கம்ப்யூட்டர். ஒருவரின் மிஷினை மற்றோருவர் தொடமாட்டார்கள். அந்த அளவு அதில் விஷயம் இருந்தது. ரேகாவின் உறவினரும், அவரின் மனைவியும் வந்தார்கள். ரேகா வெளியே சென்றிருந்த சமயம் இருவரும் கம்ப்யூட்டரில் அமர்ந்து அவர்கள் எடுத்துள்ள டிஜிடல் போட்டோக்களை பார்ப்பதற்காக ஏதோ ஒரு இலவச சாப்ட்வேரை இணையத்திலிருந்து டெளன்லோட் செய்து, கம்ப்யூட்டர் க்ராஷாகும்படி செய்துவிட்டார்கள். அதாவது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்கள் வேலை செய்யாமல் நின்று விடும். வீட்டிற்கு வந்த ரேகாவிற்க்கு இதயம் நின்று விடும் போல் இருந்தது. ஏனேன்றால் அடுத்த நாள் அவள் தர வேண்டிய முக்கியமான ரிப்போர்ட் அதில் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்தது! நடு இரவு வரை அவள் போராடி கம்ப்யூட்டரை சரி செய்தது தனி கதை!

உங்களுக்கே தெரியும்! இப்பொல்லாம் எல்லா விஷயங்களும் ஈ-மெயில்லே தான் வருகிறது. நண்பர்களிடமிருந்தாலும் சரி, அலுவலகத்திலே வேலை கூட செய்பவர்களானாலும் சரி, எல்லாரும் ஈ-மெயில் தான் அனுப்பறாங்க. மற்றவர் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தறதுனாலே நீங்க அவர்களோட பர்ஸனல் விஷயங்களை சுலபமா தெரிஞ்சுக்கிற வாய்ப்பு இருக்கு.
இன்னோரு நண்பர் வீட்டுக் கதையை கேளுங்க. நண்பர் கோபாலோட வீடு கொஞ்சம் சின்னது. அதனால் கம்ப்யூட்டரை தனது படுக்கை அறையில் ஒரு ஓரத்திலே வைச்சுருந்தார் கோபால். அவரின் அண்ணன் மகன் ஊரிலிருந்து வந்தார். காலேஜில் படிக்கும் இளைஞர். கேட்கணுமா? 24 மணி நேரமும் “சாட்” அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்தார். “என்னடா ஒருவரின் பெட் ரூமில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கிறோமே!” என்ற உணர்வு துளியும் இல்லை. “நீங்க தூங்குங்க பெரியப்பா. எனக்கு தூக்கமே வரலே” என்று பெரியப்பா, பெரியம்மாவிற்க்கு பர்மிஷன் வேறு!
இன்னும் சிலர் மணிக் கணக்கில் கம்ப்யூட்டரில் முன் அமர்ந்து தனக்கு தெரிஞ்ச விஷயங்களை மற்றவருக்கு புரிய வைக்கணும்ங்கற ர்வத்துலே எதையாவது மாற்றிவிடுவார்கள் அல்லது புதிதாக ஏதாவது ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிடுவார்கள்.
“சரி..அப்போ என்னதான் செய்யணும்? நண்பரை/உறவினரை பார்க்க வேற ஊருக்கோ, நாட்டுக்கோ போனால், போன இடத்துலே ஈ-மெயில் கூட செக் பண்ணக்கூடாதா?” அப்படின்னு நீங்க கேட்கறது புரியறது. உங்க கேள்வி நியாமானதுதாங்க. நண்பர்/உறவினர் வீடுகளுக்கு நான் விருந்தாளியா போகும் பொழுது கடைப்பிடிக்கிற சில பழக்க வழக்கங்களை சொல்றேன். முடிஞ்சா கடைப்பிடிச்சுப் பாருங்க:
v கூடிய மட்டும் மற்றவர்களின் கம்ப்யூட்டரை உபயோகிப்பதை தவிர்க்கணும். பக்கத்தில் ஏதாவது சைபர் கபே (Cyber Cafe) இருந்தால் அங்கே போறது நல்லது.v அப்படி கண்டிப்பாக ஏதாவது வேலை இருந்தால், முதலில் அவர்களின் அனுமதி கேளுங்க. என்ன வேலை இருக்கு, எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர் வேண்டும் அப்படிங்கற விஷயத்தை தெளிவா சொல்லி எப்பொழுது உபயோகிக்கலாம்ங்கறதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிறது நல்லது. உதாரணமாக “ஹாட்மெயில் செக் பண்ணணும் இல்லே ஒரு கடிதம் டைப் செய்யணும். ஒரு அரை மணி நேரம் நான் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தலாமா?”v நாசூக்காக அவர்கள் ப்ராட் பேண்ட் (broad band) உபயோகிக்கிறார்களா (அதாவது 24 மணி நேரம் இணையக் கனெக்ஷன் இருக்கலாம். ஒரே கட்டணம் தான்) அல்லது மணிக்கு இவ்வளவு என்று கனெக்ஷனுக்கு பணம் கட்டுகிறார்களா என்று தெரிஞ்சுக்கங்க. இன்னோரு முக்கியமான விஷயம். சில வீடுகள்லே இணையக் கனெக்ஷனுக்காக தனி தொலைபேசி லைன் கிடையாதுங்க. நீங்க இணையத்துக்கு கனெக்ட் பண்ணினா, அவர்களுக்கு யாரும் போன் செய்ய முடியாது (எங்கேஜ்ட் சத்தம் தான் வரும்), அவர்களாலும் யாருக்கும் போன் செய்ய முடியாது. அவங்க போன் பில்லும் எகிறும். அதனாலே இதை முதல்லே கண்டிப்பா கேட்டு தெரிஞ்சுக்கங்க. v நம் உறவி¨ர்/நண்பர் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக ஒரு ப்ரொக்ராமை டெளன்லோட் செய்யறதோ அல்லது அழிக்கறதோ கூடவே கூடாதுங்க. அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால் அவர்களையும் பக்கத்திலே வைத்துக் கொண்டு தான் செய்யணும். அவர்கள் இல்லாத பொழுது ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு தெரியப் படுத்தணும்.v கூடிய மட்டும் நீங்க என்ன வேலை செய்யப் போறேன்னு சொன்னீங்களோ அது மட்டும் செஞ்சுட்டு எழுந்து வந்துடுங்க. அவர்களின் எந்த சாப்ட்வேரையும் அனாவசியமாக திறக்காதீங்க. v ஒரு சிலர் தங்கள் வேலை முடிந்த உடன் எல்லாவற்றையும் மூடி (shut down), மின் இணைப்பையும் துண்டித்து விட்டு வந்துடுவாங்க. அதையும் கேட்காமல் செய்யாதீங்க. ஏனேன்றால் சிலர் வீட்டில் சில ப்ரோக்ராம்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் மிஷினை அடிக்கடி shut down செய்யமாட்டார்கள். v குழந்தைகளை கூடிய மட்டும் உபயோகப்படுத்த அனுமதிக்காதீங்க. அப்படி அவங்க ஏதாவது கேம்ஸ் விளையாடினா நீங்க கண்டிப்பா பக்கத்திலேயே இருங்க. v உங்க உறவி¨ர்/நண்பர் கம்யூட்டரிலிருந்து நீங்களும் பர்சனல் கடிதங்களோ அல்லது அவர்களைப் பற்றி ஏதாவது அபிப்பிராயங்களோ அனுப்புவதை தவிர்க்கப் பாருங்க. நீங்க உங்க மெயில் சாப்ட்வேரை சரியாக மூடாமல் போய்டீங்கன்னா, அவர்கள் உங்கள் கடிதத்தை பார்க்க வாய்ப்பு இருக்கு. அடுத்த நாலு நாளைக்கு சாம்பார்லே உப்பு இல்லைன்னா ச்சர்யப்படாதீங்க. “அட சே! இவ்வளவு விதிமுறைகளா?” அப்படின்னு நீங்க அலுத்துகிறது புரியறதுங்க. என்ன செய்யறது? நாம வாழறது கம்ப்யூட்டர் யுகமில்லையா? மற்றவரின் கம்ப்யூட்டரை நீங்க அவர்களோட சாபத்திற்க்கு உள்ளாகாம உபயோகப்படுத்த என் வாழ்த்துக்கள்!
------------------------------------------

