Wednesday, August 24, 2005

அன்புத் தோழி! உனக்காக கொஞ்ச நேரம்.....

சமீபத்தில் என் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவம் இது. கல்லூரிப் படிப்பை முடித்த மகன் படிப்பைத் தொடர வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்கிறான். அம்மாவால் மகனின் பிரிவை தாங்க முடியவில்லை. மகனை அனுப்பி வைத்துவிட்டு மன அழுத்தத்தாலும், மன உளைச்சலாலும் அவதிப்படுகிறாள் தாய். சிறிது நாட்களில் இது மனநிலை பாதிப்பாகவே மாறி மன நல மருத்துவரின் உதவியை நாடும் அளவிற்குப் போய் விட்டது.

இது ஒரு extreme example தான் என்றாலும் யோசித்து பார்த்த பொழுது பொதுவாகவே நமது குடும்ப சூழலில் திருமணம் ஆனவுடன் மனைவியின் திறமைக்கோ, படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட கணவனின் வேலைக்கும், ஈடுபாடுகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் என்பது தெரிந்தது தான்.

ஒரு குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே உடல் ரீதியாக பல பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் ஒரு தாய் இருக்கிறாள். அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் முக்கிய பொறுப்பு அவளுக்கு தான் அதிகம் வருகிறது.

என் தோழி ஒருத்தி திருமணத்திற்கு முன் நல்ல பரத நாட்டியக் கலைஞராக இருந்தார். கணவன் அவளிடம் “எனக்கு பரதம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நீ தொடர்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றான். ஆட்சேபிப்பது என்பது வேறு ஒத்துழைப்பது என்பது வேறு. குடும்ப பொறுப்புக்களிலும், வீட்டை நிர்வகிப்பதிலும், குழந்தை வளர்ப்பிலும் கணவன் பங்கேற்கவே இல்லை. அதனால் தன் நடனக் கலையை தொடர முடியாத நிலையில் இருக்கிறாள் என் தோழி. தற்பொழுது தன் ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக தன் ஒரே மகளை வளர்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாள். மகளுக்கு பல விதமான கலைகளை கற்றுக் கொடுக்கிறாள். அந்த மகள் தன் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்துவிட்டால் இந்த தாயின் உலகில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது.

நான் பார்க்கும் பல பெண்கள் தங்கள் திறமைகளையும், ஆசைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு கணவனுக்கு சேவை செய்வதிலும், குழந்தை வளர்ப்பதிலும் முழு கவனமும் செலுத்துகிறார்கள். தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே அந்த குழந்தையை ஒரு பெரிய ஆள் ஆக்குவது தான் என்று நினைக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். மகன்/மகளுக்கு பாடம் சொல்லித்தருவது, பிடித்ததை விதம் விதமாக சமைத்துப் போடுவது, பள்ளி தவிர பாட்டு, நடனம் போன்ற கலைகளை கற்றுக் கொடுப்பது என்று நேரம் போவதே தெரியாமல் வருடங்கள் ஓடி விடுகின்றன.

மகளோ மகனோ வளர்ந்து சுயமாக உலகை தெரிந்து கொள்ள மேல்படிப்பிற்காக வேறு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ சென்று விட்டால் இந்த தாயின் உலகம் சூன்யமாகி விடுகிறது. தன் வாழ்க்கைக்கு குறிக்கொளே இல்லை என்பது போல் அவள் செயல்படுகிறாள்.

சரி! இதை எப்படி தடுப்பது? சில உற்சாகமான பெண்களை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு முன் உங்களை மன ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். தனக்கென்று தனித்துவத்தோடு ஈடுபட ஒரு விஷயம் இல்லாமல் இருப்பது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

உங்கள் கணவன் மற்றும் குழந்தைகளுடன் கலந்து பேசி, ஒரு நாளைக்கு உங்களுக்காக என்று ஒரு பகுதியை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளலாம், ஏதாவது புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம், உடல் பயிற்சி செய்யலாம், அல்லது தோழிகளுடன் வெளியே செல்லலாம். திருமணத்திற்கு முன் தனக்கிருந்த நல்ல தோழிகளுடன் தொடர்பை நீடிப்பதே சிலருக்கு பெரும் கஷ்டமாக போய்விடுகிறது. கணவரின் நண்பர்கள், மற்றும் குழந்தைகளின் நண்பர்களின் குடும்பங்கள் என்று உறவுகள் மாறி விடுகின்றன. கூடிய மட்டும் பள்ளி/கல்லூரித் தோழிகளோடு தொடர்ப்பு வைத்துக் கொண்டால் சமயத்தில் தோள் கொடுக்க ஒரு தோழி இருப்பாள்.