Sunday, June 19, 2005

தங்க முனை விருது போட்டி 2003ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை

முகவரி புத்தகம்
வெகு நாட்களாக முகவரிகள் எழுதும் புத்தகத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். சிங்கப்பூர் வந்ததிலிருந்தே நான் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்ட வேலைகளில் இதுவும் ஒன்றாக இருந்து வந்தது. இருபத்தைந்து ண்டுகளாக உபயோகித்து வந்த புத்தகம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் அது ஒரு டைரி. 1977ம் வருட டைரி. டைரி வைத்துக் கொள்வதை நான் ஒரு கெளரவமாகக் கருதிய காலம். அப்பொழுதெல்லாம் டைரி கிடைப்பது அரிதாக இருந்தது. பெரிய பதவிகளில் உள்ளவர்கள் தான் டைரி உபயோகித்தனர். அவர்களின் முக்கிய வேலைகள், சந்திப்புக்கள் போன்றவற்றின் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ள பயன்படுத்தி வந்தார்கள். நான் வேலையில் இருந்த பொழுது என் மேலாளர் என் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இருபது ண்டுகள் உழைத்த நிறுவனம் அல்லவா? 1977ம் வருடம் அவர் தன் புது வருட பரிசாக இந்த டைரியை எனக்களித்தார். அதை மிக கவனத்துடன் பாதுகாத்து வந்தேன்.

டைரியின் கடைசி பக்கத்தில் முகவரிகள் எழுத வசதியாக ஒரு தனிப் புத்தகம் இருந்தது. டைரியில் பல குறிப்புகள்: மகளின் கல்யாணக் கணக்கு வழக்கு, மகனின் கல்யாணத்திற்கு அழைக்க வேண்டியவர்களின் பட்டியல், பேரனின் முதல் பிறந்த நாளின் போது வந்த பரிசுகளின் பட்டியல் என்று பல இனிமையான நிகழ்வுகளின் அடையாளங்கள். திடீரென்று செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தோன்றிய சில மாதங்களின் வரவு செலவு குறிப்புக்களும் உண்டு. பல பழைய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைக்கவும் டைரி உபயோகப்பட்டது. டைரியின் ஓரங்கள் அழுக்காகி, நைந்து போய்விட்டன. சில பக்கங்கள் பைன்டிங் நூலின் பிடியிலிருந்து திமிறி வெளியே வந்துவிட்டன. ஒரு நல்ல புத்தகம் வாங்கி மறுபடியும் எல்லா முகவரியையும் எழுத வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனோ அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. முகவரிகளை வேறு புத்தகத்தில் மாற்றினாலும் டைரியை மட்டும் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
போன வருடம் அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு சிங்கப்பூர் வந்திருந்த மகள் பூஜாவிடம் டைரியில் எழுதிய அவள் திருமணக் கணக்கு வழக்குகளை காண்பித்தேன். பெரியதாக சுவாரஸ்யம் காட்டாமல், “அதான் நிறைய வீடியோ எடுத்தோமே அப்பா,” என்று சொல்லிவிட்டாள். நிகழ்வுகளைப் பதிய வைக்கலாம், நினைவுகளை நாம் தானே அசை போட வேண்டும்? அதற்கெல்லாம் அவளுக்கு நேரம் இருக்கவில்லை. சிராங்கூன் சலையில் கடைகளுக்குச் செல்வதற்கும், இந்திய உணவு பொருட்கள், உடைகள் வாங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அமெரிக்காவில் கிடைக்கும் சாக்கலேட்டுக்களையும், வாசனை திரவியங்களையும் சிங்கப்பூரிலுள்ள அண்ணன் குடும்பத்தினருக்கு பரிசாகக் கொண்டு வருவாள். பிறகு இங்கு கிடைக்கும் பொருட்களை பெட்டி நிறைய அடுக்கிக் கொண்டு செல்வாள். இங்குள்ளவர்களுக்கு அமெரிக்கப் பொருட்கள் மேல் மோகம். அங்குள்ளவர்கள் இங்கிருந்து பொருட்களை எதிர்பார்க்கிறார்கள். இருப்பதைவிட இல்லாதவற்றின் மேல் ஆசைப் படுவது தானே மனித இயல்பு?

மகன் மகேஷ¤ம், மருமகள் ப்ரியாவும் அலுவலகம் கிளம்பும் சமயம் “முகவரிகளேல்லாம் எழுத ஒரு அட்ரஸ் புத்தகம் வேண்டும்” என்றேன்.

“பாம் பைலட் வாங்கி தரட்டுமா? நான் உபயோகப்படுத்துற எலக்ட்ரானிக் டைரி. அது தான் இப்பொழுது பிரபலம்” என்றான் மகன்.

“அதெல்லாம் வேண்டாம்பா. எனக்கு பழக்கமும் இல்லை கண்ணும் தெரியாது,” என்றேன்.

இப்பொழுது உள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றது தான் அது என்று நினைத்துக் கொண்டேன். கல்லூரியில் படித்த நண்பர்கள் உலகின் பல மூலைகளில் உள்ளார்கள். கூட வேலை செய்யும் நண்பர்கள் பலரும் ஒரு வேலையில் மூன்று, நான்கு வருடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் ஒரே வீட்டிலோ ஒரே ஊரிலோ சில வருடங்களுக்கு மேல் இருப்பதில்லை. நிறுவனங்களும் நன்றாகச் செயல்படும் காலங்களில் ஊழியர்களுக்கு அள்ளி அள்ளித் தருகிறார்கள். தொழில் மந்தமடைந்தால் உடனே வேலையை விட்டு நீக்கவும் தயங்குவதில்லை. அதனால் நண்பர்கள் வருகிறார்கள், போகிறார்கள். நிரந்தரமில்லாத உறவுகள். பாம் பைலட்டின் எழுத்துக்கள் போல். சுலபமாக எழுதலாம், சுலபமாக அழிக்கலாம்.

இந்தக் கலாசாரத்தை சமீபத்தில் எங்கள் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் நான் கலந்து கொண்ட பொழுது தெரிந்து கொண்டேன். சாதாரணமாக என் மகன் மற்றும் மருமகளின் நண்பர்கள் விருந்துக்கு வந்தால் நான் ஒதுங்கி விடுவேன். கோயிலுக்கோ நூலகத்திற்கோ சென்று விடுவேன். அவர்களைச் சந்திக்கக் கூடாது என்ற எண்ணத்தினால் அல்ல. எனக்கு இப்பொழுது நூறு சதவிகிதம் காது கேட்பதில்லை. அதை தெரிந்த சிலர் என் தேவைக்கு மேல் சத்தமாக பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் வயதில் சிறியவர்கள், நாம் இருந்தால் மனம் விட்டுப் பேச சற்றுக் கூச்சப் படுவார்களோ என்பது இன்னொரு காரணம். அவர்களும் என்னிடம் தீவிரமாக எதைப் பற்றியும் பேசியதில்லை. வயதானவர் என்ற மரியாதை காரணமாக இருக்கலாம். மகேஷ¤ம் என் சங்கடத்தை ஊகித்தவன் போல் பெரிதாக வற்புறுத்தியதில்லை. அந்த விருந்திற்கு தனது நண்பனின் தாய், தந்தையரும் வருவதாக இருப்பதால், “நீங்களும் கலந்து கொள்ளுங்கள் அப்பா” என்றான் மகன். தட்ட முடியவில்லை.

மகேஷின் நண்பனின் தாய், தந்தையரை அறிமுகம் செய்தாள் ப்ரியா. மனைவியோடு இருந்த அவரிடம் இயல்பான ஒரு தன்னம்பிக்கை இருந்ததாக எனக்குப் பட்டது. தனிமரமாக நின்ற என்னை நினைத்து எனக்குள்ளே சட்டென்று கழிவிரக்கம் தோன்றி மறைந்தது. இருவரும் என்னிடம் அன்பாகப் பேசினர். ஆறு மாத விசாவில் வந்திருந்தனர். இப்பொழுது அனேகமாக இந்தியா திரும்பியிருப்பார்கள்.

அன்று விருந்து களை கட்ட ஆரம்பித்திருந்தது. எல்லோருமே புதிய நண்பர்கள். ஓரிருவர் தான் சற்று பழைய நண்பர்கள். குறிப்பாக ஒரு பெண்மணியைக் கவனித்திருக்கிறேன். அவர் பேசும் பொழுது எதிராளியை எந்த வகைப்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் மட்டுமே பேசுவார். அதாவது எதிராளி பணக்காரரா ஏழையா, நன்கு படித்தவரா இல்லையா, பெரிய இடங்களில் தொடர்பு உடையவரா போன்ற விஷயங்களை அறிந்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார். கேள்விக் கணைகள் முடிந்த உடன் அந்த மனிதரால் தனக்கு ஏதாவது உபயோகம் இருக்கும் என்று நினைத்தால் பேச்சைத் தொடர்வார். இல்லையென்றால் நாசூக்காக விலகி அடுத்துக் கண்ணில்படுபவரிடம் தன் கேள்விகளைத் தொடுப்பார்.