ஏதாவது ஒரு நல்ல விஷயத்தில் மனதை செலுத்துங்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் செய்ய முடிந்தால் அதிர்ஷ்டம். இல்லையேன்றால் விடா முயற்சியுடன் தொடருங்கள். உங்களின் உற்சாகத்தை பார்த்து அவர்கள் நிச்சயம் ஒரு நாள் உங்களை ஊக்குவிப்பார்கள். உங்கள் குழந்தை பெரியவனாகி யாரையும் சார்ந்து இல்லாமல் இருந்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்காகவும் வாழ ஆரம்பியுங்கள். அப்பொழுதுதான் பிறருக்காக வாழும் நாட்கள் பிற்காலத்தில் ஒரு சுமையாக மாறாது.

Sunday, August 14, 2005

பாட்டிக்கு ஒரு அஞ்சலி

'பாட்டி போயிட்டா' போன வாரம் அதிகாலையில் ஃபோன் செய்தி. வெளிநாட்டில் இருப்பதால் சந்தோஷங்களிலும் தொலை தூர பங்களிப்பு தான், துக்கத்திலும் அதே தான். துக்கத்தில் பங்கு கொள்ள எனக்கு தைரியம் கிடையாது. அதனால் தூரம் உதவியாக இருந்தது.

பாட்டிக்கு 90 வயது. மூன்று வருடங்கள் முன்பு 92 வயதாகியிருந்த தாத்தா போய்விட்டார். தாத்தா இருந்த வரை பாட்டி சற்று ஆரோக்கியத்துடன் தான் இருந்தார் என்று சொல்ல வேண்டும். 'தாத்தாவை தான் தான் கவனிக்க வேண்டும்' என்பது அவருடைய எண்ணம். நாங்கள் பார்த்துக் கொண்டாலும் அவ்வளவு திருப்தி இருக்காது. இத்தனைக்கும் சின்ன வயதில் தாத்தாவின் முன் கோபத்தால் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். 9 குழந்தைகளில் 2 தான் தங்கியது. தாத்தா 'முணுக்'கென்று கோபம் வந்தால் வேலையை விட்டு விட்டு வந்துவிடுவார். எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறார் பாட்டி.

கடைசி காலத்தில் தாத்தாவை ஒரு பெண் புலி தன் குட்டியை பார்த்துக் கொள்வது போலத்தான் பார்த்துக் கொண்டார். டாக்டர் 'லைட்டான உணவு கொடுங்கள்' என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதில் தாத்தாவுக்கு ஒரு பங்கு என்று வாங்கிக் கொள்வார். அவரால் கடிக்க முடியாவிட்டாலும் அதை தண்ணீரில் கரைத்து சாப்பிட வைத்துவிடுவார்!

அன்று முழுக்க பல நினைவுகள் வந்து போய் கொண்டே இருந்தன:

திரைப்படம் கல்யாணத்தில் முடிந்தால் தான் நல்ல படம் என்று சர்டிஃபிகேட் கொடுக்கும் பாட்டி...

ஈ-மெயிலில் வரும் குடும்ப ஃபோட்டோக்களை பார்த்து 'என்ன அதிசியம் பார்த்தியா? இது கார்தாலே எழுந்து பார்த்தாலும் தெரியுமா?' என்று வியக்கும் பாட்டி..

நான் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டால் 'இதுக்கு மேலே ஒரு சொக்கா போட்டுண்டு தானே வெளிலே போவே? என்று கேட்கும் பாட்டி..