மற்றவர்கள் பேச்சைக் கேட்ட பொழுது, “நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? எங்கு படித்தீர்கள்?” என்று ஒருவருக்கொருவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்கள். ஒரே சந்திப்பில் மற்றவருடைய முழு வாழ்க்கை சரித்திரத்தைத் தெரிந்து கொள்வதில் ஓர் அவசரம் ஓர் ஆர்வம். மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்வது ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பது போன்றது என்று நினைப்பவன் நான். மாதாந்திர மர்மக் கதையின் உச்சக் கட்டத்தை உடனே தெரிந்து கொள்ளத் துடிப்பவர்களைப் போல் இவர்களின் அவசரம் எனக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கிறது.
நான் தான் இந்த மாதிரி உணர்ச்சிபூர்வமாக நிறைய யோசிக்கிறேனோ என்று தோன்றியது. வயதாகி விட்டது காரணமா என்னைச் சுற்றி வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் காரணமா என்று தெரியவில்லை. என் மனைவி நீலா உயிருடன் இருந்த பொழுது நான் அவ்வளவாக எதைப் பற்றியும் யோசித்ததில்லை. வேலை, குழந்தைகளின் படிப்பு, அவர்களின் திருமணம் என்று பல பொறுப்புக்கள். நேரம் சரியாக இருந்தது.

“மாமா, அட்ரஸ் புக் கேட்டீர்களே”, ப்ரியாவின் குரல் நிகழ் காலத்திற்கு என்னை அழைத்து வந்தது. ஞாபகமாக வாங்கிக் கொண்டு வந்து விட்டாள். இனி தள்ளிப் போட முடியாது. பழைய புத்தகத்தை திறந்தேன். முதல் பக்கத்தில் முக்கிய முகவரிகளை எழுதியிருந்தேன். முதலில் இருந்தது என்னுடைய பழைய முகவரி. நானும், நீலாவும் முப்பது வருடங்கள் வாழ்ந்த எங்கள் சொந்த வீடு.

அப்பொழுது நாங்கள் இந்தியாவில் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். சிங்கப்பூரில் இருந்த மகேஷின் வீட்டிற்கு வருடத்திற்கு ஒரு முறை மூன்று மாத விடுமுறையில் வந்து போய் கொண்டிருந்தோம். நீலா இருக்கும் பொழுது கலை நிகழ்ச்சிகள் பார்ப்பது, கோயிலுக்குச் செல்வது, தேக்கா நிலையத்தில் வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்கச் செல்வது என்று பொழுது வேகமாக ஓடி விடும். நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஒரு வருடம் நிறையும் பொழுது நீலா என்னை விட்டுப் போய்விட்டாள். நீலாவின் மறைவிற்குப் பிறகு மகனும் மருமகளும் “தனியாக இந்தியாவில் இருந்து கஷ்டப்படாதீர்கள்”, என்று வற்புறுத்தி என்னை சிங்கப்பூரிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்து விட்டார்கள். சொந்த வீட்டை விற்க வேண்டிய கட்டாயம். நீலாவின் இழப்பு ஒரு பூகம்பம் என்றால் வீடு கைவிட்டு சென்ற பொழுது பூகம்பத்தின் பின் அதிர்வுகள் ஏற்பட்டது போல் இருந்தது. சில மாதங்கள் பொறுத்து விற்றிருந்திருக்கலாம். ஆனால் மகேஷ் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சிங்கப்பூர் திரும்ப நினைத்தான். பிறகு நீண்ட விடுமுறை கிடைக்காமல் போகலாம் என்பதும் ஒரு காரணம். நான் பிடிவாதம் பிடிக்காமல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன்.

இங்கு வந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. சிங்கப்பூர் நன்றாகப் பரிச்சியமாகி விட்டது. னால், நீலாவுடன் வெளியே சென்று பழகிவிட்டதால் தனியாக வெளியே போக வேண்டும் என்றால் ஒரு இனம் புரியாத பயம். நினைத்த உடன் கிளம்பத் தோன்றுவதே இல்லை. குறிப்பாக சாயந்திர வேளைகளில் மனது மிகவும் சோர்வடைந்து விடுகிறது. நல்ல உடை உடுத்துவது கூடக் குறைந்து விட்டது. “ஆமாம்.. இந்தக் கிழவனை யார் பார்க்கப் போகிறார்கள்?” என்று ஒரு எண்ணம் ஏற்பட்டு உற்சாகம் குறைந்து விடுகிறது. நீலா இருக்கும் பொழுது விஷயமே வேறு. என் துணிகள் எல்லாம் சுத்தமாக மடிப்புக் கலையாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அணிவதே சுகமாக இருக்கும். அதுவும் நீலாவுடன் வெளியே செல்வதென்றால் ‘நான் தான் அவளின் கணவன்’ என்று பறைசாற்றிக் கொள்ளத் தோன்றும். அதற்காகவே நன்றாக உடுத்திச் செல்வேன்.

எப்பொழுதும் ‘பளிச்’ சென்று உற்சாகமாக இருப்பாள் நீலா என்ற நீலாயதாஷி. எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவாள். எந்த வேலை செய்தாலும் ஒரு நேர்த்தி இருக்கும். அவளின் புடவையும், நெற்றி நிறைய பெரிய பொட்டும், தலையில் மல்லிகையும் பார்ப்பதற்கு பாந்தமாக இருக்கும். அவள் முகத்தில் கோபமோ அல்லது வருத்தமோ பார்ப்பது மிகவும் அரிது. அப்படியே ஏதாவது இருந்தாலும் சுலபமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவாள் நீலா. கடவுள் பக்தி அதிகம். வீட்டில் நல்ல சங்கீதம் லேசாக ஒலித்துக் கொண்டே இருக்கும். சந்தன ஊதுபத்தியுடன் ரோஜாவின் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும். பூஜை அறை அப்பொழுது தான் சுத்தம் செய்தது போன்ற தோற்றத்தை எப்பொழுதும் அளிக்கும். இப்பொழுது அதற்கெல்லாம் யாருக்கும் நேரம் இல்லை.

மகன் மகேஷ், மருமகள் ப்ரியா இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். இருவரும் நன்கு படித்தவர்கள். என்னிடம் அன்பும், மரியாதையும் நிறைய உண்டு. னால் அதை வெளிப்படுத்த நேரம் வேண்டுமே? அவர்களின் குழந்தைகளே அதற்காகப் பொறுமைப்யுடன் ஞாயிற்றுக் கிழமைகளை எதிர்பார்க்கும் பொழுது நான் வருத்தப்படுவது நியாயமில்லை தானே? பேரக் குழந்தைகள் இன்னும் சின்னவர்களாக இருக்கிறார்களே என்பதனால் மருமகள் சில வருடங்கள் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தால் என்ன என்று ஒரு முறை கேள்வி எழுப்பினேன். அதற்கு இருவரும், “ஒருவர் மட்டும் வேலைக்குச் சென்றால் சில வசதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும், மருமகள் ப்ரியாவின் படிப்பு வீணாகிவிடும். வீட்டு வேலை செய்யத்தான் பணிப் பெண் இருக்கிறாளே, குழந்தைகளையும் அவள் நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறாள்,” என்று பதில் வாதம் செய்தார்கள். உண்மைதான். வசதிகள் சற்றுக் குறையும். ஆனால் வசதிகள் இருந்தும் சரியாகச் சாப்பிட, தூங்க கூட நேரமில்லாத வேலையால் என்ன லாபம்? ஒருவர் வேலையை விட்டு விட்டு வீட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் வசதிகள் சற்றுக் குறைந்தாலும் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்கலாமே.

பணத்தினால் கிடைத்துள்ள வசதிகளை எவ்வளவு தூரம் பயன் படுத்துகிறார்கள் என்ற கேள்வியும் என் மனத்தில் எழுந்தது. உதாரணமாக, புத்தகங்கள் என்றால் மகேஷ¤க்கு மிகவும் பிடிக்கும். நன்றாக சம்பாதிக்க தொடங்கிய உடன் பல புத்தகங்கள் வாங்கி வீட்டின் ஓர் அறையை ஒரு சிறு நூலகமாக மாற்றி இருந்தான். ஆனால் எனக்குத் தெரிந்து அவனால் படிப்பதற்கு என்று ஒரு அரை மணி நேரம் கூட ஒதுக்க முடியவில்லை. நான் தான் புத்தகங்களை தூசு தட்டி வைக்கிறேன்.

நிறைய படித்த புத்திசாலியான பெண் தான் ப்ரியா. ஆனால் அவளின் இரு குழந்தைகளுக்கும் அந்த புத்திசாலித்தனம் எந்த அளவு பயன் படுகிறது? பணிப்பெண்ணிற்கு எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கிறதோ அது தானே குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. நல்ல படிப்பின் உபயோகம் பணம் சம்பாதிப்பதில் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். குழந்தைகளை பண்புள்ள, பல கலைகள் கற்ற மனிதர்களாக வளர்ப்பது படிப்பின் உபயோகம் இல்லையா? பணம் மாதா மாதம் கையில் கிடைத்து விடுகிறது. கையால் அது உடனே உணரத்தக்க, அனுபவிக்கக்கூடிய பலன். குழந்தை வளர்ப்பின் பலன்கள் தெரிய பல வருடங்கள் கலாம். அதனால் பொருளாதார தேவை இல்லாவிட்டாலும் வேலைக்கு செல்லும் முடிவை பலரும் தேர்ந்தேடுக்கிறார்கள். மகேஷ¤ம், ப்ரியாவும் இந்த கேள்விகளை எல்லாம் தங்களை கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார்களோ என்னவோ? நான் தான் சற்று பழைமைவாதியோ? அவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

மகேஷ¤ம், ப்ரியாவும் அவர்களின் சமநிலையில் இருந்த நண்பர்களின் வாழ்க்கை நிலையைப்போல் தான் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார்கள். நல்ல வீடு, ஒரு கார், பணிப் பெண், அந்தஸ்துள்ள வேலை. இந்த வட்டத்திலிருந்து மாறுபட்டிருக்க வேண்டுமேன்றால் துணிச்சல் வேண்டும். பழக்கப்பட்ட பாதையைத் தேர்ந்தேடுப்பதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. பணியில் இருந்த காலத்தில் நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளமை பருவத்தில் எனக்கும் ஏற்பட்டது. ஆனால் நீலா இந்த விஷயத்தில் நேர் எதிர். என் சொற்ப வருமானத்தில் முகம் கோணாமல் குடும்பத்தை நிர்வகித்தாள். என்ன ஆனாலும் சரி, ஞாயிற்றுக் கிழமைகளை கண்டிப்பாகக் குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும் என்ற விதிமுறையை ஏற்ப்படுத்தியிருந்தாள். காலையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது, பிறகு ஒரு குட்டித் தூக்கம், மாலையில் கடற்கரைக்குச் செல்வது என்ற வழக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆரம்பத்தில் எனக்கு இது சற்று எரிச்சலாக இருக்கும். இந்த நேரத்தில் வேறு எதாவது வேலையை ஏற்றுக் கொண்டு வருமானத்தைப் பெருக்கலாமே என்று நான் நினைத்ததுண்டு. என் கூட வேலை செய்பவர்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் தலைமை நிர்வாகியின் வீட்டிற்குச் சென்று கணக்கு வழக்குகளில் உதவி செய்து அதிகம் சம்பாதித்தனர். வேறு சிலர் காப்புறுதி முகவர்களாக அல்லது வீடு, மனை முகவர்களாக இருந்து வருமானத்தை அதிகரிக்க முயன்றனர். இதைப் பற்றி பேச்செடுத்த பொழுது நீலா திட்டவட்டமாக மறுத்து விட்டாள். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் குழந்தைகள் மணலில் உற்சாகமாக விளையாட, கடல் காற்று முகத்தில் மோத, காரமான சுண்டலை சுவைத்தபடி பல விஷயங்கள் பேசி கொண்டிருப்போம். அந்த நினைவுகளின் முக்கியத்துவத்தை இப்பொழுது உணர்கிறேன். எவ்வளவு சுகமானவை! நான் இன்னும் சில ஆயிரங்கள் சேமித்திருக்கலாம் னால் அந்த நினைவுகளை இன்று வாங்க முடியுமா? இதை நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று தயங்கி பேசாமல் இருந்தேன். சரியான சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்லலாம் என்றிருந்தேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