'உனக்கு சிங்கப்பூருக்கு வண்டி சத்தம் எவ்வளவு ஆகும்?' என்று ஒவ்வோரு முறையும் தவறாமல் கேட்கும் பாட்டி..

என்னுடைய அம்மா சோபாவில் சரிசமமாக என் கணவருடன் உட்கார்ந்து பேசுவதால், 'மாப்பிள்ளை தங்கமானவர்' என்று புகழும் பாட்டி..

(கடைசி வரை பாட்டிக்கு தலைமுடி நரைக்கவே இல்லை! போட்டோ ஃபிப்ரவரியில் எடுத்தது.)

தன்யா இவ்வளவு வயசானவரை சிங்கையில் பார்த்ததில்லை. போன விடுமுறையின் பொழுது
செல்வராஜின் குழந்தைகளைப் போல் "அம்மா.. why is she so old?" என்றாள். "எல்லோருக்கும் வயசாகும் தன்யா. அம்மாவும் ஒரு நாள் பாட்டி மாதிரி ஆயிடுவேன்," என்றேன். "Then who will look after me?" என்றாள். அவரவர் கவலை அவரவருக்கு!

உடம்பில் வலுவிழந்து போனதால் இரண்டு வருடங்களாக எங்களை பார்க்கும் பொழுதெல்லாம் "நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கேன்? என்னை ஏன் பகவான் அழைச்சுக்க மாட்டேங்கிறான்?" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். வேதனைப்படுத்தும் கேள்வி. என்ன பதில் சொல்வது? கையைப் பிடித்துக் கொண்டும், ஏதோ பழைய விஷயங்கள் பேசியும் பேச்சை மாற்றுவேன்.

மிகவும் கஷ்டப்படாமல் போனதால், செய்தி கேட்டவுடன் கண்ணீர் வழிந்தாலும் ஒரு நிறைவு என்று தான் சொல்ல வேண்டும். போன விடுமுறை முடிந்து வந்த பொழுது என் கையில் 100 ரூபாய் திணித்து, "குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடு" என்று சொன்ன பாட்டியின் முகம் தான் கடைசி நினைவு.

Monday, August 08, 2005

விடியல் - சிறுகதை

குழந்தை வீறிட்டு அழுதது. அவள் திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். மணி இரவு 11:45. கண்கள் எரிந்தன. குழந்தையை வாரியணைத்து முதுகில் தட்ட ஆரம்பித்தாள்.

சாயந்திர நிகழ்ச்சிகள் ஞாபகம் வந்தன. ஏதோ ஒரு அல்ப விஷயத்திற்காக ஊரிலிருந்து வந்திருக்கும் மாமியாரிடம் சண்டை. அறிவுபூர்வமாக வந்த வாக்குவாதம் என்றால் சில நிமிடங்களில் வெற்றி, தோல்வி நிச்சயிக்கப்பட்டு அமைதி நிலவியிருக்கும். ஆனால் இரண்டு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். 'ஈகோ'க்கள் விஸ்வரூபமெடுத்ததால் சமாதானப் புறா பறக்க இடமே இல்லை. வழக்கம் போல் மாமனாரும், கணவரும் தலையிடவில்லை. 'உங்கள் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்' என்பது அவர்களது அணுகுமுறை. எல்லோரும் ஏதோ சாப்பிட்டேன் என்று பேர் பண்ணிவிட்டு படுத்து விட்டார்கள்.

குழந்தை 'சட்'டென்று அழுகையை நிறுத்த வேண்டுமே என்று மனம் பரபரத்தது. சப்தம் கேட்டு மாமியார் எழுந்து வந்து, குழந்தை அவரிடம் சமாதானம் அடைந்து விட்டால் அது ஒரு அடையாளத் தோல்வியாக இருக்குமே என்று பயம். மாமனாரின் இருமல் சப்தம் கேட்டது.

"அழுதையை நிறுத்தேண்டா. என் மானத்தை வாங்கிடாதே!' என்று சற்று சத்தமாக முணுமுணுத்தாள். தட்டலின் வேகத்தை அதிகரித்தாள்.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கணவன், "அம்மாவை வேணா கூப்பிடட்டுமா?" என்றான்.