நினைவலைகளிலிருந்து மீண்டு முகவரிகளில் கவனத்தை செலுத்தினேன். முக்கிய முகவரிகளில் அடுத்து வந்தது மகள் பூஜாவின் அமெரிக்க முகவரி. நீலாவின் மறைவிற்குப் பிறகு பூஜா என்னை அமெரிக்காவிற்கு வரச் சொல்லி பல முறை அழைத்தாள். ஒரு முறை சென்றேன். அந்த அனுபவமே போதும். மறு முறை செல்ல நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். அங்கு சென்றால் தனிமை மிகவும் பயமுறுத்தும். சிங்கப்பூரைப் போல் வயதானவர்கள் தனியாக வெளியே செல்ல முடியாது. மகள், மருமகன் கையை எதிர்பார்க்க வேண்டும். பஸ் வசதி இல்லாததால் கார் இல்லாமல் எங்கேயும் போக முடியாது. அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டால் வாரம் முழுக்க வீட்டிற்குள் சிறைவாசம் தான். அதுவும் என்னைப் போல் பெரிதாகத் தொலைக்காட்சி பார்க்கப் பிடிக்காதவர்களுக்கு உண்மையில் மிகவும் சங்கடமே. அவர்களின் வீடு மிகப் பெரியது. சுற்றிலும் பச்சைப் பசேலென்று புல்வெளி. பக்கத்து வீடு கிட்டதட்ட அரை கிலோமீட்டர் தள்ளி இருந்தது. அந்த வீட்டின் சுற்றுப்புறத்தைச் சூழ்ந்த அமைதி என் காதைச் செவிடாக்கிவிடும் போல் இருந்தது. மக்களின் பேச்சு குரலுக்கும், வாகனங்களின் சத்தத்திற்கும், குழந்தைகளின் கூக்குரலுக்கும் மனம் ஏங்கியது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒரு மனிதன் கண்ணில் படுவதுகூட அரிதாக இருந்தது. நான் தினம் பார்த்த ஒரே மனிதர் தபால்காரர். அவரின் தினசரி வருகையை இவ்வளவு ஆவலோடு எதிர்ப்பார்த்த மனிதன் அந்த நாட்டிலேயே நான் ஒருவனாகத்தான் இருந்திருப்பேன். மறுமுறை அமெரிக்காவிற்கு நான் வர மறுத்தது குறித்து பூஜாவிற்கு வருத்தம். ஓரளவு என் நிலமையைப் புரிய வைக்க முயற்சி செய்தேன். “நீங்கள் அனாவசிய பிடிவாதம் பிடிக்கிறீர்கள் அப்பா. அந்த ஊரில் வயதானவர்களே இல்லையா என்ன?’ என்றாள். தனிமை எவ்வளவு கொடுமையானது என்று ஒரு வேளை என் வயது வந்தால் புரிந்து கொள்வாளோ என்னவோ?

அடுத்து கண்ணில் பட்ட பெயர் அனந்த ராமன். என்னுடன் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். தன் மகனுடன் அமெரிக்கா சென்று விட்டான். பூஜாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் புது முகவரியை கொடுத்திருந்தான். அவளிடம் கேட்ட பொழுது மின் அஞ்சல் முகவரியைத் தான் கொடுத்தாள். “முழு முகவரி எங்கே எழுதினேன்னு தெரியலை அப்பா. இப்ப எல்லோரும் மின் அஞ்சலையே உபயோகப் படுத்துகிறார்கள்” என்றாள். இங்கும் அதே கதை தான். யாருக்கும் கடிதம் வருவதில்லை. வாழ்த்து என்றாலும் சரி, விஷயம் என்றாலும் சரி, நாலே வரிகளில் ஒரு மின் அஞ்சல் அல்லது மின் அஞ்சலிலேயே வாழ்த்து. பெரிதாக வரிகள் யோசிக்கத் தேவையில்லை. யாரோ ஏற்கனவே எழுதி வைத்த அலங்கார வரிகளை எடுத்துக் கணினியின் மூலம் உடனே அனுப்பி விடலாம். சுலபமாக ஒருவரோடு ஒருவர் தொடர்ப்பு வைத்துக் கொள்ளலாம். இது ஒரு பிரமிக்கத் தக்க முன்னேற்றம் என்பதில் சந்தேகமே இல்லை. உலகில் பல மூலைகளில் உள்ளவர்களிடம் நிமிடங்களின் விஷயங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்பது எங்கள் காலத்தில் நினைத்து பார்க்கவே முடியாத ஒரு விஷயம். இது போன்ற வாய்ப்புக்கள் இருந்த பொழுதும் இவர்களிடம் ஒரு சோம்பேறித்தனம் இருப்பதாக பட்டது எனக்கு. நேரப் பற்றாக்குறையா? எண்ணப் பற்றாக்குறையா? உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையா? என்ன காரணம் என்பது இவர்களுக்கே வெளிச்சம்!