'ஒண்ணும் வேண்டாம். நீங்க பேசாம படுங்க!' என்றபடி அறைக் கதவை மூடினாள்.

'எழுப்பினால் என்ன?' என்றது பகுத்தறிவு. பெங்களூரிலிருந்து கணவனுக்கு டெல்லிக்கு மாற்றல் வந்த பொழுது 'மொழி தெரியாமல் கைக் குழந்தையுடன் கஷ்டப்படுவாயே' என்று உதவி செய்யத்தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மாமனார் வேலையில் இருந்த பொழுது பல ஊர்களில் இருந்த அனுபவம். இருவரும் சரளமாக ஹிந்தி பேசுவார்கள்.

குழந்தையும் அவர்களிடம் ஒட்டிக் கொண்டான். தங்கள் உடல் சிரமத்தை பொருட்படுத்தாது அவனுடன் சமமாக விளையாடினார்கள். மாமானாரின் வேலையினால் வசதிகள் இல்லாத பல ஊர்களில் தன் ஒரே மகனை வளர்க்க பட்ட கஷ்டங்களைக் கூறியுள்ளார் மாமியார். இன்னும் பத்து நாட்களில் சென்னை திரும்பி விடுவார்கள். கணவனும் வேலை விஷயமாக வெளியூர் சென்று, குழந்தையும் இப்படி படுத்தினால் என்ன செய்வது என்ற பயம் தோன்றியது. "இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து விட்டு போங்கள்" என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வது? 'நாம தான் கொஞ்சம் விட்டு கொடுத்து, பெருந்தன்மையோடு நடந்து கொண்டால் என்ன?' என்று நினைத்துக் கொண்டாள்.

அழுகையின் தீவிரம் சற்றுக் குறைந்ததே தவிர நிற்கவில்லை. 'ஒருவேளை வயிற்று வலியா இருக்குமோ? இல்லே வேறேதாவது உடம்புக்கு....?' நாளைக்கு டாக்டரிடம் போகணும் என்றாலும் மாமியார் துணையோடு தான் போகணும். புது வீட்டில் இன்னும் சாமான்கள் கூட சரியாக எடுத்து வைக்காத நிலையில், உடல் அலைச்சலோடு இப்பொழுது மன உளைச்சல். லேசாக கண்ணீர் துளிர்த்தது.

"முருகா! நான் வயசானவங்க மனசு நோகும்படியா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடப்பா. என் குழந்தையை தண்டிச்சுடாதே. என்னாலே தாங்க முடியாது!" கந்தசஷ்டி சொல்ல ஆரம்பித்தாள். அழுகை ஒரு விதமான விசும்பலாக மாறி இருந்தது.

'அம்மா! ஸாரிம்மா! கொஞ்சம் படபடன்னு பேசிட்டேன். இவனுக்கு கொஞ்சம் 'கிரைப் வாட்டர்' கொடுத்து பார்க்கறீங்களா? ரொம்ப நேரமா அழறான். பயம்மா இருக்கு....' மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே கதவை திறக்கப் போனாள்.

'டக்'கென்று அழுகை நின்றது. ஒரே சீராக மூச்சு விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தான் குழந்தை. மணி 11:58. பதின்மூன்று மாதங்களாக தோன்றிய பதின்மூன்று நிமிடங்கள்!

காலையில் காப்பி போடுவதற்காக சமையலறையில் நுழைந்தாள்.

"குழந்தை ராத்திரி ரொம்ப அழுதான் போலிருக்கே", என்றார் மாமியார்.

"ம்ம்... கொஞ்சம் அழுதான். நான் தான் பத்தே நிமிஷத்துலே சமாதானப்படுத்திட்டேனே!" 'வெடுக்' கென்று வந்தது பதில்.

வெளியே மட்டும் தான் விடிந்திருந்தது.

(கல்கி - 12/12/99)

Friday, August 05, 2005

பெற்றோர்கள் எனும் கணவன் - மனைவி

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. "Do you think your parents engage in sex?" என்று ஒரு பிஸியான ரோட்டில் நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தன்னை தாண்டிச் சென்ற, டீன் ஏஜர்களாக தோற்றமளித்த ஆண்களையும், பெண்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். பலர் "No" என்று சொல்லிவிட்டு விரைந்தனர். சில "Yes" சொன்னவர்களும் செல்வதிலேயே குறியாக இருந்தனர். ஒரு சிலரே நின்று பேசினார்கள். அதில் ஒரு சம்பாஷணை:

நி.ஒ. கேள்வியை கேட்டார்.

17 வயது மதிக்கதக்க பையன்: No

நி. ஒ: ஏன்?

பையன்: Because they are too old

நி. ஒ: How old are they?

பையன்: 40 and 45

அதன் பிறகு 50 வயதிற்கு மேற்பட்ட தம்பதியர்களை பேட்டி கண்டு, தாம்பத்திய உறவு குறித்த ஒரு seminar பற்றி காண்பித்த பிறகு நிகழ்ச்சி முடிந்தது.

அந்த பையனின் பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு developed countryல் இருந்து கொண்டு இப்படி ஒரு awareness இல்லாமல் இருக்கிறார்களே என்று. சிங்கப்பூர் ஆசிய கலாச்சாரமும், western influencesசும் சேர்ந்த ஒரு கலவை என்பது தெரிந்ததே. உதாரணமாக பெரியவர்களை uncle, aunty என்று தான் கூப்பிடுவார்கள். இந்த first name basis எல்லாம் பொதுவாக கிடையாது. Public display of affection னும் அரிது. இது போன்ற காரணங்களால் இந்தப் பையன் அறிவிலியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே சென்ற பொழுது எங்கோ இடித்தது. யோசித்து பார்த்த பொழுது நான் இவனை விட பெரிய மரமண்டையாக இருந்திருக்கிறேன் என்று உறைத்தது.

அப்பொழுது எனக்கு 15 வயது. அண்ணாவும், நானும் ஹாலின் இரு மூலைகளில் உறங்குவோம். தனி அறையெல்லாம் கிடையாது. அப்பா, அம்மாவிற்கு ஒரு அறை, ஒரு கிச்சன் அவ்வளவு தான். அண்ணா என்னை விட 11 வயது பெரியவர். அவருக்கு திருமணம் நடந்தது. மாடியில் ஒரு தனி அறை கட்டி, அதை உபயோகித்தனர் அண்ணனும், அண்ணியும்.

ஹாலில் தனியாக படுத்துக் கொள்ள பயமாக இருக்கிறது என்று சொல்லி 7 வருடங்கள் (22 வயதாகும் வரை!) அம்மா/அப்பாவின் அறையில் நான் தூங்கியிருக்கிறேன் (ஆமாங்க, ஆமாம்!!). ஒரு வினாடி கூட"என்னடா அவர்களுக்கு ஒரு privacy வேண்டாமா?' என்று யோசித்ததே இல்லை. அவர்களும் ஒரு தடவை கூட "ஏன் எங்கள் அறையில் தூங்கி கழுத்தை அறுக்கிறாய்?' என்று கேட்டதாக ஞாபகம் இல்லை.

நம் அப்பா, அம்மாவை அந்த உறவை தவிர நாம் வேறு யாராகவாவது பார்த்திருக்கிறோமா? முக்கியமாக கணவன் மனைவியாக? மேலை நாட்டவர்களைப் போல் அவர்கள் publicஆக physical affection காண்பிக்காததால் நமக்கு அது உறைக்கவே இல்லையா? அல்லது நான் தான் இப்படி இருந்திருக்கிறேனா? அவர்களுக்கு privacy, space போன்ற விஷயங்கள் ஏன் மனதில் தோன்றவே இல்லை?

இன்று அவர்களுக்கு 67 மற்றும் 70 வயது. இந்த முறை இந்தியா போகும் பொழுது இந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி மன்னிப்பு கேட்க தைரியம் வருமா? சந்தேகம் தான்!

பின்குறிப்பு: இந்த விஷயத்தை எழுதுவதே கொஞ்சம் uncomfortableஆகத்தான் இருந்தது. ஆனால், அது தான் பிரச்சனையே என்பதாலும், இணைய நண்பர்கள் இதை ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததாலும் தைரியமாக எழுதிவிட்டேன்.