எனக்கு ஆங்கிலத் தட்டெழுத்து ஓரளவு தெரிந்தாலும் என் கைப்பட எழுதும் சுகம் அதில் இல்லை. நிதானமாக ஒரு காலைப் பொழுதில் எழுந்து, மனத்தில் வரிசையாகத் தோன்றும் விஷயங்களை முத்து முத்தாக எழுதும் சந்தோஷம் வருமா? நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வரும் கடிதங்களையும், வாழ்த்துக்களையும் டைரியில் பத்திரப்படுத்தி சில மாதங்களுக்குப் பிறகு எடுத்துப் படிக்கும் பொழுது ஏற்படும் உணர்வே தனி. நீலாவும் நானும் பிரிந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பம் அவ்வளவாக வந்ததில்லை. பிரசவத்தின் பொழுது மட்டும் சில வாரங்கள் பிரிய வேண்டிய நிலை. நீலாவிற்கு விரிவாகக் கடிதம் எழுதப் பொறுமை கிடையாது. ஒரு தபால் அட்டையில் விஷயத்தைச் சுருக்கிவிடுவாள். இருந்தாலும் அதில் பாசமும், அக்கறையும் கண்டிப்பாக மேலோங்கி இருக்கும். இன்றும், நூறாவது முறையாக சில கடிதங்களை நான் படித்துப் பார்ப்பதுண்டு. கல்லூரியில் என்னுடன் படித்த என் நல்ல நண்பன் ஒருவன் பூஜா பிறந்தவுடன் வாழ்த்துக்கள் எழுதிய கடிதத்தில் “என் மகனுக்காக ஒரு மகள் பெற்றுக் கொண்டுவிட்டாயே. ரொம்ப சந்தோஷம். கூடிய சீக்கிரம் என் மருமகளை வந்து பார்க்கிறேன்,” என்று எழுதியிருந்தான். சில வருடங்களிற்குப் பிறகு அவனுடன் தொடர்பு விட்டுப் போயிருந்தாலும் இன்றும் அந்தக் கடிதத்தை பார்த்தால் என் முகத்தில் புன்னகை பூக்கும்.
நம் மன நிலைக்கு ஏற்றார் போல் கடிதத்தின் தன்மையும் மாறுவது போல் எனக்குத் தோன்றும். உற்சாகமாக இருந்தால் மேலும் புத்துணர்ச்சி கூடும், சோர்வாக இருந்தால் கடித வரிகள் மனத்தை வருடுவது போல் இருக்கும். பழைய கடிதங்களின் அண்மை மிகவும் ஆறுதலளிக்கும் விஷயம். கடிதங்களோடு நான் அமரும் நேரம் நிகழ்ச்சிகளை அசை போட அமைந்த ஒரு புனிதமான பொழுது. என் தனிமையைப் போக்க நான் தேர்ந்தெடுக்கும் புகலிடம்.

பூஜாவிடமிருந்து வருகிற மின் அஞ்சல்களை பார்த்திருக்கிறேன். “How r u? V r all gr8...” என்று இருந்தது. இணைய பாஷை. ஆழம் தவிர்த்து அவசரம் தொனிக்கும் வார்த்தைகள். “என்னடா இது? ஆங்கிலமும் இல்லாம தமிழும் இல்லாம...” என்று பேரனிடம் அங்கலாய்த்தேன். “எனக்குப் புரியும் தாத்தா. நீ ஏன் அனாவசியமா கவலைப்படறே?” என்றான். நேரம் கிடைக்கும் பொழுது இன்னோரு முறை படிக்கலாம் என்று பார்த்தால், “அதெல்லாம் டெலீட் பண்ணியாச்சு தாத்தா. அடுத்த தடவை அத்தை எழுதும் பொழுது சொல்றேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டான் பேரன். அவசர கதியில் இயங்கும் இந்தப் புதிய உலகத்தின் புதிய நிஜங்கள் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. என்னால் தான் சுலபமாகப் பழக்கிக் கொள்ள முடியவில்லை. அவனைப் பார்த்து சற்று பொறாமை கூடப் பட்டிருக்கிறேன். பூஜாவிற்கு நான் லெட்டர் எழுதலாம் என்று நினைத்து ஒரு கடிதத்தில் நிதானமாக எல்லா விஷயத்தையும் எழுதினேன். அதுக்கும் இதே குறுக்கெழுத்து மின் பதில்தான். இப்பொழுதெல்லாம் தொலைபேசியில் பேசுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

பணிப் பெண் தேனீருடன் வந்து நிகழ்காலத்தை நினைவுப்படுத்தினாள். அடுத்த பெயர் சந்துரு. அவனுடைய கேரளா அட்ரஸ் இருந்தது. அவனைப் பற்றி கேள்விப்பட்ட விஷயம் நினைவுக்கு வந்து கண்கள் கசிந்தன. சந்துருவிற்கு குழந்தைகள் கிடையாது. கணவன், மனைவி இருவரும் மிகவும் நல்லவர்கள். ஓய்வுபெற்ற பிறகு கேரளாவில் இருந்த தங்கள் பூர்வீக வீட்டிற்குச் சென்று விட்டனர். சமீபத்தில் அவன் மாரடைப்பால் போய் விட்டான் என்றும் சந்துருவின் கூடப் பிறந்தவர்களின் மகன்கள் அவன் மனைவியின் மேல் வழக்குத் தொடர்ந்து அந்த வீட்டை விட்டு அவளைத் துரத்தி விட்டதாக உறவினர் ஒருவர் சொன்னார். அந்த அம்மா சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்படுவதாகவும் சொன்னார். ‘நல்லவர்களைக் கடவுள் இப்படியா சோதிக்க வேண்டும்...” என்று வருத்தப் பெருமூச்சு விடுவதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

அடுத்து வந்த பெயர் துரைசாமி. என் மகள் பூஜாவின் மாமனார். பல தீவிரக் கொள்கைகள் உடையவர். கஷ்டப்பட்டு உழைத்து தன் மூன்று மகன்களை நன்றாகப் படிக்க வைத்தார். மூவரும் நல்ல பதவிகளில் உள்ளனர். ஆனால் யாருடைய தயவிலும் வாழக் கூடாது என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர். அதனால் தன் மனைவியோடு ஒரு சுவாமிஜியின் ஆஸிரமத்தில் வாழ்கிறார். அங்கு அவர்கள் இருவரும் தங்களால் முடிந்த உதவிகள் செய்வது, ஆதரவு இல்லாத குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுப்பது என்று நேரத்தை உபயோகமாக செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின் மனைவிக்கு மகன்களைப் பிரிந்திருப்பதில் அவ்வளவு தூரம் உடன்பாடில்லை. கணவரின் பேச்சைத் தட்டக் கூடாது என்று அவரும் ஒத்துழைத்துக்கொண்டு இருந்தார். சில மாதங்கள் அவர் தன் மகன்களுடன் தங்கி விட்டு வருவார். துரைசாமியைப் போல் என்னால் இருக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிப்பேனா என்பது சந்தேகம் தான்!

அடுத்த பெயர் துர்கா பலராமன். அவளின் லண்டன் முகவரி இருந்தது. என் உயிர் நண்பன் சந்தானத்தின் மகள். அவள் திருமணதிற்கு முன்பே அவன் போய்விட்டான். நானும் நீலாவும்தான் அவள் திருமணத்தை நடத்தி வைத்தோம். துர்காவை ஒரு விநோதமான நோய் பாதித்தது. அவளின் ரத்தத்திலுள்ள உயிரணுக்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் தங்களையே தாக்கிக் கொண்டன. பல லட்சத்தில் ஒருவரைத் தாக்கும் அரிய நோயாம். பல முறை சிகிச்சைப் பெற்றாள் துர்கா. முதலில் தரவாக இருந்த கணவன் சில வருடங்களுக்குப் பிறகு பொறுமை இழந்து அவளை விவாகரத்துச் செய்து விட்டான். துர்கா தைரியமான பெண். கஷ்டங்களால் வீழ்ந்து விடாமல் கஷ்டங்களை வீழ்த்தும் பலர் இருக்கிறார்கள் இல்லையா? துர்கா அந்த வகையைச் சேர்ந்தவள். இப்பொழுது அவள் லண்டனில் வேலைக்கு போய்க் கொண்டு, ஒரு கம்போடிய நாட்டுக் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகக் கடிதம் எழுதியிருந்தாள். திருமணம் முடிந்த புதிதில் தன்னுடைய புதிய முகவரியை அவளே தன் கைப்பட இந்த டைரியில் எழுதிக் கொடுத்தாள். அப்பொழுது அவள் முகத்தில் தெரிந்த வெட்கம் கலந்த பெருமிதம் இன்னும் கண் முன்னே நிற்கிறது.

அடுத்த பெயர் குணசேகரன். மருமகள் ப்ரியாவின் தந்தை. உற்சாக வெள்ளம். அவரின் கவலையற்ற மனப்பான்மை ஒரு தொற்று வியாதி போல் எதிராளியை பற்றிக் கொள்ளும். வேலை காரணமாக பல நாடுகள் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை நான் ‘உலகம் சுற்றும் வாலிபக் கிழவர்’ என்று தமாஷாக சொல்வேன். அடிக்கடி சிங்கப்பூரும் வருவார். அவர் வந்தால் எனக்கு உற்சாக டானிக் குடித்தது போல் இருக்கும். ப்ரியாவிடம் அடுத்து எப்பொழுது வருவார் என்று கேட்க வேண்டும்.

அடுத்தது மணவாளன். அவன் போய் ஐந்தாண்டுகள் கி விட்டன. ஒரு பள்ளியில் கணக்கு சிரியராக இருந்து ஓய்வுப்பெற்றான். சிறு வயதிலிருந்தே உண்டான நட்பு. கடைசிக் காலத்தில் பக்கவாதம் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருடம் படுத்தப் படுக்கையாக இருந்தான். முதலில் கரிசனத்தோடு கவனித்தனர் குடும்பத்தினர். னால் விரைவில் ஓர் சலிப்பு வந்து விட்டது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. மகன் ஒரு சிறிய வீட்டிலிருந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் சம்பாதியத்தில் சற்று பெரிய சம்சாரம். வீட்டின் ஒரு அறையை மணவாளனுக்காக ஒதுக்கி, ஒரு நர்ஸ் ஏற்பாடு செய்து அவனை நாள் முழுக்க கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம். “அப்பா கஷ்டப்படாமல் இறைவனடி சேர்ந்தால் போதும்”, என்று பேச ரம்பித்துவிட்டான் மகன். மணவாளனின் மனைவியால் கண்ணீர் விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் மறைந்த பின் அவர்கள் தங்கள் சுமை குறைந்த உணர்வை மறைக்க பெரிதாக மெனக்கெடவில்லை. ஒரு நல்ல மனிதன் கிட்டத்தட்ட அறுபது வருடம் வாழ்ந்த வாழ்க்கை ஒரு வருட உடல் உபாதையால் எவ்வளவு சீக்கிரம் மறக்கப்பட்டு விடுகிறது. மிகச் சமீபமாக நடந்த விஷயங்களை மட்டுமே ஞாபகத்தில் வைத்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறதே மனித மனம்! இந்தக் கொடூரமான நிஜம் என்னை ஊசியாய் குத்தியது.

அடுத்து வந்த சாம் என்ற சாமுவேல் குடும்பத்தாருடன் கோபித்துக் கொண்டு முதியோர் இல்லம் போய் சேர்ந்து விட்டான். சாமுவேலுக்கு ரத்த அழுத்தம் உண்டு. அதற்காகச் சாப்பிடும் மருந்தினாலோ என்னவோ தெரியவில்லை எதற்கெடுத்தாலும் கோபம். எல்லோருடனும் வாக்குவாதம், சண்டை! இந்த அலோபதி மருத்துவம் உடலைக்குணப்படுத்தினாலும், மனத்தை பாதித்துவிடும் போல் தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியா சென்ற பொழுது அவன் மனைவியைச் சந்தித்தேன். அந்த அம்மா, “இப்பொழுது வீட்டிலே எல்லோரும் நிம்மதியா இருக்காங்க. நான் மாதம் ஒரு முறை போய் பார்த்துட்டு வரேன். அங்கே நல்லா கவனிச்சுக்கறாங்க,” என்றாள் யதார்த்தமாக.

ஒரு வழியாக அடித்தல், திருத்தல்களுக்குப் பிறகு ஒரு பத்து, பன்னிரண்டு முகவரிகள் மட்டுமே புதுப் புத்தகத்தில் எழுதத் தேறின. புத்தகத்தை மூடி வைத்தேன். புதுப் பொலிவுடன் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. னால் உள்ளே பல வெற்றிடங்கள் இருந்தன, என் மனத்தைப் போல.
-------------------------------------------------